ஒரு தலைவருக்கான உயரிய பண்புகளுடன் வாழ்ந்து காட்டியவர் அப்துல்கலாம்: கலாமுடன் இணைந்து பணியாற்றிய பாதுகாப்புத் துறை விஞ்ஞானிகள் பெருமிதம்

சென்னை: இந்திய குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் 6-ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் ஆன்லைன் சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில், மூத்த பாதுகாப்புத் துறை விஞ்ஞானியும் வேல்ஸ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான டாக்டர் கே.சேகர், ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு ஆகியோர் பங்கேற்று கலந்துரையாடினர். இந்தக் கலந்துரையாடலில் அவர்கள் பேசியதாவது:

டாக்டர் கே.சேகர்: 1984-ம் ஆண்டில் நான் பணியாற்றிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகத்தின் மூலம்சொந்தமாக ஏவுகணைக்கான திரவ எரிபொருளில் இயங்கும் 30 டன் இன்ஜினைத் தயாரித்திருந்தோம். அதற்காக நடைபெற்ற பாராட்டுவிழா கூட்டத்தில் பங்கேற்க கலாம் வந்திருந்தார். அந்தப் பணிகளில் ஈடுபட்ட அனைவரையும் பாராட்டிய கலாம், ‘ஏவுகணைக்கான திரவ எரிபொருளில் இயங்கும் 60 டன் இன்ஜினை உங்களால் பரிசோதிக்க முடி யுமா?’ என்று கேட்டார்.

எதையும் தொலைநோக்குப் பார்வையுடன் பார்ப்பதும், எல்லோரையும் அரவணைத்துக் கொண்டு செயல்படுவதும் கலாமின் குணநலன்களாக இருந்தன.

அக்னி முதல் ஏவுகணை பரிசோதனையின்போது, அதனைப் பார்வையிட ஒரு விவிஐபி வந்தபோது, எங்களது உயரதிகாரியாக இருந்த கலாமிடம், 15 மீட்டர் தூரத்தில் அந்த விவிஐபி வரும் வாகனத்தை நிறுத்திவிட வேண்டுமென்று, அதன் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த நான் சொன்னேன்.

நம் உயரதிகாரியிடம் இப்படி சொல்கிறோமே என்கிற சிறு தயக்கம் என்னிடமிருந்தது. ஆனாலும் நான் சொன்ன கட்டுப்பாட்டு விதிகளை மதித்து நடந்தவர் கலாம். அந்த விஷன் முழுமையான இலக்கினை அடைய எடுத்துக்கொண்ட ஏழரை நிமிடங்கள் வரை அதன் இயக்கத்தை உற்றுக் கவனித்த பின்னரே கலாம் மகிழ்ச்சியுடன் பாராட்டினார். ஒரு தலைவர் என்பவர், மற்றவர்களை ஊக்குவிப்பதோடு, தோல்வி வரும்போது ஆதரவாகவும் இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணமாக வாழ்ந்து காட்டியவர் அப்துல்கலாம்.

டாக்டர் வி.டில்லிபாபு: இந்தியாவில் திரவ எரிபொருள் இன்ஜின் தொழில்நுட்பத்தில் நாம் தன்னிறைவு அடையமுடியுமென்று உறுதியாக நம்பியதோடு, அதை நிகழ்த்தியும் காட்டிய பெருமைக்குரியவர் அப்துல்கலாம். 1989-ம் ஆண்டில் தேசமே எதிர்பார்த்த அக்னி ஏவுகணை முதல் கட்ட சோதனை முயற்சி, பல தொழில்நுட்பத் தடைகளால் பலமுறை தள்ளிவைக்கப்பட்ட நிலையிலும், மன உறுதியுடனும் நள்ளிரவிலும் சக விஞ்ஞானிகளுடன் உடனிருந்து பணியாற்றி வெற்றிகரமாக விண்ணில் செலுத்திக் காட்டியவர். நம் தேச எல்லைப் பகுதிகளில், பனிப் பிரதேசங்களில் மட்காத மனிதக் கழிவின் மூலமாக கிருமிகள் பரவி, ராணுவ வீரர்கள் பாதிக்கப்படாமலிருக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ‘உயிரி கழிவறைகள்’ தொழில்நுட்பத்தை, தேசமெங்கும் விரிவாக்கியதில் கலாமின் பங்கு முக்கியமானது.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

இந்த நிகழ்வினை ‘இந்து தமிழ்திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் நெறிப்படுத்தினார். இதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான விடைகளை அனுப்பும் 25 பார்வையாளர்களுக்கு ‘முதல்மொழி அறிவியல் தமிழ் அமைப்பு’சார்பில் ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு எழுதிய புத்தகங்கள் பரிசாக வழங்கப்படவுள்ளன. இந்த நிகழ்வை https://www.htamil.org/00399 என்ற லிங்க்கில் காணலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.