பெட்ரோல், டீசல் விலை உயர்வு; ஏப்.4-ல் மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்: வைகோ அறிவிப்பு

சென்னை: பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளை தாறுமாறாக உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசைக் கண்டித்தும்,விலை உயர்வைத் திரும்ப பெற வலியுறுத்தியும் மதிமுக சார்பில் ஏப்ரல் 4ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக
அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் 5 முதல் 137 நாட்களாக மாற்றம் ஏதும் இல்லாமல் தொடர்ந்த பெட்ரோல் டீசல் விலைகள்,
பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.101.81 என்ற அளவிலும், டீசல் ரூ.91.88 என்ற அளவிலும் நீடித்து வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 8 நாட்களுக்கு முன்னால் உயரத் துவங்கியது. கடந்த மார்ச் 22ம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்தது. 137 நாட்களுக்குப் பிறகு , அதிகரிக்க தொடங்கிய பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் நேற்று (மார்ச் 30) பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள் உயர்ந்து 106 ரூபாய் 69 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் 76 காசுகள் உயர்த்தப்பட்டு 96.76 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கடந்த 9 நாட்களில் மட்டும், 8 முறை அதிகரிக்கப்பட்டுள்ள பெட்ரோல் ரூ.5.29, டீசல் ரூ.5.33 என விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் மக்கள் மீது கடும் சுமை ஏற்றப்பட்டு இருக்கிறது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடையத் துவங்கியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் (WTI) கச்சா எண்ணெய் ஒரு பேரல் 1.07 விழுக்காடு சரிந்து 104.8 டாலராகவும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.05 விழுக்காடு சரிந்து 111.3 டாலராகவும் உள்ளது..

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 130 டாலர் என்ற நிலையிலிருந்து படிப்படியாக குறைந்து வரும் நிலையிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவது கடும் கண்டனத்துக்கு உரியது.பெட்ரோல், டீசலுக்கு அடுத்தபடியாக சமையல் எரிவாயு விலையும் உயர்த்தப்பட்டு உள்ளது.மார்ச் 22ம் தேதி முதல் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால் சிலிண்டர் விலை ரூ.915.50ல் இருந்து ரூ.965.50 ஆக அதிகரித்துள்ளது.

பெட்ரோல்,டீசல்,சமையல் எரிவாயு விலைகளை தாறுமாறாக உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும்,விலை உயர்வைத் திரும்ப பெற வலியுறுத்தியும் மறுமலர்ச்சி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 04.04.2022 திங்கள் கிழமை மாலை 4.30 மணி அளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும்.

கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமையில், மாவட்டச் செயலாளர்கள் ஜீவன், சைதை சுப்பிரமணி, ராசேந்திரன் முன்னிலையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ சிறப்புரை ஆற்றுவார். மதிமுக நடத்தும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.