இலங்கை முழுவதும் மக்களின் போராட்டம் வலுத்து வருவதால் பதற்றம்

கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அரசுக்கு எதிராக மக்களின் போராட்டம் வலுத்து வருகிறது. நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். இதையடுத்து, இடைக்கால அமைச்சர்களாக 4 பேர் பொறுப்பேற்றுள்ளனர்.

ஒருங்கிணைந்த அரசு அமைக்க முன்வருமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அதிபர் கோத்தபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையில் அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாறு காணாத அளவில் சரிந்ததால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருள் மற்றும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அவற்றின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. 13 மணி நேரத்துக்கும் அதிகமாக மின்வெட்டு நீடிக்கிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, அரசுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர். அதிபர் கோத்தபய ராஜபக்சவும் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடக்கின்றன. சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

கடந்த 1-ம் தேதி அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வீட்டை ஏராளமானோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கிருந்த வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து, அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. அத்துடன் 36 மணி நேர ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

போராட்டம் பரவுவதைத் தடுக்க பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் 3-ம் தேதி முடக்கப்பட்டன. அதற்கு போதிய பலன் கிடைக்காததாலும், மக்களின் கடும் எதிர்ப்பாலும் சில மணி நேரத்திலேயே சமூக ஊடகங்கள் செயல்பாட்டுக்கு வந்தன.

அங்கு அமல்படுத்தப்பட்டிருந்த 36 மணி நேர ஊரடங்கு உத்தரவு நேற்று காலையுடன் முடிவுக்கு வந்தது. அதே நேரத்தில் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் நீடித்து வருகிறது. இதனால், நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், இலங்கையின் அனைத்து அமைச்சர்களும் நேற்று முன்தினம் இரவு திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அதிபரின் 3 உறவினர்கள் உட்பட 26 அமைச்சர்களும் பதவி விலகினர். ஆனாலும், அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச இருவரும் தொடர்ந்து பதவியில் நீடிக்கின்றனர். அமைச்சர்களின் ராஜினாமாவை அதிபர் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிபரின் ஊடக பிரிவு நேற்று காலை வெளியிட்ட அறிக்கையில், ‘நாட்டு மக்கள் மற்றும் வருங்கால தலைமுறையினரின் நலனுக்காக அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டிய நேரம் வந்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஒருங்கிணைந்த அரசை அமைக்க வேண்டும். இதற்காக, நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அமைச்சக பொறுப்பை ஏற்க முன்வர வேண்டும் என அதிபர் அழைப்பு விடுக்கிறார்’ என்று கூறப்பட்டுள்ளது.

இடைக்கால அமைச்சரவை

அமைச்சர்கள் கூண்டோடு ராஜி னாமா செய்துள்ள நிலையில், அங்கு இடைக்கால அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. புதிய அரசு பொறுப்பேற் கும் வரை அரசு தொடர்ந்து செயல்பட ஏதுவாக இடைக்கால அமைச்சர்களாக 4 பேரை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபக்ச நேற்று உத்தரவிட்டார். அதிபர் மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவர்கள் 4 பேரும் உடனடியாக பதவியேற்றுக் கொண்டனர்.

நீதித் துறை அமைச்சராக இருந்த அலி சாப்ரி, புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற கட்சித் தலைவர் குணவர்த்தன கல்வி அமைச்சராகவும் அரசு தலைமை கொறடா ஜான்ஸ்டன் பெர்னாண்டோ நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் பேராசிரியர் ஜி.எல்.பெரிஸ் வெளியுறவு அமைச்சராகவும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

மத்திய வங்கி ஆளுநர் விலகல்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ராலும் நேற்று பதவி விலகினார். எதிர்க்கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச கூறும்போது, ‘‘அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகியது ஒரு நாடகம். இது மக்களை முட்டாளாக்கும் செயல். நாட்டில் நிலவும் பிரச்சினைக்கு தீர்வு காண அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை’’ என்றார்.

இதனிடையே, நிதி நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நாடுகளின் உதவியை இலங்கை கோரி வருகிறது. அண்மையில் டெல்லி வந்திருந்த இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, பிரதமரை சந்தித்துப் பேசினார். இதையடுத்து, பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு 100 கோடி டாலர் கடன் வழங்க இந்தியா ஒப்புக் கொண்டது. அதன்படி, 40 ஆயிரம் டன் அரிசி, மருந்துப் பொருட்கள் மற்றும் டீசலை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

மேலும் பசில் ராஜபக்ச விரைவில் அமெரிக்கா சென்று சர்வதேச நிதி அமைப்பின் (ஐஎம்எப்) தலைவரை சந்தித்து நிதியுதவி கோர திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், புதிய நிதியமைச் சர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.