ஒருதலைக்காதலால் விபரீதம்: இளம்பெண்ணின் வீட்டில் புகுந்து எலக்ட்ரீசியன் தீக்குளித்து தற்கொலை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே ஒருதலையாய் காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த எலக்ட்ரீசியன் இளம் பெண்ணின் வீட்டில் கதவை உடைத்து உள்ளே புகுந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள நாதாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரத்னேஷ் (42). எலக்ட்ரீசியன். தனது வீட்டின் அருகில் உள்ள ஒரு இளம்பெண்ணை ஒருதலையாய் காதலித்து வந்துள்ளார். அவரை திருமணம் செய்ய விரும்பியதாகவும் தெரிகிறது. ஆனால் இளம்பெண்ணின் வீட்டில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இளம் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இது குறித்து அறிந்த ரத்னேஷ் மிகுந்த மன வேதனை அடைந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் கையில் பெட்ரோல் பாட்டிலுடன் ரத்னேஷ் இளம்பெண் வீட்டிற்கு சென்றுள்ளார். சுவர் ஏறி உள்ளே குதித்தவர், ஏணிப்படி வழியாக வீட்டின் முதல் மாடிக்கு சென்றார். பின்னர் கதவை உடைத்து உள்ளே புகுந்த ரத்னேஷ், இளம்பெண் தூங்கிக் கொண்டு இருந்த அறைக்குள் அத்துமீறி சென்று உள்ளார். இந்த நேரத்தில் சத்தம் கேட்டு இளம்பெண் எழுந்து பார்த்துள்ளார். அதைத் தொடர்ந்து இளம்பெண்ணின் அண்ணன், அவரது மனைவி ஆகியோரும் திடுக்கிட்டு எழுந்தனர். அப்போது ரத்னேஷ் கையில் வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்தார். உடல் முழுவதும் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே ரத்தேஷ் பரிதாபமாக இறந்தார். தீயை அணைக்க முயற்சித்த இளம்பெண், அண்ணன், அவரது மனைவி ஆகியோரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், காயமடைந்த 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.ரத்னேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தான் காதலித்த இளம்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை கொன்று தானும் தீக்குளித்து தற்கொலை செய்யும் திட்டத்துடன் ரத்னேஷ் வந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.