இலங்கையில் பொருளாதார நெருக்கடி: கொழும்புவில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

கொழும்பு, 
இலங்கையில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோருக்கு கடும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு வசதியாக இலங்கை மந்திரிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்தனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரையும் தவிர்த்து மீதமுள்ள 26 மந்திரிகளும் ராஜினாமா செய்தனர். இதல் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவும் அடங்குவார்.

அவர்களது ராஜினாமாவை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஏற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து நீதித்துறை மந்திரியாக இருந்த அலி சப்ரியை நிதி மந்திரியாக கோத்தபய நியமித்து உள்ளார். அவரும் பதவியேற்றுக்கொண்டார்.
இவரை தவிர மேலும் 3 மந்திரிகள்புதிதாக பதவியேற்றுக்கொண்டனர். அந்தவகையில் வெளியுறவு மந்திரியாக ஜி.எல்.பெரீஸ், கல்வித்துறை மந்திரியாக தினேஷ் குணவர்தனே, நெடுஞ்சாலைத்துறை மந்திரியாக ஜான்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் புதிதாக பெற்றுக்கொண்டனர்.
இலங்கை அரசில் அங்கம் வகித்த மந்திரிகள் அனைவரும் ராஜினாமா செய்துள்ள நிலையில் நாட்டில் அனைத்துக்கட்சிகள் இடம்பெறும் தேசிய அரசு அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே முடிவு செய்துள்ளார்.
எனவே நாட்டின் புதிய அரசில் இணையுமாறு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் கொண்டுள்ள எதிர்க்கட்சிகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார். ஆனால் அதிபரின் இந்த அழைப்பை எதிர்க்கட்சிகள் நிராகரித்து உள்ளன. 
இந்நிலையில் கொழும்புவில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். முன்னதாக இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்கள் நேற்றும் நாடு முழுவதும் வீரியமாக அரங்கேறின. கடும் கட்டுப்பாடுகள் அமலில் இருந்தபோதும் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட போராட்டக்காரர்கள் நேற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ராஜபக்சே உடனடியாக பதவி விலகக்கோரி கோஷமிட்ட அவர்கள், அங்கே போடப்பட்டிருந்த தடுப்பு வேலிகளையும் கீழே தள்ளிவிட்டு ராஜபக்சேவின் வீட்டை நோக்கி முன்னேறினர். உடனே அங்கே பாதுகாப்புக்கு நின்ற போலீசார் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.