நில அபகரிப்பு வழக்கு: ஜெயக்குமார் மகள்- மருமகனுக்கும் ஜாமீன்

HC grants bail to Jayakumar’s Daughter and son-in-law on Land abduction case: நில அபகரிப்பு வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் மற்றும் மருமகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. இந்தநிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மகேஷ் குமார் புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், அவரது மருமகன் நவீன்குமார் மற்றும் மகள் ஜெயபிரியா ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யபட்ட ஜெயக்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது.

ஜெயக்குமாரின் மகள் ஜெயபிரியா மற்றும் மருமகன் நவீன் குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை ஆலந்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், 6 வருடங்களுக்கு முன்பாக நடந்த சம்பவத்தில் தாமதமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 8 மாதங்கள் கழித்து தங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிவில் வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், பொய் புகாரில் பதிவான இந்த வழக்கில் எந்தவித தொடர்பும் இல்லாத முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்தோடு பதிவு செய்யப்பட்டுள்ளதால், தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. புகார்தாரரான மகேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்தன், ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்தார். அப்போது மனுதரார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன், குடும்ப உறுப்பினர்கள் இடையே உள்ள சொத்து பிரச்சினை கிரிமினல் குற்றமாக மாறியுள்ளதாகவும், புகார் அளித்த மகேஷ்குமார் என்பவர் மனுதாரர் நவீன்குமாரின் சகோதரர். இந்த இடம் தொடர்பாக சிவில் வழக்கும் நிலுவையில் உள்ளதாகவும் அரசியல் லாபத்தில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளதகவும், ஏற்கனவே இதே புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.

இதையும் படியுங்கள்: எஸ்.பி.வேலுமணி ஊழல் வழக்கு; மேயர், அதிகாரிகளை சேர்க்க கோரிய மனு தள்ளுபடி

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் மற்றும் மருமகனுக்கு நிபந்தபனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டரார். 2 வாரங்களுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு தினசரி ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும், ஜெயக்குமாரின் மகள் ஜெயபிரியா 2 வார திங்கட்கிழமையில் மட்டும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இந்தநிலையில், இது குறித்து அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சொத்து பிரச்சினை வழக்கில் ஏற்கனவே அவருக்கு உயர் நீதிமன்றம் பிணை வழங்கி உள்ள நிலையில் இன்று இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அவருடைய மருமகன் நவீன் குமாருக்கும் மகள் ஜெயப்பிரியா வுக்கும் முன் பிணை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதி அரசர் ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது அரசு தரப்பிலும் மனுதாரர் தரப்பிலும் புகார்தாரர் தரப்பிலும் மிக நீண்ட விவாதம் நடந்து முடிந்த நிலையில் மனுதாரர்கள் நவீன் குமார் ஜெயப்பிரியா ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா உத்தரவு பிறப்பித்துள்ளார். முதல் மனுதாரர் நவீன் குமார் சார்பில் மூத்த வழக்கறிஞர் நடராஜனும் இரண்டாவது மனுதாரர் ஜெயப்பிரியா சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி ஆஜரானார்கள் என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.