3 டிவீட்.. பெங்களூரு பேரு டோட்டலா காலி.. பொம்மை கருத்து என்னவோ?

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரம் என்ற பெருமையுடன் கூடிய பெங்களூரின் பெயர் சமீபகாலமாக தவறான செயல்களுக்காக அடிபட ஆரம்பித்துள்ளது. இதை வைத்து தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகன் ஒரு டிவீட் போட, அதற்கு கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.சிவக்குமார் பதில் கொடுக்க.. இருவருக்கும் சேர்த்து கர்நாடக
பாஜக
பதிலடி கொடுக்க.. பெங்களூரின் பெயர் மீண்டும் அடிபட ஆரம்பித்துள்ளது.

கர்நாடகத்தில் இந்துத்வா சக்திகளின் கை ஓங்க ஆரம்பித்துள்ளதால், கர்நாடகத்தின் பெயர் குறிப்பாக பெங்களூரின் பெயர் சர்வதேச அளவில் கெடும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக பலரும் அச்சம் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். ஹிஜாப் விவகாரத்தையும், அதைத் தொடர்ந்து இந்துக் கோவில்கள் அருகே இஸ்லாமியர்கள் வர்த்தகம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டதையும், ஹலால் உணவுக்கு எதிரான பிரசாரத்தையும் அவர்கள் மேற்கோள் காட்டுகின்றனர்.

இதுபோன்ற மதரீதியிலான விவகாரங்கள் பெங்களூரின் பெயரைக் கெடுத்து விடும் என பயோகான் நிறுவன தலைவர் கிரண் மஜூம்தாரும் கூட சமீபத்தில் கவலை தெரிவித்திருந்தார். முதல்வர் எஸ்.ஆர். பொம்மை இதில் தலையிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகரராவின் மகனும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி செயல் தலைவரும், அமைச்சருமான கே.டி. ராமாராவுக்கும், கர்நாடக மாநில காங்கிரஸ்தலைவர் டி. சிவக்குமாருக்கும் ஒரு சவால் கிளம்பியுள்ளது.

கட்டாபுக் நிறுவனத்தின் நிறுவனரான ரவீஷ் நரேஷ் ஒரு டிவீட் போட்டிருந்தார். அதில், ஏற்கனவே எச்எஸ்ஆர், கோரமங்களா ஆகிய பகுதிகளில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் வரி கட்டி வருகின்றன. ஆனாலும் எங்களுக்கு நல்ல சாலைகள் இல்லை, தினசரி பவர் கட் வேறு இருக்கிறது. குடிநீரும் சரியில்லை. நடைபாதை சரியில்லை, பல ஊரகப் பகுதிகளில் கூட நல்லஅடிப்படைவசதிகள் உள்ளன. ஆனால் இந்தியாவின் சிலிக்கான் வேலியின் நிலை மோசமாக உள்ளது. விமான நிலையும் கூட 3 மணி நேர தொலைவில் உள்ளது மிகப் பெரிய சிரமமாக உள்ளது என்று கூறியிருந்தார்.

இதற்கு கேடிஆர் ஒரு பதில் போட்டுள்ளார். அதில், எல்லாத்தையும் மூட்டை கட்டிட்டு ஹைதராபாத்துக்கு வந்து சேருங்க. இங்கு அருமையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் உள்ளன. தரமான நல்ல சமூக கட்டமைப்பு உள்ளது. எங்களது விமான நிலையம், தரமானது, சிறந்தது. நகருக்குள் வந்து செல்வதும், நகரிலிருந்து வெளியேறுவதும் சிரமம் இல்லாமல் இருக்கும். அதை விட முக்கியமாக, innovation, infrastructure & inclusive growth ஆகிய மூன்று தாரக மந்திரங்களை எங்களது அரசு கடைப்பிடிக்கிறது என்று கூறியிருந்தார்.

இதையடுத்து பலரும் பேசாமல் ஹைதராபாத்துக்கே போய் விடுங்க என்று கட்டாபுக் நிறுவனருக்கு அட்வைஸ் கொடுக்க ஆரம்பித்தனர். கர்நாடகத்துக்கு சாதகமாக பேச ஆளே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.சிவக்குமார் தனது மாநிலத் தலைநகருக்காக பேச வந்தார். அவர் போட்ட பதில் டிவீட்டில், நண்பா உங்க சவாலை ஏத்துக்கிறேன். 2023ம் ஆண்டு இறுதிக்குள் மீண்டும் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும். இந்தியாவின் சிறந்த நகரமாக மீண்டும் பெங்களூரை நாங்கள் மாத்துவோம் என்று கூறியுள்ளார்.

இந்த டிவீட்டுக்கு கே.டி.ஆர். உடனடியாக பதில் அளித்துள்ளார். அதில், சிவக்குமார் அண்ணா.. கர்நாடக அரசியல் குறித்து எனக்கு அவ்வளவாக தெரியாது. யார் வெல்வார்கள் என்றும் எனக்குத் தெரியாது. ஆனாலும் உங்களது சவாலை நானும் ஏற்கிறேன். பெங்களூரும், ஹைதராபாத்தும் ஆரோக்கியமான முறையில் மோதட்டும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தட்டும். நாட்டையும் வளர்ச்சிப் பாதைக்கு இரு நகரங்களும் கொண்டு செல்லட்டும் என்று கூறியுள்ளார்.

இவர்கள் இப்படி ஆரோக்கியமாக மோதிக் கொண்டிருந்த நிலையில் பாஜகவால் சும்மா இருக்க முடியுமா.. உள்ளே நுழைந்தது கர்நாடக பாஜக. சிவக்குமார், கே.டி.ஆர்.. இருவரும் 2023ம் ஆண்டு சேர்ந்து மூட்டைக் கட்டிக் கொண்டு கிளம்பத் தயாராக இருங்கள். பாஜகவின் டபுள் என்ஜின் நிர்வாகம், பெங்களுருக்கு மட்டும் பெருமையைக் கொண்டு வராது, மாறாக, தெலங்கானாவையும் அருமையான வளர்ச்சிப் பாதையிலும், பெருமையிலும் இட்டுச் செல்லும் என்று பதில் போட்டுள்ளது.

இவர்களையெல்லாம் விடுங்க.. பெங்களூரு சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு கர்நாடக முதல்வர் எஸ். ஆர். பொம்மை என்ன பதில் சொல்லப் போகிறார்.. காத்திருப்போம்.

அடுத்த செய்திஅண்டை நாடுகள் விவகாரம்: பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.