கொழும்பில் 5வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமை

இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் 2022 மார்ச் 30ஆந் திகதி கொழும்பில் பல துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான 5வது வங்காள விரிகுடா முன்முயற்சி (பிம்ஸ்டெக்) உச்சி மாநாட்டிற்கு மெய்நிகர் முறையில் தலைமை தாங்கினார்.

இந்த உச்சிமாநாட்டில் பங்களாதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பூடான் பிரதமர் டாக்டர் லோடே ஷெரிங், இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி, நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா, தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்-ஓ-சா (ஓய்வு பெற்றவர்) மற்றும் பலர் இணைய வழியில் கலந்து கொண்டனர். மியான்மார் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மியன்மாரின் வெளியுறவு அமைச்சர் வுன்னா மவுங் ல்வினும் இணைய வழியில் உச்சிமாநாட்டில் இணைந்து கொண்டார்.

உச்சிமாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 1997ஆம் ஆண்டு பிம்ஸ்டெக் நிறுவப்பட்டதில் இருந்து, இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகள் தமது அனுபவங்கள், பலம் மற்றும் நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும் ஒரு முக்கிய தளமாக வளர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார். பிராந்தியத்தின் புவிசார் மூலோபாய முக்கியத்துவம், பொருளாதார வலிமை மற்றும் உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்ட அதன் மக்கள் தொகையின் அளவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இது மிகவும் முக்கியமானது என அவர் குறிப்பிட்டார். உறுப்பு நாடுகளுக்கிடையேயான மேம்பட்ட ஒத்துழைப்பு பொருளாதார மீட்சிக்கு மட்டுமல்ல, அதிகரித்த பொருளாதார செழுமைக்கும், சிறந்த பொது சுகாதாரத்திற்கும், நீண்டகாலத்தில் மேம்பட்ட பிராந்திய செழுமைக்கும் அவசியம் என அவர் மேலும் குறிப்பிட்டார். உச்சிமாநாட்டின் கருப்பொருளான ‘பிம்ஸ்டெக்: ஒரு நெகிழ்ச்சியான பிராந்தியத்தை நோக்கி, வளமான பொருளாதாரங்கள், ஆரோக்கியமான மக்கள்’ ஐ குறிப்பிட்டு, இந்த உச்சிமாநாட்டிற்கு தெரிவு செய்யப்பட்ட கருப்பொருளில் இந்த அபிலாஷைகள் நன்கு பிரதிபலிப்பதாகவும், பிராந்தியத் தலைவர்களின் கூட்டு நடவடிக்கைகளின் மூலம், அர்த்தமுள்ள பிராந்திய ஒத்துழைப்பை நோக்கி பிம்ஸ்டெக் செல்லும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

குழுவை ஒருங்கிணைக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை எடுத்த இந்த உச்சிமாநாட்டின் போது, பிம்ஸ்டெக் சாசனம் இன்று கொழும்பில் வைத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில், பிம்ஸ்டெக் சாசனத்தில் கைச்சாத்திடப்படுவதானது, பிராந்தியத்திற்குள் மட்டுமன்றி, உலகளாவிய விவகாரங்களில் ஆசியாவின் உந்து சக்தியாகவும் அமைப்பின் பங்கை அதிகரிப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாகவும் இருக்கும் என ஜனாதிபதி ராஜபக்ஷ அவதானித்தார்.

இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள பிம்ஸ்டெக் பிராந்தியத்துக்குள் வர்த்தகம் மற்றும் முதலீடுகளின் முக்கியத்துவத்தை இலங்கை ஜனாதிபதி எடுத்துரைத்ததோடு, வங்காள விரிகுடாவில் உள்ள வளங்கள் சமமாகப் பாதுகாக்கப்பட்டு, முறையாக நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார். கடலோர சமூகங்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் கட்டுப்பாடுகளற்ற, முறைப்பாடளிக்கப்படாத மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகள் மற்றும் அதிகமாக மீன்பிடிப்பதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை கூட்டாக நிறுவுவதற்காக அவர் அழைப்பு விடுத்தார்.

வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான பிம்ஸ்டெக்கின் நிகழ்ச்சி நிரலை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும், பிம்ஸ்டெக் நாடுகளின் தனியார் துறை மற்றும் தொடரக்க நிறுவனங்கள் நெருக்கமாக செயற்படுவதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் உச்சிமாநாட்டில் உள்ள ஏழு தலைவர்களும் வலியுறுத்தினர். போக்குவரத்து இணைப்புக்கான பிம்ஸ்டெக் மாஸ்டர் திட்டத்தை ஏற்றுக்கொண்ட தலைவர்கள், கடல்சார், போக்குவரத்து ஒத்துழைப்பு மற்றும் வீதி இணைப்பு தொடர்பான திட்டங்களை செயற்படுத்துவதை மீண்டும் வலியுறுத்தினர்.

பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டின் போது மூன்று சட்ட ஆவணங்களில் கைச்சாத்திடும் விழாவையும் தலைவர்கள் நேரில் பார்த்தனர். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, நீதி அமைச்சர் அலி சப்ரி, குற்றவியல் விவகாரத்தில் பரஸ்பர சட்ட உதவிக்கான பிம்ஸ்டெக் சாசனத்தில் கைச்சாத்திட்ட அதே வேளை, பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் இராஜதந்திர அகடமிகள் / பயிற்சி நிறுவனங்களுக்கு இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸினால் கைச்சாத்திடப்பட்டது. கொழும்பில் தொழிநுட்ப பரிமாற்ற வசதியை ஸ்தாபித்தல் தொடர்பான சங்கத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க அமைச்சின் செயலாளர் திருமதி. தீபா லியனகே கைச்சாத்திட்டார்.

உச்சிமாநாட்டின் நிறைவில், இலங்கை தலைவராக இருந்த காலத்தில் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஆதரவை ஜனாதிபதி ராஜபக்ஷ பாராட்டினார். இந்த அமைப்புக்கான இலங்கையின் ஆதரவையும் அர்ப்பணிப்பையும் உறுதியளித்த அவர், பிம்ஸ்டெக்கின் அடுத்த தலைவரான தாய்லாந்தின் பிரதமரிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.