அரிசி 1 கிலோ ரூ. 448, பால் 1 லிட்டர் ரூ.263! ரத்த கண்ணீரில் இலங்கை…

உலக நாடுகள் கொரோனா பரவல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டன. 2 வருடங்களாக பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த நாடுகளுக்கு அடுத்த அதிர்ச்சியாக உக்ரைன்- ரஷ்யா போர் அமைந்தது. ஏற்கனவே எண்ணெய் இறக்குமதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் ரூ.40 வரை உயரும் அபாயம் ஏற்பட்டது. 

இந்தியாவில் இப்படி இருக்க, 2007 முதல் அடுத்தடுத்த பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வந்த இலங்கை நாடு தற்போது நெருக்கடியின் உச்சத்தில் தவிக்கிறது. அன்னியச் செலாவணி பற்றாக்குறையால் எரிபொருள் இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், இலங்கையில் ஏற்பட்ட எரிபொருள் பற்றாக்குறையால் மின் உற்பத்தி 50 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டது. 

இதனால் மின் விநியோகம் நாள் ஒன்றுக்கு 7.30 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா துறையே முக்கிய வருமான வழியாக இருந்து வந்த இலங்கையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா தளங்கள் மூடப்பட்டன. 

மேலும் படிக்க | ரஷ்யா – உக்ரைன் போர்: கிவ் நகரில் மார்ச் 17ம் தேதி வரை ஊரங்கு உத்தரவு அமல்

வெளிநாட்டினருக்கும் சுற்றுலா வரும் சூழல் இல்லாமல் போய்விட்டது. இதனால் நாட்டின் வருமானம் வெகுவாக குறைந்து தற்போது அதன் பலனாக பொது மக்களிடம் அத்தியாவசிய பொருட்களுக்கு விலை உயர்வு விதிக்கப்பட்டுள்ளது.  அதாவது, சுமார் 50 சதவீதம் விலை உயர்வு விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. 

ஏற்கெனவே அத்தியாவசியமற்றவை என்று 367 பொருட்கள் இறக்குமதிக்கு இலங்கை அரசு தடை விதித்துவிட்டது. இதில் பால் மற்றும் பால் உற்பத்திப் பொருட்கள், பழங்கள் போன்றவையும் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை தருகிறது. இலங்கை மதிப்பில், பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.283 என்றும், டீசல் ஒரு லிட்டர் ரூ.176 க்கு விற்பனையாகிறது. 

இதனால், பஸ் கட்டணத்தை அதிகரிக்கப் போவதாக பஸ் சங்கங்கள் எச்சரித்திருக்கின்றன. சமையல் கேஸ் விலை உயர்வால், சிற்றுண்டி விடுதிகள் மூடப்படுவதாக அதன் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருக்கிறது.

ஒரு முட்டையின் விலை ரூ. 28 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், ஒரு ஆப்பிள் ரூ.150, பேரீச்சம்பழம் கிலோ ரூ.900-ஐ தொட்டிருக்கிறது. அரிசி ஒரு கிலோவின் விலை ரூ. 448, பால் லிட்டருக்கு ரூ. 263 ஆக விற்பனையாகிறது. 

தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.1 லட்சத்து 41 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்திய ரூபாய் ஒன்றுக்கு, இலங்கை ரூபா 3.3 சமம் என்பது குறிப்பிடதக்கது. அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு ரூ.260 ஆக சரிந்துள்ளது. இதனால் இறக்குமதி, ஏற்றுமதியில் மிகப்பெரிய சரிவு காணப்படும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். 

மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.