வெம்பக்கோட்டையில் முதல்கட்ட அகழாய்வு பணி தொடக்கம்… இந்த இடத்தின் சிறப்புகள் என்னென்ன?

தமிழகத்தில் கீழடி, சிவகளை, மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி உள்ளிட்ட 7 இடங்களில் இந்த ஆண்டில் புதிதாக அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பை வரலாற்று ஆய்வாளர்கள் பெரிதும் வரவேற்றனர்.

வெம்பக்கோட்டையில் நுண்கற்கருவிகள், சங்ககால மண்பாண்ட ஓடுகள், பெருங்கற்கால பண்பாட்டு எச்சங்கள் மற்றும் செப்பேடுகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் அமைந்த இக்கிராமத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பே தொல்லியல் அறிஞர் வேதாச்சலம் மற்றும் பாலச்சந்திரன் ஆகியோரால் தொல்லியல் சான்றுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அர்ச்சுனா நதி, அனுமன் நதி, குண்டாறு, தேவியாறு, மற்றும் வைப்பாறு ஆற்றங்கரையையொட்டி அமைந்துள்ள இடங்களில், கடைக்கற்காலத்தைச் சேர்ந்த நுண்கற்கருவிகள் இன்றளவும் கிடைத்து வருகின்றன. இவை கி.மு.4000 முதல் கி.மு.3000 ஆண்டுகள் வரை பழைமையானதாக இருக்குமென தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அகழாய்வு பணி

கிளிஞ்சல்களால் ஆன வளையல்கள் மற்றும் யானையின் கடைவாய்ப்பல் ஆகியவை புதைபடிம வடிவில் வெம்பக்கோட்டையில் கிடைத்துள்ளன. சங்கக் கால கறுப்பு-சிவப்பு மண்பாண்ட ஓடுகள் மற்றும் இரும்பு பொருள்கள் வெம்பக்கோட்டையைச் சுற்றியுள்ள மேடான பகுதிகளில் காணக்கிடைக்கின்றன. தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புடன் கூடிய மண்பாண்ட ஓடுகளும் கிடைத்துள்ளன. இதன் மூலம் இங்கு வாழ்ந்த தமிழ்ச் சமூக மக்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்துள்ளார்கள் என அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். ரோமானிய மண்பாண்ட ஓடுகளும் கிடைத்திருப்பதால் இங்கு வாழ்ந்த மக்கள் ரோமானியர்களோடு வாணிபத் தொடர்பு கொண்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

மேலும், 1574-ம் ஆண்டில் எழுதப்பட்ட செப்பேடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே இங்கு அகழாய்வு மேற்கொள்வதன் மூலம் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல் சான்றுகள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், வெம்பக்கோட்டையில் முதல்கட்ட அகழாய்வு பணிகளை தமிழகத் தொழில் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று மாலை தொடங்கி வைத்தார்.

அகழாய்வு பணி

தொடர்ந்து அவர், செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “தமிழர்களின் பெருமையையும், சிறப்பையும் வெளிக்கொணரும் வகையில் தமிழக அரசு தொல்லியல் கள ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. வெம்பக்கோட்டையில் கிடைக்கும் தொல்பொருள் மூலம் தமிழரின் தொன்மையான பண்பாட்டையும் கலாசாரத்தையும் வெளிக்கொண்டுவரப்படும். கிடைக்கும் பொருள்கள் அனைத்தையும் கால பகுப்பாய்வுக்கு அனுப்பி, அதன் உண்மையான கால அளவு கண்டறியப்பட்டு உலக அரங்கில் தமிழர்களின் தொன்மையை அரசு நிலைநிறுத்தும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி மற்றும் உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.