புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்: எஃப்சி கட்டணம் ரூ.700-லிருந்து ரூ.4600-ஆக உயர்த்தியதற்கு எதிராக கண்டனம்

புதுச்சேரி: வாகனங்களை புதுப்பிக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுவையில் ஆட்டோவை புதுப்பிக்கும் அதாவது எஃப்சி கட்டணம் உயர்த்தியதை திரும்பப் பெற வலியுறுத்தி ஏஐடியுசி ஆட்டோ சங்கத்தினர் புதுச்சேரி போக்குவரத்து துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். புதுவையில் ஆட்டோ பதிவு கட்டணமாக ரூ.700 செலுத்தப்பட்டு வருகிறது. இதனை, திடீரென ரூ.4600-ஆக உயர்த்திக் கட்டுவற்கு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது. இதனை எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட ஏஐடியுசி சங்கத்தின் ஆட்டோ ஓட்டுனர்கள் கடலூர் – சென்னை நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தினர். சாலையின் இருபுறமும் ஆட்டோக்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டது. இதனால், இந்த தொழிலை நம்பியுள்ள ஆட்டோ தொழிலாளர்கள் நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இன்சூரன்ஸ் கட்டணமாக ஆட்டோ ஒன்றுக்கு ரூ.8000, சாலை வரியாக ரூ.1500 கட்ட வேண்டிய நிலை இருந்து வருகிறது. ஆண்டுதோறும் ஆட்டோ எஃப்சி எடுப்பதற்கு முன்னர், வண்டியை டிங்கரிங் வேலை, பெயிண்டிங் வேலை, லைனர் வேலை, மெக்கானிக் கூலி என ரூ.30,000 வரை செலவு செய்யப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து பெட்ரோல் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.இந்த சூழ்நிலையில் எஃப்சி கட்டணத்தை ரூ.700-யிலிருந்து ரூ.4600 ஆக உயர்த்தி ஆட்டோ தொழிலை அழிக்கும் வேலையை ஒன்றிய, மாநில அரசுகள் செய்து வருவதைக் கண்டித்தும், உயர்த்திய எஃப்சி கட்டணத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஏஐடியுசி புதுச்சேரி ஆட்டோ தொழிலாளர் நல சங்கம் சார்பில், புதுச்சேரி போக்குவரத்து துறை தலைமை அலுவலகத்தை ஆட்டோக்களுடன் முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்திற்கு ஏஐடியுசி ஆட்டோ சங்க மாநில பொதுச்செயலாளர், ஆட்டோ சங்க மாநில தலைவர், மாநில பொருளாளர் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆட்டோ சங்க மாநில நிர்வாகிகள், மாநில துணை தலைவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்போராட்டத்தில் ஏராளமான ஆட்டோ தொழிலாளர்கள் ஆட்டோக்களுடன் பங்கேற்று, கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனை தொடர்ந்து போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்களும் போராட்டக்காரர்களிடம் சிறுது நேரம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களை சமாதானப்படுத்தி போக்குவரத்துதுறை ஆணையரிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றனர்.              

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.