அசத்தல் ஆங்கில ஆசிரியரை பிரிய மறுத்த மாணவிகள்.. கண்ணீர் மல்க பாடலுடன் பிரியா விடை..!

கள்ளக்குறிச்சி அருகே பணி இட மாறுதலில் செல்லும் ஆங்கில ஆசிரியரை சூழ்ந்து கொண்டு மாணவ மாணவிகள் , பள்ளியை விட்டு செல்லக்கூடாது என்று தடுத்ததோடு,அவர் சொல்லித்தந்த ஆங்கிலப் பாடலை கண்ணீருடன் பாடி மாணவிகள் பிரியாவிடை தந்த  சம்பவமும் நடந்துள்ளது.

பள்ளியில் இருந்து மாற்றலாகி செல்லும் ஆசிரியரை பிரியமனமின்றி அவரை சூழ்ந்து கொண்டு அன்பு பொழியும் இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த வடதொரசலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நிகழ்ந்துள்ளது.

இந்த அரசு பள்ளியில் ஆங்கில பாட ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ஆனந்த கண்ணன். இவர் மாணவ மாணவிகளுக்காக கணினி தொழில்நுட்பத்துடன் இணைந்த கல்வி முறையின் மூலம் ஆங்கிலத்தை மிக எளிமையாக நடத்தி வந்ததால் பெரும் அன்பை பெற்றார். மேலும் கிராமத்திலிருந்து வரும் மாணவ மாணவிகளும் எளிமையாக ஆங்கிலம் பேச முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களையும் சரளமாக ஆங்கிலம் பேசவும் உரையாடவும் வைத்து அசத்தினார்

இந்நிலையில் புதன்கிழமை அந்த ஆசிரியருக்கு பணி மாறுதல் ஆணை வந்தது! இதனால் அங்கிருந்து அடுத்த பள்ளிக்கு செல்ல தயாராக இருந்தார் ஆங்கில ஆசிரியர் ஆனந்த கண்ணன். இதையறிந்த அப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு வெளியே செல்ல விடாமல் தடுத்துக் கொண்டு, வேண்டாம் என்று அழுதுகொண்டே கோரிக்கை வைத்தனர்.

உடனடியாக அங்கு வந்த கல்வி அதிகாரிகள் ஆசிரியர் பணி மாறுதலில் செல்வதால் உங்களைப் போன்ற மற்றப் பள்ளி மாணவர்களும் பயனடைய வேண்டும், எனவே அவரை வெளியே செல்ல அனுமதியுங்கள் என்று கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட மாணவ மாணவியர்கள் இறுதியாக அவர் எளிதாக ஆங்கிலம் படிக்கும் வகையில் சொல்லிக்கொடுத்த ஆங்கிலப் பாடலை கண்ணீருடன் பாடி வழி அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் ஆசிரியர் மீதான நன்றி உணர்ச்சியை காட்டுவதாக அமைந்தது. வடதொரசலூர் கிராம உயர்நிலைப் பள்ளியில் 2017 முதல் ஐந்து வருடங்களாக பணிபுரிந்து வரும் ஆசிரியர் ஆனந்த கண்ணன் , தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருது, மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணனின் மாநில நல்லாசிரியர் விருது களையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கற்றவருக்கு மட்டுமல்ல, நல்ல முறையில் கற்றுக் கொடுத்து இளைய தலைமுறையை தலை நிமிரச்செய்யும் ஆனந்த கண்ணன் போன்ற நல்ல ஆசான்களுக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு இருப்பதில் வியப்பில்லை..!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.