மூன்றாவது திரைக்கதை | கதாபாத்திரம் | புத்தம்புது காப்பி

TITLE VOICE OVER

அன்பார்ந்த வணக்கங்கள் !

விளையாட்டாக தொடங்கிய இந்த புத்தம் புது காப்பி தொடர், விறுவிறுவென்று வேகமாக அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் என்பது, நானே எதிர்பார்க்காத ஒன்று. ஒருவேளை சரியானதொரு வாய்ப்புக்காக ஏங்கி தவித்திருந்த என் உள்ளுணர்வின் வெளிப்பாடாக கூட இது இருக்கலாம்.

இந்த மூன்றாவது திரைக்கதையை, இதற்கு முந்தைய இரு திரைக்கதைகளில் இருந்து சற்று வேறுபட்டேஎழுதி இருக்கிறேன். தொடரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும் அல்லவா !

உலக திரைக்கதை பட்டியல்களில் Non-linear screenplay என்கிற, நேர்கோட்டில் சொல்லப்படாத திரைக்கதைகளுக்கென்று தனி ஒரு இடம் உண்டு. அந்த வகையில் எனக்குத் தெரிந்த அளவில், நானும் இங்கு ஒரு Non-linear திரைக்கதை எழுதி இருக்கிறேன். மீண்டும் ஒரு எளிய பழைய கதையின் அடித்தளத்தின் மேல்.

நிச்சயம் இந்த திரைக்கதை, உங்கள் சுவாரசியத்தை கூட்டும் என்று நம்பிக்கை கொள்கிறேன்.

இன்னும் ஒருபடி மேலே போய், ஒரு சோதனை முயற்சியாக, இந்த திரைக்கதையின் காட்சிகளை, மறு வரிசைப்படுத்த கூடியவையாக (Possible to Reorder) எழுதியிருக்கிறேன்.

அதாவது இந்தத் திரைக்கதையில் மொத்தம் 6 காட்சிகள். இந்த 6 காட்சிகளில் முதல் 4 காட்சிகளை, நீங்கள் எந்த வரிசையில் வேண்டுமானாலும் மாற்றிப் படித்துக் கொள்ளலாம். அதனால் கதையின் போக்கோ, சுவாரசியமோ, கெட்டு விடாது. மாறாக ஒவ்வொரு வரிசையிலும் அது உங்களுக்கு புது அனுபவத்தை தரும். இந்த சிறிய திரைக்கதையில் காட்சி 5, Pre-Climax காட்சியாகவும், காட்சி 6, Climax ஆகவும் எழுதப்பட்டு இருப்பதால், கதையின் சுவாரசியம் கருதி, அந்த இரண்டு காட்சிகளின் வரிசைகளை மட்டும் மாற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இது ஒரு Non-linear திரைக்கதை என்பதால், இரண்டு வேறு விதமான காலகட்டங்களில் நடப்பது போல், திரைக்கதை எழுதப்பட்டு உள்ளது. இதை நான் திரைக்கதை வடிவத்திலே கதையின் நிகழ்காலம், கதையின் கடந்த காலம் என்று இரு வடிவங்களில் குறிப்பிட்டுள்ளேன்.

கதையின் நிகழ்காலம் என்பது சுமார் 4000 வருடங்களுக்கு முன், கால நேர்கோட்டில் குறிக்க வேண்டும் என்றால், “மனித நாகரீகங்களின் ஆரம்பப்புள்ளி” என்று வேண்டுமானால் குறித்துக் கொள்ளலாம்.

கதையின் கடந்த காலம் என்பது அதில் இருந்து 40 ஆண்டுகளுக்கு முன்.

வாசித்து மகிழுங்கள் ! திரைக்”கதை” பேசுங்கள் !

Scene 1 (கதையின் நிகழ்காலம்)

(காட்டுவாசியில் இருந்து குடிசை கட்டி குடில் போட்டு வாழத் தொடங்கியிருந்த மக்களின் நிலப்பரப்பில், அந்தக் கூட்டத்தின் தலைவன் குடிலிலே, ஒரு நள்ளிரவில்…

அந்த இரண்டடுக்கு குடிலின் உச்சியிலிருந்து இரண்டு திருடர்கள் கீழே குதிக்கிறார்கள். அவர்கள் சில பொருட்களை எடுத்துக்கொண்டு ஓடுகிறார்கள். சத்தம் கேட்ட அந்த கூட்டத்தில் சில பேர் அவர்களை

துரத்துகிறார்கள். வழியில் கல் தடுக்கி தடுமாறிய திருடன் ஒருவன் தன் இடம் இருந்த பானையை கீழே போட்டு உடைத்து விடுகிறான். ஆனாலும் எழுந்து ஓடிவிடுகிறான்.

திருடர்களை துரத்தி வந்தவர்கள் அந்த பானை உடைந்ததைப் பார்த்ததும் உறைந்து போய் அங்கேயே நின்று விடுகிறார்கள் திருடர்களைப் பிடிக்க கூட அவர்கள் முற்படவில்லை.

தகவல் தெரிந்த மற்றவர்களும் அங்கு வந்து சேருகிறார்கள். அந்தக் கூட்டத்திலே அனைவர் முகத்திலும் ஓர் இனம் புரியாத சோகம் அதில் சிலர் பேசிக் கொள்கிறார்கள்)

மக்களில் ஒருவன் 1 (கவலையுடன்) : நம் கூட்டம் இவ்வளவு பெரியதாக வளர்வதற்கு ஆதாரப்புள்ளியே இந்த பானை தானே ! இந்த திருடர்கள் செய்த வேலையால் இப்படி எல்லாம் வீணாகிப் போய் விட்டது.

மக்களில் ஒருவன் 2(விரக்தியுடன்): ஏதேதோ மூலையிலிருந்து பசி என்றும் பட்டினி என்றும் வந்தவர்களுக்கெல்லாம், “இல்லை” என்று சொல்லாமல் அள்ளி அள்ளி நாம் கொடுக்க, நமக்கு உதவிய பானை இது. தலைவரின் தவ வலிமைக்கு இயற்கையும் இறைவனும் கொடுத்த பரிசு அல்லவா இது ! இனி இதுபோல் ஒரு அரிய பொருளை நாம் எங்கிருந்து பெறுவோம் ?

(அப்போது கூட்டத்தை விலக்கிக் கொண்டு, அவர்களின் தலைவன் உள்ளே நுழைகிறான்.)

மக்களில் ஒருவன் 1 (கோபமாக) : இது நிச்சயம், நம் கூட்டத்தின் வளர்ச்சியில் பொறாமை கொண்ட கயவர்களின் வேலையாகத்தான் இருக்கவேண்டும் தலைவரே !

(தலைவன் முகத்திலும், அந்த இழப்பிற்கான கவலையும், குழப்பமும், அதிர்ச்சியும் குடிகொண்டிருந்தது.)

மக்களில் ஒருவன் 3 (கவலையுடன்): என்ன செய்யப்போகிறோம் தலைவரே ! நாளுக்கு நாள் நம்மைத் தேடி, “நாம் வாழ வைப்போம்” என்று வரும் மக்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. இந்த நிலையில் நமக்கு இருந்த மிகப்பெரிய ஆதாரத்தையும் நாம் இழந்திருக்கிறோம். தாங்கள் தான் எங்களுக்கு இப்போது வழிகாட்ட வேண்டும்.

(ஒரு சிறிய யோசனைக்கு பிறகு தலைவன் ஆழமாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டான்.)

தலைவன் (தீர்க்கமாக) : மக்கள் யாரும்

இதுகுறித்து கவலையும்,பயமும் கொள்ளத் தேவையில்லை. நாற்பது வருடங்களுக்கு முன் நமக்கு வழிகாட்டிய இயற்கையே, இந்த முறையும் நமக்கு வழிகாட்டும். எனக்கு சற்று அவகாசம் கொடுங்கள் இதற்கான தீர்வை விரைவில் உங்களுக்கு அறிவிக்கிறேன்.

(வணங்கி விட்டு தன் குடிலை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறான் தலைவன்.)

Screenplay

Scene 2 (கதையின் கடந்த காலம்)

(ஊர் என்ற கட்டமைப்புக்குள் வராமல் குடிசைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த காலகட்டம் அது. ஒரு குடிசையின் வாசலில் ஒரு பானை ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது அதிலிருந்த தண்ணீரை காக்கை ஒன்று குடித்துக் கொண்டிருக்கிறது. அந்த குடிசையிலிருந்து தலைவன் வெளியே வருகிறான். அவன் அப்போது தலைவன் இல்லை. அந்தக் கூட்டத்தில் ஒருத்தனே.

ஓடிவந்து காக்கையை விரட்டி விடுகிறான். சுற்றியும் தன் மனைவியை தேடுகிறான். அவன் மனைவி சற்று தூரத்திலே ஒரு மாமரத்தின் அடியில் நின்று கொண்டிருக்கிறாள்)

தலைவன் (சத்தமாக மனைவியை நோக்கி) : உன்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன் “ஆற்றிலிருந்து நீர் எடுத்து வந்தால்

அதை பத்திரமாக குடிசைக்குள் வை” என்று. இப்போது பார் ! அந்த காகம் இந்த தண்ணீரை அசுத்தப் படுத்தி விட்டது. மீண்டும் போய் தண்ணீர் எடுத்து வர வேண்டும்.

தலைவனின் மனைவி : ஆனால் நான் இன்னும் ஆற்றுக்கு தண்ணீர் எடுக்க போகவே இல்லையே !

தலைவன் : அப்படி என்றால், அது பழைய தண்ணீரா சரி !

தலைவனின் மனைவி : அந்தப் பானையை அப்படியே இங்கே கொண்டு வாருங்கள். இந்த மரத்திலே கொஞ்சம் பழங்கள் இருக்கின்றன அதை எடுத்துச் செல்வதற்கு வசதியாக இருக்கும்.

(பானையில் இருந்த தண்ணீரை எடுத்து கீழே ஊற்றி விட்டு பானையை எடுத்துக் கொண்டு மரத்தடிக்கு செல்கிறான். அங்கிருக்கும் சில பழங்களைப் பறித்து அதில் போட்டு எடுத்து வருகிறார்கள்.

அங்குதான் ஒரு அதிசயம் நடந்தது. அவர்கள் குடிசைக்குள் போய் தான் அதை கவனித்தார்கள். அவர்கள் போட்டது வெறும் சில மாம்பழங்கள் தான் ஆனால் அங்கே பானை நிறைய மாம்பழங்கள் இருந்தது. அவர்களாலேயே அவர்கள் கண்களை நம்ப முடியவில்லை.

அந்த நொடி தலைவனின் ஆறாம் அறிவில் ஆயிரம் கேள்விகள் உதித்தது.

நீண்ட நாட்களாக இந்த பானையை பயன்படுத்தி வருகிறோம். ஒருபோதும் இப்படி ஒரு அதிசயம் நிகழ்ந்தது இல்லை. இன்று மட்டும் எப்படி ?

மொத்த பானையையும் குப்புறக் கமுத்திவிட்டு, இப்போது மீண்டும் சில மாம்பழங்களை எடுத்து, அந்த பானைக்குள் போட்டான் தலைவன். அவர்களும் நெடு நேரம் உட்கார்ந்து பார்த்தார்கள். ஆனால் இந்த முறை அந்த அதிசயம் நிகழ வில்லை.

இது இன்னும் தலைவனை குழப்பம் ஆக்கியது. )

FADE OUT

Scene 3 (கதையின் நிகழ்காலம்)

(பானை உடைந்த நாள் இரவு.கண்களை மூடி தலைவன் நினைவுகளில் மூழ்கி இருந்தான். அங்கு வந்த அவன் மனைவி குரலை சற்று கனைத்துக் கொண்டு பேச தொடங்கினாள்.)

தலைவனின் மனைவி : நீங்கள் வரச்சொன்ன சிலர் உங்களுக்காக உருக்காலையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தலைவன் : சரி நான் போய் பார்த்துக் கொள்கிறேன்.

Scene 4 (கதையின் நிகழ்காலம்)

(பானை உடைந்த மறுநாள் காலை…

மக்கள் அனைவரும் தலைவனின் குடில் முன் குழுமி இருக்கிறார்கள்.

தலைவன் வெளியே வந்து அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு பேசத் தொடங்குகிறான்.)

தலைவன் : நம்மால் அமைக்கப்பட்ட இந்த ஊர் எனும் கட்டமைப்பில் இயற்கையும் இறைவனும் நம் பாதுகாவலர்கள். அவர்கள் கொடுத்த அந்த அதிசய பானையானது இன்றுவரை நம் உணவுத்தேவையை பூர்த்தி செய்து, நம்மை பசி, பட்டினி என்னும் நோய் தீண்டாமல் பார்த்துக் கொண்டது. ஆனால் இன்றோ அது நம்மிடம் இல்லை. ஆனால் இறைவனும், இயற்கையும் நமக்காக இருக்கிறார்கள். அவர்கள் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக, நான் ஒரு முடிவு எடுத்துள்ளேன். இன்று நம்மிடம் இருக்கும் உலோக அறிவு கொண்டு, அவ்வளவு எளிதில் உடையாத, ஒரு பாத்திரத்தை நாங்கள் தயார் செய்துள்ளோம்.

இதோ அது உங்கள் பார்வைக்கு !

(குடிசைக்குள் இருந்து ஒரு உலோக பாத்திரத்தை எடுத்து வருகிறார்கள்.)

தலைவன் : இந்தப் பாத்திரத்தை இறைவனையும், இயற்கையையும் வேண்டிக்கொண்டு, நாம் இன்று இரவு பூசையில் வைப்போம்.நாளை காலை அனைவருக்கும் உணவு தயாரிக்க, அந்த பாத்திரத்தை பயன்படுத்துவோம். அதிசயம் நிகழ்கிறதா என்று பார்ப்போம்! இயற்கை நம்மை காக்க வேண்டும் என்று முடிவு செய்து இருந்தால், நிச்சயம் அந்த அதிசய சக்தியை, இந்தப் பாத்திரத்துக்கும் தரும் என்று நான் நம்புகிறேன்.

(அனைவரும் “ஆமாம் தரும்! ஆமாம் தரும்!“ என்று சத்தமாக குரல்கொடுத்து தலைவனை உற்சாகப்படுத்தினார்கள்.)

Scene 5 (கதையின் கடந்த காலம்)

(தக்க காட்சிகளுடன் பின்னனிக் குரலில்: பல தொடர் கேள்விகளை தனக்குத் தானே கேட்டுக் கொண்ட பிறகு, ஒருவாறாக, தலைவன் ஒரு முடிவுக்கு வந்திருந்தான். அன்றைய நாள் காலையில் தான் அந்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. அவன் மனைவி சொன்னபடி, அந்தப் பானை கிட்டத்தட்ட, வெறும் பானையாகத்தான் வெளியில் வைக்கப்பட்டு இருந்திருக்கிறது. ஆனால் இவன் பார்க்கும் போது, அது நிறைய தண்ணீர் வழிந்து, அதை அந்த காகம் குடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தான்.

வெளியேதான் ஏதோ ஒரு அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. இதை மனதில் கொண்டு, அவன் மறுநாள் அதேபோல், வெறும் பானையை வைக்க முடிவு செய்தான். மறுநாள் மாலை வரை அவன் உட்கார்ந்து பார்த்தும், எந்த வித அதிசயமும் நிகழவில்லை.

மீண்டும் பல கேள்விகள் ! இந்த முறை அவன் மனைவி சொன்னாள் “ஏன் ! கொஞ்சம் தண்ணீர் உள்ள பானையை வைக்க கூடாது. நான் அவ்வாறு தான் அன்று வைத்திருந்தேன் “ என்று. மறுநாள் அதையும் செய்தான் தலைவன். இன்றும்கூட இன்னும் சற்று தூரத்தில் உட்கார்ந்து கொண்டு கவனித்துக்கொண்டிருந்தான்.

அப்போதுதான் அது நிகழ்ந்தது. அந்தக் காக்கை அதுதான் வந்து பானையில் ஏதோ தேடியது. நிச்சயம் ! தண்ணீர் குடிக்க தான் முயற்சி செய்திருக்கவேண்டும். தண்ணீர் எட்டாத காரணத்தினால், திடீரென்று அது எங்கோ பறந்து சென்றது. மீண்டும் வந்தது. அது பானைக்குள் ஏதோ போட்டது.

மறுபடியும் பறந்து சென்றது ! வந்தது ! பானைக்குள் ஏதோ போட்டது !

அவ்வளவுதான் தண்ணீர், பானையில் இருந்து நிரம்பி வழிய ஆரம்பித்து விட்டது ! இப்போது அது தண்ணீரை குடிக்க ஆரம்பித்து விட்டது !

தலைவனுக்கு அவ்வளவு ஆச்சரியம் ! வெறும் இரண்டே இரண்டு சிறு கற்களை மட்டும் போட்டு, எப்படி அவ்வளவு அதிக தண்ணீரை அது கொண்டுவந்தது !

மறுநாளும் முயற்சித்தான் தலைவன். காக்கையும் அதையே செய்தது. ஆனால் இந்த முறை அது எங்கே பறந்து செல்கிறது, என்பதை அதை பின்தொடர்ந்து கவனித்தான். காக்கை தன் அருகே இருந்த வேற எந்த கற்களையும் எடுக்கவில்லை அது நேராக ஒரு குறிப்பிட்ட பாறைக்கு பறந்து சென்றது. அந்த பாறையில் இருந்த, சிறு சிறு கற்களை மட்டுமே அது கொண்டு வந்து, இங்கு போட்டது. அந்த பாறையும் சற்று வித்தியாசமான வண்ணத்தில், சற்று வேறுபட்டு இருந்தது.

தலைவனுக்கு மெல்ல மெல்ல எல்லாம் புரிய ஆரம்பித்தது. அந்த பாறையில் இருக்கும் ஏதோ ஒரு தனிமத்திற்கு இந்த சக்தி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டான். மனிதர்களால் உணர முடியாத இந்த சக்தியை, இந்த பறவை உணர்ந்திருக்கிறது.

நல்லவேளை அந்தப் பாறை இருக்கும் இடத்தில் அதிக மனித நடமாட்டம் இல்லை. ஒரு முடிவு செய்தான். மறுநாள் முதல் அடுத்த

சில நாட்களுக்கு மெல்ல மெல்லமாக அந்தப் பாறையை உடைத்து எவ்வளவு சிறியதாக மாற்ற முடியுமோ, அவ்வளவு பொடி போல் மாற்றிக் கொண்டான்.

தன்னிடம் இருந்த அந்தத் தனிமப் பொடியைக் கொண்டு, தன் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் தன்னை சுற்றி இருக்கும் மற்ற குடும்பங்களின் உணவுத் தேவையையும் பூர்த்தி செய்தான். மெல்ல மெல்ல மக்கள் ஒற்றுமையாகி பலப்பட்டார்கள். ஊர் என்ற ஒரு கட்டமைப்பும் உருவானது.

அதற்கு அவன் தலைவனும் ஆனான்.)

Scene 6 (கதையின் நிகழ்காலம்)

(இரவு முழுக்க பூசையில் வைக்கப்பட்டு இருந்த, அந்த பாத்திரத்தை தொட்டு வணங்கி, சமையல் கூடத்திற்கு எடுத்துச் சென்றான் தலைவன். மக்கள் எல்லோரும் வெளியில் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்கள். கொஞ்ச நேரத்தில், கூட்டத்தில் ஒருவன் வெளியே வந்து பலமாக ஆரவாரம் செய்தான். அந்த இயற்கை நம்மை காப்பாற்றி விட்டது. கருணை காட்டி விட்டது. எல்லோரும் கொண்டாடுங்கள் என்றான். அங்கே அந்த ஊரே கொண்டாட்டமயமானது.

தன் மக்களின் மகிழ்ச்சியை குடிலின் மேல் பகுதியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான் அந்த தலைவன்.

அப்போது தலைவனுடன் நின்ற ஆலோசகன் ஒருவன் தலைவனைப் பார்த்து கேட்டான்)

தலைவனின் ஆலோசகன் : நம் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் தலைவரே ! இந்த பாத்திரத்தையும் யாரேனும் திருடி கொண்டு சென்று விட்டால் அல்லது அழித்து விட்டால் நம் நிலைமை மிகவும் மோசமாகி விடும் அல்லவா ?

தலைவன் (புன்சிரிப்புடன், மக்களைப் பார்த்துக்கொண்டே) : சரிதான்! அந்தப் பாத்திரத்தை யார் வேண்டுமானாலும் திருடலாம் அல்லது அழிக்கலாம். ஆனால் நம் நம்பிக்கையை, அறிவை, திறமையை யாராலும் திருடவும் முடியாது அழிக்கவும் முடியாது. அவை நம்மிடம் இருக்கும் வரை இந்த ஒரு பாத்திரத்தை மட்டுமல்ல இது போல் 100 பாத்திரங்களை நம்மால் உருவாக்க முடியும்.

(என்று சொல்லி முடித்த தலைவன் தன் இடுப்பிலேயே கட்டி வைத்திருந்தான் அந்த தனிமப்பொடியை.)

END CREDIT SCROLL STARTS

Post CREDIT Scene

தக்க ஓவியங்களுடன் பின்னனிக்குரலில்: ( அதன் பிறகு தொடர்ந்த அந்த பாத்திரத்தின் கதை இதிகாசங்கள் அறிந்த ஒன்று. நாங்கள் தனியாக, புதிதாக சொல்ல ஏதுமில்லை. நன்றி! வணக்கம்!)

END CREDIT SCROLL CONTINUES

ஒரு சிறந்த திரைக்கதையால் எந்த ஒரு பழைய கதையையும் சுவாரஸ்யமாக சொல்ல முடியும். இதை நிரூபிக்கும் நோக்கத்தில் காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் “தாகம் தீர்த்த புத்திசாலி காகம்’’ க்கு என்னால் எழுதப்பட்ட மாதிரி திரைக்கதை வடிவமே இது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.