காவலர்களை தாக்கி, கோரக்பூர் கோவிலுக்குள் நுழைய முயன்றவர் ஐஐடி பட்டதாரி – உ.பி காவல்துறை

Man who attacked cops at Gorakhpur temple graduated from IIT Bombay: Police: ஞாயிற்றுக்கிழமை இரவு இரண்டு காவலர்களை கூர்மையான ஆயுதத்தால் தாக்கிவிட்டு, கோரக்நாத் கோவிலுக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றதாக 29 வயதான அகமது முர்தாசா கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) பம்பாயில் ரசாயனப் பொறியியல் பட்டம் பெற்றவர் என்று உத்தரப் பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.

கூடுதல் டைரக்டர் ஜெனரல் (கோரக்பூர் மண்டலம்) அகில் குமார் கூறுகையில், முர்தாசா பற்றிய கூடுதல் விவரங்களை போலீசார் சேகரித்து வருவதாகவும், விசாரணையில் மும்பை காவல்துறையின் உதவியை நாட உள்ளதாகவும் கூறினார்.

“முர்தாசாவுக்கு திருமணமாகி, சில மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி அவரை விட்டுச் சென்றுவிட்டார் என்பது எங்களுக்குத் தெரிய வந்தது. அவரது திருமண நிலையை நாங்கள் இன்னும் சரிபார்க்கவில்லை. அவர் மும்பையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார், கடந்த ஆண்டு வேலையை இழந்த பிறகு, அவர் கோரக்பூருக்குத் திரும்பினார், அதன் பின்னர் அவர் இங்கேயே தங்கியிருக்கிறார், ”என்று முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் கோரக்பூரைச் சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டவர் அவரது பெற்றோருக்கு ஒரே மகன் மற்றும் அவரது தந்தை முனீர் அகமதுவும் மும்பையில் உள்ள சட்ட ஆலோசனை நிறுவனத்தில் பணிபுரிந்து கடந்த ஆண்டு கோரக்பூருக்கு திரும்பினார் என்று போலீசார் தெரிவித்தனர்.

விசாரணையின் போது, ​​குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பத்தினர் போலீசாரிடம் முர்தாசா ஏதோ வேலைக்காக சனிக்கிழமை வீட்டை விட்டுச் சென்றதாகவும், அதன்பின்னர் திரும்பி வரவில்லை என்றும் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையும் படியுங்கள்: ‘இந்துக்கள் கையில் ஆயுதம் வைத்திருக்க வேண்டும்’ – ஜாமீனில் வந்த உ.பி., சாமியாரின் புதிய சர்ச்சை

இதற்கிடையில், கோவில் வாசலில் இருந்து முர்தாசாவுக்கு சொந்தமானதாக கூறப்படும் ஒரு பையை மீட்டதாக போலீசார் தெரிவித்தனர். அந்த பையில் பென் டிரைவ், லேப்டாப் மற்றும் கூரிய ஆயுதம் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். முர்தாசா குறித்த கூடுதல் தகவல்களை சேகரிக்க பென் டிரைவ் மற்றும் லேப்டாப்பை ஆய்வு செய்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர். அவரிடம் இருந்து செல்போன், பான் கார்டு, ஆதார் அட்டை ஆகியவையும் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு, முர்தாசா காவலர்களைத் தாக்கியதாகவும், கோவிலுக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றதாகவும்,​​அங்கிருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் முர்தாசாவை பிடித்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த கோரக்நாத் கோவிலின் தலைமை மடாதிபதி உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் என்பது குறிப்பிடத்தக்கது. முர்தாசா காயமடைந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் முர்தாசா ஒரு மத முழக்கத்தையும் எழுப்பியதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.