
வலிமை பட வில்லன் நடிகருக்கு திருமணம்
வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த மாதம் வலிமை படம் வெளியானது. இந்த படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்க, அவருக்கு உதவும் துணை வில்லன்களில் ஒருவராக மலையாள திரையுலகை சேர்ந்த இளம் நடிகர் துருவன் நடித்திருந்தார். அஜித் பைக்கில் கார்த்திகேயாவை விரட்டும் போது அவருக்குப் பதிலாக ஆள்மாறாட்டம் செய்து போலீசை திசை திருப்ப முயற்சிப்பாரே அவர்தான் இந்த துருவன்.
மலையாளத்தில் வெளியான குயின் படம் மூலம் திரையுலகில் நுழைந்த இவருக்கு வலிமை திரைப்படம் அங்கே மிகப்பெரிய புகழ் வெளிச்சம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்த நிலையில் இவருக்கும் அஞ்சலி என்பவருக்கும் நேற்று பாலக்காட்டில் திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டனர்.
இதுகுறித்த புகைப்படங்களை அவரது நண்பர்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். துருவன் அடுத்ததாக பிரித்திவிராஜ் நடிப்பில் ஏப்ரல் 28ல் வெளியாகும் ஜனகணமன படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.