ஆணாய் சென்று பெண்ணாய் திரும்பியவருக்கு அரசு வேலை; திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு குவியும் பாராட்டு

தாட்சாயிணி என்ற பெண்ணுக்கு கடந்த 25ம் தேதி அன்று பணி நியமன ஆணையை வழங்கி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜான் வர்கீஸ். இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதோடு பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்.

6 ஆண்டுகளுக்கு முன்பு, 2015-ல் தன்னுடைய வேலையை விட்டு, சொல்லிக் கொள்ளாமல் சென்ற ஒரு நபருக்கு மீண்டும் அதே அரசு வேலையை வழங்குவது ஒன்றும் சாதாரண நிகழ்வு அல்ல. ஆனால் இந்த விவகாரம் கொஞ்சம் வித்தியாசமானது. 2015ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் சந்தானராஜ் என்பவர் பஞ்சாயத்து ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தார். திடீரென்று ஒரு நாள் தன்னுடைய பணிக்கு வரவில்லை. நாட்கள் வாரங்கள் ஆனது, வாரங்கள் மாதங்களாகி வருடங்கள் ஆனது.ஆனால் அவர் எங்கே போனார் என்ன ஆனார் என்பது யாருக்கும் தெரியவில்லை.

7 ஆண்டுகளுக்கு பிறகு அதே பணியை வழங்கும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றதா என்ற ஒரு விண்ணப்பக் கடிதத்தை சந்தானராஜ் எழுதி, ஏன் வேலையை தன்னால் தொடரமுடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். “2106ம் ஆண்டு தான் மாற்று பாலின சிகிச்சை செய்து கொள்வதற்காக நான் பணியில் இருந்து வெளியேறினேன். அந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல் அளவிலும் மன அளவிலும் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக என்னால் என்னுடைய பணியை தொடர இயலவில்லை. தற்போது மீண்டும் எனக்கு இந்த பணி கிடைக்குமா” என்று தாட்சாயிணியாக கடிதம் எழுதி எழுதியிருந்தார்.

சின்னச் சின்ன விசயங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்று குறிப்பிட்டு, கருணை மற்றும் இந்த விவகாரத்தின் பாலினம் சார் நுணுக்கமான உணர்வுகளை கருத்தில் கொண்டு அவருக்கு மீண்டும் வேலை வழங்கப்பட்டுள்ளது என்று ட்வீட் செய்துள்ளார் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்.

“ மனதால், உணர்வுகளால் ஓர் ஆண் அல்ல என்று 15-16 வயதிலேயே எனக்கு தெரிந்துவிட்டது. 12ம் வகுப்பு முடித்தவுடன் நான் இங்கே பணிக்கே சேர்ந்தேன். ஆனால் உடல் மற்றும் மனரீதியாக ஏற்ற மாற்றங்களை தாங்கிக் கொள்ள இயலாமல் நான் என்னுடைய வீட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டது” என்று தாட்சாயிணி கூறியதாக இந்து நாளிதழ் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

5 ஆண்டுகள் தன்னுடைய மகனை இழந்து தவித்த அவரின் அம்மா குப்பு 2020ம் ஆண்டு தாட்சாயிணியை தேடி கண்டுபிடித்து வந்துவிட்டார். எதுவானாலும் சரி வீட்டுக்கு வா என்று கூறி முழுமையான ஆதரவை தன்னுடைய மகளுக்கு வழங்கியுள்ளார் குப்பு. இதன் பிறகு முதல்வரின் சிறப்பு பிரிவுக்கு தன்னுடைய நிலைமையை விளக்கிக் கூறி கடிதம் ஒன்றை எழுதி தன்னுடைய பழைய பணியை மறுபடியும் வழங்குமாறு கூறியுள்ளார். சந்தானகுமாராக சென்று இன்று தாட்சாயிணியாக கொடுவேலி பஞ்சாயத்தில் முக்கிய பொறுப்பில் மீண்டும் தன்னுடைய பணியை துவங்கியுள்ளார் இந்த நபர்.

இந்த விவகாரத்தில் தாட்சாயிணியின் நிலையை கருத்தில் கொண்டு மிக சரியான முடிவை தக்க சமயத்தில் எடுத்த ஆட்சியருக்கு பலரும் தங்களின் பாராட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.