உப்பாற்றில் மூழ்கிய 9 பேரின் உயிரை காப்பாற்றிய தனி ஒருவன்.. தீவுக்குள் நடந்த திகில்.!

தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் புனித தோமையார் ஆலயத்திற்கு சென்ற பெண் பக்தர்களில் சிலர் உப்பாற்றில் சிப்பி எடுப்பதற்காக விளையாட்டாக இறங்கி நீரில் மூழ்கிய நிலையில், தனி ஒருவராக ஒன்பது பெண்களின் உயிரை மீட்ட மீனவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயலில் தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் உப்பாற்று நீரோட்டத்தின் நடுவே அமைந்துள்ள தீவு போன்ற பகுதியில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித தோமையார் ஆலயம் உள்ளது

இங்கு வழிபட கூடிய பக்தர்கள் படகில் ஏறிச்சென்று உப்பாற்றை கடந்து அந்த கோவிலுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் கிறிஸ்தவர்களின் தவக்காலம் என்பதால் இந்த புன்னைகாயல் புனித தோமையார் ஆலயத்திற்கு கிறிஸ்தவர்கள் சென்று வருவது வழக்கம்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம், பகுதிகளில் இருந்து பலர் இந்த ஆலயத்திற்கு வந்துள்ளனர். அங்கு அப்போது குளிப்பதற்காகவும், சிப்பிகளை சேகரிப்பதற்காகவும் சிலர் உப்பாற்றில் இறங்கியபோது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் 9 பெண்கள் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி தத்தளித்து உள்ளனர்.

உதவிக்கு அங்கு யாரும் இல்லாத நிலையில் அங்கு என்ஜின் பொருத்திய ஃபைபர் படகில் தற்செயலாக வந்த புன்னைக்காயலை சேர்ந்த மீனவர் ஜேமன் என்பவர் பார்த்துள்ளார் உடனே அவர் தனது ஃபைபர் படகில் தனி ஒரு ஆளாக விரைந்து சென்றார்.

நீரில் மூழ்கி உயிருக்கு போராடிய 9 பெண்களையும் அடுத்தடுத்து மீட்டு தனது ஃபைபர் படகில் தூக்கிபோட்டு மீட்டு உள்ளார். பின்னர் அவர்களை கரைக்கு கொண்டு வந்து புன்னைக்காயலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்து அனைவரது உயிரையும் காப்பாற்றி உள்ளார்.

உரிய சிகிச்சைக்கு பின்னர் 9 பேரும் நலமுடன் வீடு திரும்பினர். தனி ஒருவனாக நின்று தன் உயிரைக் பணயம் வைத்து 9 பேரையும் மீட்டு கரை சேர்த்த மீனவர் ஜேமனை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். அவரது இந்த சேவையை பாராட்டி மாவட்ட நிர்வாகம் கவுரவிக்க வேண்டும் என்று புன்னைக்காயல் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.