கையில் அரிவாளுடன்.. போலீஸாரை ஓட ஓட விரட்டிய இளைஞர்.. உ.பியில் பரபரப்பு!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோவிலுக்கு வெளியே கையில் பெரிய அரிவாளுடன், போலீஸ்காரர்களை விரட்டிய ஐஐடி பட்டதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

பிடிபட்ட நபரின் பெயர் அகமது முர்தஸா அப்பாசி. இவர் கோரக்நாத் மடத்தின் தலைமையகமான கோரக்நாத் கோவிலுக்கு நேற்று மாலை வந்தார். கையில் அரிவாளுடன் வந்த அவர் அங்கு மத ரீதியில் முழக்கமிட்டார். அவரைத் தடுத்து நிறுத்த போலீஸார் விரைந்து வந்தனர். அவர்களைப் பார்த்த முர்தஸா, போலீஸாரை தாக்க முயன்றார். அதில் 2 போலீஸாருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் அரிவாளுடன் போலீஸாரை அவர் விரட்டினார். போலீஸாரும் அதிர்ச்சி அடைந்து தப்பி ஓடினர். அருகில் இருந்த கடைக்காரர்களையும் அந்த நபர் மிரட்டினார்.

முர்தஸாவின் செயலால் அங்கு பெரும் கூட்டம் கூடி விட்டது. அதன் பிறகு போலீஸாரும், பொதுமக்களும் சேர்ந்து கற்களை வீசி முர்தஸாவை வளைத்துப் பிடித்தனர். அதன் பின்னர் பொதுமக்கள் அவரை சரமாரியாக அடித்ததில் முர்தஸா காயமடைந்தார். அவரை போலீஸார் மீட்டு கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்திக் கொண்டு சென்றனர். முர்தஸா, போலீஸாரை விரட்டும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட கோரக்நாத் மடத்தின் தலைமை மடாதிபதியாக இருப்பவர் உ.பி. முதல்வர்
யோகி ஆதித்யநாத்
என்பது நினைவிருக்கலாம்.

முர்தஸா கோரக்பூரைச் சேர்ந்தவர்தான். ஐஐடி பாம்பேயில் 2015ம் ஆண்டு படித்து பட்டதாரி ஆனவர். அவரிடமிருந்து லேப்டாப், போன், ஒரு டிக்கெட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர் பெரிய அளவிலான சதிச் செயலுடன் வந்திருப்பதாக போலீஸார் கூறுகின்றனர். இது தீவிரவாத தாக்குதல் இல்லை என்று கூறி விட முடியாது. அனைத்து கோணத்திலும் விசாரிப்பதாக, கூடுதல் டிஜிபி பிரஷாந்த் குமார் கூறியுள்ளார்.

முர்தஸா மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.யோகி ஆதித்யநாத், முதல்வரானதைத் தொடர்ந்து அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கோரக்பூர் மடம் உருவெடுத்துள்ளது. கோரக்பூர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் யோகி ஆதித்யநாத் இருந்துள்ளார். தற்போது இதே தொகுதியில் அவர் எம்எல்ஏவாகவும் சமீபத்தில்தான் வெற்றி பெற்று 2 வது முறையாக முதல்வரானார் என்பது நினைவிருக்கலாம்.

இந்த சம்பவம் குறித்து போலீஸார் மேலும் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் கோவிலுக்குள் நுழைய கடுமையாக முயன்றார். உள்ளே போயிருந்தால் பலரை அவர் தாக்கியிருக்கக் கூடும். ஆனால் கோவில் ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் போலீஸார் இணைந்து அந்த முயற்சியைத் தடுத்து அவரைப் பிடித்து விட்டனர் என்றனர்.

அடுத்த செய்திபிரதமர் மோடி ஆட்சிக்கு சிக்கல்: உயர் அதிகாரிகள் ரிப்போர்ட்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.