டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில் எஸ் பி வேலுமணி தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரனைக்கு வருகின்றது. இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனு தொடர்பான விவரங்கள் புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ளன.
முந்தைய அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ் பி வேலுமணி தனது சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், பினாமிகளின் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி, நகராட்சி பணிகளுக்கான ஒப்பந்தங்களை சட்டவிரோதமாக வழங்கியதாக குற்றம்சாட்டி அவர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி அறப்போர் இயக்கம் சார்பிலும், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் புலன் விசாரணையை முடித்து பத்து வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டு அதுதொடர்பான மனுக்களையும் முடித்து வைத்தது.
இதை எதிர்த்து எஸ் பி வேலுமணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், அமைச்சர் என்ற முறையில் கொள்கை முடிவுகளை மட்டுமே எடுத்ததாகவும், மாநகராட்சி, நகராட்சி டெண்டர் நடைமுறைகளில் தான் எனவும் இது அரசியல் காழ்ப்புணர்ச்சி நிறைந்த வழக்கு என்றும் அவர் கூறியிருந்தார். இந்த வழக்கு கடந்த மாதம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமனா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வார காலத்திற்கு ஒத்தி வைத்திருந்தனர்.
இந்நிலையில், டெண்டர் முறைகேடு விசாரணை எதிர்த்து முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் தமிழக அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டிருப்பவை: “சென்னை மாநகராட்சியில் ரூ.114கோடி மதிப்புள்ள ஒப்பந்தப் பணியில், ரூ.29கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் கோவையில் குப்பைகளை அகற்றுவது தொடர்பான ஒப்பந்தங்களில் ரூ.25கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. 2021ல் வெளியிடப்பட்ட சிஏஜி அறிக்கையின் படி எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
2016-2020ஆம் ஆண்டு வரை எஸ்.பி.வேலுமணி சுமார் ரூ.58கோடி அளவிற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இப்படியாக எஸ்.பி.வேலுமணி மிக மோசமான குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்குகளின் விசாரணை நிறைவடைந்து இறுதி அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும். வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்பதற்காக மேல்முறையீட்டு மனுவை எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்துள்ளார். தவறான வழியிலும், சட்டத்திற்குப் புறம்பாகவும் எஸ்.பி. வேலுமணி செயல்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை மேம்பாடு, உள்ளிட்ட பணிகளுக்காக ஆறு தொகுப்புகள் 114 கோடி ரூபாய்க்கு ஒப்பந்த பணிகள் விட்டது. அதில் சுமார் 29 கோடி ரூபாய் வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. போலவே 2014ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுவரை கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றுதல் மற்றும் அதனை வேறு இடத்திற்கு மாற்றுதல் ஆகியவற்றிற்கு தொடர்புடைய பணிகளுக்காக விடப்பட்ட ஒப்பந்தங்களில் அரசு நிர்ணயித்த தொகையை விட அதிகமாக தனது நெருக்கமானவர்களுக்கு கொடுத்ததன் காரணமாக 25 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை எஸ் பி வேலுமணி சுமார் 58 கோடி ரூபாய் அளவிற்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. சாட்சியங்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள், வேலுமணிக்கு நெருக்கமானவர்கள் நடத்தக்கூடிய நிறுவனங்களில் கழிவுகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் போன்றவையெல்லாம் தவறான வழியிலும் சட்டத்திற்குப் புறம்பாகவும் எஸ் பி வேலுமணி செயல்பட்டுள்ளார் என்பதை சுட்டிக்காட்டுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படியாக `தான் செய்த தொடர்ச்சியான குற்றங்கள் காரணமாக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட என்பதால் வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்பதற்காகவே உச்சநீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டு மனுவை எஸ் பி வேலுமணி தாக்கல் செய்திருக்கிறார்’ என தமிழக அரசு அவர் மீது குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.
சமீபத்திய செய்தி: சிறுவன் கன்னத்தில் சரமாரியாக அறைந்த காவலர் – சிசிடிவி கேமிராவில் சிக்கிய காட்சிகள்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
