திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு அருகே பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அதிவேக ரயில் பாதைக்கு எதிராக மாவோயிஸ்ட் இயக்கத்தின் சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 5 மாநில தேர்தலையொட்டி 4 மாதங்களுக்கு மேலாக கூடாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு தேர்தலுக்கு பிறகு நாளுக்கு நாள் கிடுகிடுவென உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் லிட்டருக்கு ₹9 க்கு மேல் உயர்த்தப்பட்டு உள்ளது. அதேபோல் சமையல் கியாஸ் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் சாதாரண மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரள மாநிலம் வயநாடு அருகே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து மாவோயிஸ்ட் இயக்கத்தின் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.இங்குள்ள தாமரைசேரி அருகே பூதப்பாடி மட்டிக்குன்னு பஸ் ஸ்டாப் உள்பட சுற்றுபுற பகுதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அதில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மத்திய அரசு பொது மக்களை கொடுமைப்படுத்துகிறது. இதன் மூலம் மக்கள் பெரும் துயரப்படுகின்றனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. மக்களை துன்புறுத்தும் பிரதமர் மோடி இதற்கு பதில் சொல்லியே தீரவேண்டும். இதேபோல கேரளாவில் பினராயி விஜயன் அரசு கொண்டுவர தீர்மானித்துள்ள அதிவேக ரயில் பாதை திட்டத்தால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். விவசாய நிலங்கள் அழியும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் பொது மக்கள் நடுத்தெருவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிராக அனைவரும் போராட வேண்டும். இதில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது. இவ்வாறு போஸ்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்ததும் தாமரைசேரி டிஎஸ்பி அஷ்ரப் தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். போஸ்டர்கள் ஒட்டப்பட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
