திமுக அரசின் கையாலாகத்தனத்தையே சொத்து வரி உயர்வு காட்டுகிறது: சீமான் சாடல்

சென்னை: சொத்து வரியை உயர்த்தியுள்ளது, திமுக அரசின் கையாலாகத்தனத்தையே காட்டுகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்று அறிக்கை: “தமிழகத்தின் பெருநகரங்கள் முதல் பேரூராட்சிகள் வரையுள்ள குடியிருப்பு, வணிக, கல்வி பயன்பாடு கட்டடங்களின் சொத்து வரியை 150 விழுக்காடு வரை உயர்த்தியுள்ள தமிழக அரசின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசின் மோசமான ஆட்சி முறையால், எரிபொருள், சமையல் எரிவாயு உருளை விலையுயர்வு மற்றும் சுங்கக்கட்டண உயர்வு என யாவும் மக்களை வாட்டி வதைத்து, அத்தியாவசியப் பொருட்கள் விண்ணைமுட்டுமளவுக்கு உயர்ந்து கொண்டிருக்கையில், சொத்து வரியை உயர்த்தியுள்ள திமுக அரசின் நிர்வாக முடிவு கடும் கண்டனத்துக்குரியது.

முந்தைய அதிமுக அரசு 100 விழுக்காடு வரை சொத்து வரியை உயர்த்தியபோது அதனைக் கண்டித்து போராடிவிட்டு, தற்போது 150 விழுக்காடு வரையில் சொத்து வரியை அதிகரிக்கச் செய்திருக்கும் திமுக அரசின் நிலைப்பாடு எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. தற்போதைய சொத்து வரி உயர்வானது, வீட்டு வாடகையில் எதிரொலித்து, சென்னை போன்ற பெருநகரங்களில் குடியிருக்கும் எளிய, நடுத்தர மக்களின் வாழ்நிலையில் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும். மக்கள் எதிர்கொள்ளப்போகும் பொருளாதார நெருக்கடியைப் பற்றிக் கவலைகொள்ளாது, போகிறபோக்கில் மத்திய அரசின் நிதி ஆணையப் பரிந்துரையைக் காரணமாகக் காட்டிவிட்டு, தப்பிக்க நினைப்பது திமுக அரசின் கையாலாகத்தனத்தையே காட்டுகிறது.

மக்களுக்கான அடிப்படைத் தேவைகள், அரசுப் பணியாளர்களுக்கான ஊதியம் மற்றும் உள்கட்டமைப்புப் பராமரிப்பு போன்றவற்றுக்குத் தேவைப்படும் செலவினங்களுக்கு ஒரு அரசு, மதுக்கடைகளையும், மக்கள் செலுத்தும் வரியையுமே முழுமையாக நம்பி நிற்பது வெட்கக்கேடானது. இது அரை நூற்றாண்டுகால திராவிட அரசுகளின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிக்காட்டுகிறது. முந்தைய அதிமுக அரசு கடந்த 2018-ம் ஆண்டு 100 விழுக்காடு அளவுக்குச் சொத்து வரியை உயர்த்தியவுடன், “சொத்துக்கு வரியா ? அல்லது சொத்தைப் பறிக்க வரியா?” எனக் கேள்வியெழுப்பிய திமுக தலைவர் ஸ்டாலின், தற்போது ஆட்சி பொறுப்பேற்று முதல்வரான பிறகு, 150 விழுக்காடு வரை வரியை உயர்த்தியிருப்பது எவ்வகையில் நியாயம்?

‘இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு’ என்று ‘தமிழ்மறை’ திருக்குறள் கூறும் நல்லரசுக்கான வரைவிலக்கணத்திற்கு இணங்க, மண்ணையும் மக்களையும் பாதிக்காத வகையில் திட்டங்களைத் தீட்டி, உற்பத்தியைப் பெருக்கி, அதன் மூலம் நிலைத்த வளமான பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டிய தமிழக அரசு, அதைச் செய்யத் தவறி, மக்களைக் கசக்கிப் பிழிந்து வரியை வசூலித்து அதன் மூலம் ஆட்சிபுரிய நினைப்பது கொடுங்கோன்மையின் உச்சமாகும்.

ஆகவே, மக்களை வாட்டி வதைக்கும் வகையில் மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள சொத்துவரி உயர்வை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமெனவும், அரசின் நிதியாதாரத்துக்கு மாற்றுப்பொருளாதாரப் பெருக்கத்துக்கான திட்டங்களை வகுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.