“சபாஷ் சரியான தண்டனை… ஒருவரின் குறையை நகைச்சுவைக்கான கருப்பொருளாக்காதீர்கள்'' – ராமதாஸ்

ஆஸ்கர் மேடையில் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டை கிறிஸ் ராக் நகைச்சுவை பாணியில் கேலி செய்து பேசினார். அதைக் கேட்ட வில் ஸ்மித், மேடையில் ஏறி கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கிறார். அதில், “ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை வழங்குவதற்காக கிரிஸ் ராக் என்ற நகைச்சுவை நடிகர் மேடையேறினார்.

ராமதாஸ்

அப்போது நகைச்சுவை செய்வதாக நினைத்துக் கொண்டு, நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பின்கெட்டின் தலைமுடி பிரச்னையை கிண்டல் செய்தார். ஜடாவுக்கு alopecia என்ற முடி உதிரும் நோய் இருக்கிறது. கிரிஸ்ராக்கின் நகைச்சுவைக்கு பெரிய வரவேற்பு இல்லை. வில்ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்படுவதால் அதை வாங்குவதற்காக வந்திருந்தார். கிரிஸ் ராக்கின் நகைச்சுவையைக் கேட்டு வில்ஸ்மித் ஆரம்பத்தில் சிறிது சிரித்தார். ஆனால், அருகிலிருந்து அவர் மனைவியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிவதைப் பார்த்து கொதித்துப் போனார்.

வில்ஸ்மித்

மேடையில் உடனடியாக ஏறிய வில்ஸ்மித் கிரிஸ்ராக்கின் கன்னத்தில் பளார் என அறைந்திருக்கிறார். அவை நாகரிகத்தையெல்லாம் விடுங்கள். வில் ஸ்மித்தின் செயல் மிகவும் சரியானது. கிரிஸ்ராக்கின் செயலுக்கு உடனடியாக சரியான தண்டனை கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல…. ஜடாவை தான் கிண்டல் செய்ததில் உள்நோக்கமில்லை என்று கிரிஸ்ராக் விளக்கமளித்த போது அதை ஸ்மித் ரசிக்கவில்லை. அப்போதும் கூட என் மனைவியின் பெயரை உச்சரிக்கக்கூட உனக்குத் தகுதியில்லை என்று பொங்கியிருக்கிறார். அவர் உண்மையான கதாநாயகன். இந்த நிகழ்வு இரண்டு உண்மைகளை சொல்லியிருக்கிறது. ஒருவரின் ஊனத்தை,(body shaming) குறையை நகைச்சுவைக்கான கருப்பொருளாக்காதீர்கள். மனைவியையும், அவர் உணர்வையும் மதித்தால் உலகம் உங்களை மதிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.