பாதுகாப்பு பெட்டக அறையில் 84 வயது முதியவரை வைத்து பூட்டிய வங்கி ஊழியர்: 18 மணி நேரத்துக்கு பிறகு மீட்பு

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள ஒரு வங்கி ஒன்றின் பாதுகாப்பு பெட்டக அறையில் 84 வயது முதியவரை வைத்து வங்கி ஊழியர் பூட்டிவிட்டார். அவர் 18 மணி நேரம் வரைபெட்டக அறையிலேயே காற்று கூட இல்லாமல் தவித்து விட்டார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரின் ஜூப்ளிஹில்ஸ் பகுதியில் சாலை எண் 67-ல் யூனியன் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு நேற்று முன் தினம் மாலை சரியாக 4.20 மணிக்கு, அதே பகுதியை சேர்ந்த வியாபாரியான கிருஷ்ணா ரெட்டி (84) என்பவர் சென்றார்.

வங்கியின் பாதுகாப்பு பெட்டக அறையில் முக்கிய ஆவணங்களை வைக்க வேண்டுமென கூறியதால், வங்கியின் ஊழியர் அவரை பெட்டக அறைக்கு அழைத்து சென்று, வெளியில் காத்திருந்தார். பின்னர், ஏதோ கவனத்தில் கிருஷ்ணா ரெட்டிபாதுகாப்பு அறையில் இருப்பதையே மறந்து வங்கி பணிகளில் ஈடுபட்டார். அதன் பின்னர் மாலை நேரமானதும் வங்கியை பூட்டி விட்டு அனைத்து ஊழியர்களும் சென்று விட்டனர்.

பாதுகாப்பு பெட்டக அறையும் பூட்டப்பட்டு விட்டது. ஆனால், இதனை அறியாத கிருஷ்ணா ரெட்டி வங்கி ஊழியர் வருவார் என அங்கேயே காத்திருந்துள்ளார். அவர் செல்போன் கூட கொண்டு வர மறந்ததால், வேறு வழியின்றி காற்று கூட இல்லாத அந்த பெட்டகஅறையில் அடைந்து கிடந்தார்.

வங்கிக்கு சென்ற கிருஷ்ணாரெட்டி வீடு திரும்பாத காரணத்தால், அவரது வீட்டார் பல இடங்களில் இவரை தேடி விட்டு, இறுதியாக திங்கட்கிழமை இரவு ஜூப்ளி ஹில்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், நேற்று காலை போலீஸார் கிருஷ்ணா ரெட்டி சென்ற வங்கிக்கு சென்று அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை பரிசீலித்தனர்.

அதில், கிருஷ்ணா ரெட்டி வங்கிக்கு வந்தது மட்டும் பதிவாகி இருந்தது. திரும்பிப் போனது பதிவாக வில்லை. ஆதலால், அவர்வங்கியிலேயே இருக்க வேண்டுமென போலீஸார் முடிவு செய்து, பாதுகாப்பு பெட்டக அறையை திறந்து ஆய்வு செய்தனர். அப்போது, கிருஷ்ணா ரெட்டி மயங்கி விழுந்து கிடந்ததை கண்டனர். உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

அதன் பின்னர் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். சுமார் 18 மணிநேரம் வரை காற்று இல்லாத இடத்தில் தனிமையில் இருந்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

இது தொடர்பாக கிருஷ்ணா ரெட்டி தரப்பில் ஜூப்ளி ஹில்ஸ் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.