வன்னியருக்கான 10.5% உள் இடஒதுக்கீடு செல்லாது: சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்; தமிழக அரசு, பாமக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி

சென்னை: வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் பாமக தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (எம்பிசி) 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக பிப்ரவரியில் எம்பிசி பிரிவில் உள்ள வன்னியர் சமுதாயத்துக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி அப்போதைய அதிமுக ஆட்சியில் சட்டம் கொண்டுவரப் பட்டது.

இந்த உள் இடஒதுக்கீட்டை எதிர்த்து 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. அந்த வழக்குகளை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரித்த நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழக அரசின் சட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று கூறி, அதை ரத்து செய்து கடந்த ஆண்டு நவம்பரில் தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மற்றும் பாமக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதேபோல, இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளின் விசாரணை நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்து வந்தது. தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, ‘‘வன்னியர் சமுதாயத்துக் கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு, ஏற்கெனவே உள்ள இடஒதுக்கீட் டைத் தாண்டி வழங்கப்படவில்லை. உள் இடஒதுக்கீடாகத்தான் வழங்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டு முறை அமலில் உள்ள நிலையில், அம்பாசங்கர் அறிக்கை மற்றும் வீடுதோறும் சென்று சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கொடுத்த அறிக்கையின் அடிப் படையிலேயே 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் எந்த சட்டவிதிமீறலும் இல்லை’’ என வாதிட்டார்.

எதிர்மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ‘‘எம்பிசி பிரிவில் உள்ள வன்னியர்களுக்கு மட்டுமான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு, அடிப்படையிலேயே தவறானது. இதில் சட்ட விதிமீறல்கள் உள்ளன’’ என்று ஆட்சேபம் தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்திருந்தனர்.

இந்நிலையில், நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளித்தது. தீர்ப்பில் நீதிபதிகள் கூறி யிருப்பதாவது:

வன்னியர் சமுதாயத்துக்கு மட்டும் பிரத்யேகமாக 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த சட்டம் செல்லாது. இது தொடர்பான சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத் தரவை நாங்களும் உறுதி செய் கிறோம்.

உள் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றாலும், அதற்கு முன்பாக சாதி, சமூக அந்தஸ்து, பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் நன்றாக ஆராய்ந்து, அதற்கு சரியான, நியாயமான காரணங்களையும் தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமை.

வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீட்டில், போதுமான தரவுகளை மாநில அரசு தாக்கல் செய்யவில்லை. சாதி வாரியான கணக்கெடுப்பையும் முறையாக நடத்தவில்லை. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான பிரிவில் 115-க்கும் மேற்பட்ட சாதியினர் இருக்கும்போது, 20 சதவீத இடஒதுக்கீட்டில் 10.5 சதவீதத்தை வன்னியர்களுக்கு மட்டும் கொடுத்துவிட்டு, எஞ்சிய 9.5 சதவீதத்தை மட்டும் 115 சாதியினருக்கு வழங்குவது என்பது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.

அத்துடன், உள் இடஒதுக்கீடு என்பது வெறும் சாதி அடிப்படையில் மட்டுமே இருக்கக்கூடாது. அவ் வாறு வழங்கினால், அது அரசியல் சாசனத்துக்கு எதிராக அமைந்துவிடும். எனவே, இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் பாமக தரப்பில் தாக்கல் செய்யப் பட்டுள்ள மேல்முறையீட்டு மனுக் களை தள்ளுபடி செய்கிறோம்.

இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய அரசு தவறு செய்துள்ளது

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங் களது உத்தரவில் மேலும் கூறியுள்ள தாவது: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய தலைவராக பதவி வகிக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.தணிகாச்சலம் பரிந்துரைப்படி வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்குவதற்காக கடந்த 2021-ம் ஆண்டு இந்த சட்டம் கொண்டு வரப்பட்டாலும், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந் தவர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக மட்டுமே அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி தணிகாச்சலம் அரசுக்கு அனுப்பிய பரிந்துரையை மட்டுமே முழுஅடிப்படையாக கொண்டு இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

சமீபத்திய சாதி அடிப்படையிலான புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லாமல் உள்இடஒதுக்கீட்டை வழங்க முடியாது என ஆணையத்தின் மற்ற உறுப்பினர்கள் அரசின் முடிவுக்கு ஆட்சேபனை தெரிவித்தும், அதை அப்போதைய அரசு ஏற்காமல் புறக்கணித்து தவறு செய்துள்ளது. மேலும், நீதிபதி தணிகாச்சலம் தனது பரிந்துரையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவில் உள்ள சமூகங்களின் பின்தங்கிய நிலை குறித்தோ, சாதியினரின் பிரதிநிதித்துவம் குறித்தோ எந்தவொரு பகுப்பாய்வோ, மதிப்பீடோ செய்யவில்லை. வன்னியகுல ஷத்திரி யர்களின் மக்கள்தொகையை மட்டுமே அடிப்படையாக வைத்து உள்இடஒதுக்கீடு வழங்கியிருப்பது சட்டவிரோதம்.

இவ்வாறு அவர்கள் குறிப்பிட் டுள்ளனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இது குறித்து ஆலோசிக்க பாமகவின் அவசர செயற்குழு நாளை (ஏப்.2) சென்னையில் கூடுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.