கள்ளக்குறிச்சி: தொடரும் படிக்கட்டு பயணம்… பள்ளி மாணவர்கள் கஷ்டத்தை கண்டுகொள்ளுமா அரசு?

கள்ளக்குறிச்சியில் அரசுப் பேருந்தில் பள்ளி மாணவர்கள் சிலர் விபத்து ஏற்படும் விதமாக, ஆபத்தான முறையில் பயணம் செய்யும் காட்சி, பார்ப்போரின் நெஞ்சை பதற வைக்கின்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மணலூர்பேட்டை – மேலந்தல் பகுதியில் சில அரசு நகரப் பேருந்துகள் (தடம் எண் 3) இயக்கப்பட்டு வருகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில், இந்தப் பேருந்துகளில் அதிக அளவிலான பள்ளி மாணவர்கள் பயணிப்பது வழக்கம். கடந்த இரண்டாண்டுகள் கழித்து தற்போது மீண்டும் பள்ளிகள் முழு நேரமாக இயக்கப்படுவதால், பயணிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஆனால் பேருந்துகள் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை. பேருந்துகள் குறைவாக இருப்பதால் ஆபத்தான முறையில் கூரை மீது ஏரியும், படிக்கட்டில் தொங்கியபடியும், ஆபத்தான நிலையில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்கின்றனர்.
image
இதுபோன்று பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்வதால், மோசமான விபத்து ஏற்படும் என பொதுமக்களும் மாணவர்களின் பெற்றோரும் அச்சத்தில் உள்ளனர். எனவே ஆபத்து விளைவிக்கும் வகையில் பயணம் செய்வதைத் தடுக்க, பள்ளி செல்லும் நேரங்களில் பேருந்து சேவையை அதிகரிக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அன்றாட வேலைக்கு செல்லும் பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
சில தினங்களுக்கு முன்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பொன்றின்போது “பேருந்தில் தொங்கிகொண்டு செல்வது ஃபேசனாக நினைக்கிறார்கள் மாணவர்கள். இந்த நிலையை மாற்றி கொள்ள வேண்டும். அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்கள் புரிந்து செயல்பட வேண்டும். அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள், மாணவர்களை பேருந்தில் படிக்கட்டு பயணத்தை சரிவர கவனிக்க முடியாத நிலை உள்ளது. மாணவர்கள் முன்கூட்டியே பள்ளிகளுக்கு நேரத்தில் கிளம்பி செல்லவேண்டும். கடைசி நேரத்தில் பள்ளிக்கு செல்ல முயல்வதால், பேருந்துகளில் கூட்டமாக படிக்கட்டுகளில் பயணம் செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது” என்று கூறியிருந்தார். ஆனால், கள்ளக்குறிச்சியில் பேருந்துகள் போதிய அளவில் இல்லாததே மாணவர்கள் இப்படி பயணிக்க வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது. சூழ்நிலையை உணர்ந்து, தேவைப்படும் இடங்களில் கூடுதல் வசதிகள் செய்யப்பட வேண்டுமென்பதே அனைவரின் கோரிக்கையாகவும் உள்ளது.
சமீபத்திய செய்தி: விபத்திற்குப்பின் ஆளின்றி சிறிது தூரம் சீராக சென்ற பைக் – சிசிடிவி காட்சிகள்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.