வெளி நாடுகளில் வீரியமாகும் கோவிட்; தமிழகத்தில் தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள்; இது சரியான முடிவுதானா?

கோவிட் 19 பாதிப்புகளுக்காவும் அவற்றைத் தடுப்பதற்காகவும் விதிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதிலும் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால் மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மற்றும் டெல்லி போன்ற பல மாநில அரசுகளும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, இந்திய அரசு மற்றும் மாநில அரசு கோவிட் 19 தொற்றுக்காக விதிக்கப்பட்டுள்ள மாஸ்க் அணிவது, பொது மற்றும் கூட்ட நெரிசலான இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற கட்டுப்பாடுகளை நீக்குவதாக அறிவித்துள்ளது.

இனி வாழ்க்கையில மாஸ்க் தேவையே இல்லையா?

மேலும், பொது இடங்களுக்குச் செல்ல கோவிட்-19 தடுப்பூசி கட்டாயம் என்ற கட்டுப்பாட்டையும் தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது. தமிழக அரசு, ஏப்ரல் 3-ம் தேதி முதல் கோவிட் 19 தொடர்பான அனைத்து கட்டுப்பாட்டு விதிமுறைகளும் திரும்ப பெறப்படும் என்று அறிவித்திருந்தாலும் மாஸ்க் அணியவும், சமூக இடைவெளியைப் பின்பற்றவும், சரியான சுகாதார நடைமுறைகளைப் கடைப்பிடிக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில், பிரிட்டனில் தற்போது கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரானின் உருமாறிய XE வகை வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. உலக சுகாதார நிறுவனம் கொரோனாவின் உருமாற்றங்கள் அதிகரிப்பதாகவும் அவை முந்தைய உருமாற்றங்களைவிட பரவம் தன்மை அதிகமாக இருக்கலாம் என்றும் எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஒருபுறம் தளர்வுகள், மற்றொரு புறம் வைரஸ் பரவல் இது பற்றி தொற்றுநோய் மருத்துவர் அஷ்வின் கருப்பனிடம் கேட்டோம்.

மருத்துவர் அஷ்வின் கருப்பன்

“கட்டுப்பாடுகளை நீக்கியதற்கான காரணம் தற்போது 80 சதவிகித மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். அதிகபட்ச நபர்களுக்கு கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தும் விட்டார்கள். கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் எதிர்ப்புசக்தி அதிகரித்திருக்கிறது. கடுமையான எதிர்ப்பு சக்தி நிலையை அடைந்திருக்கிறோம். இனிவரும் உருமாற்றங்கள் உயிரை பாதிக்கும் அளவுக்கு இருக்காது.

தற்போது, பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட XE உருமாற்றத்தைப் போல் தொடர்ந்து உருமாற்றங்கள் இனி வந்துகொண்டேதான் இருக்கும். இனி வரும் உருமாற்றங்களுடைய தாக்கம் முதல் மற்றும் இரண்டாம் அலைகளைவிட குறைவாகவே இருக்கும். அதனால் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா பெருந்தொற்று வெறும் சளி, காய்ச்சல் போல மாறியதால் இனி மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

London

கொரோனா பெருந்தொற்று மாதம், வருடம் என நீடித்துக்கொண்டே போகலாம். ஆனால் வீரியத்தன்மை குறைந்து இருப்பதால் அதிகளவில் பாதிப்பு ஏற்படுத்தாது. எனவே கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டுமே தவிர, கொரோனா பெருந்தொற்று முடிவடைந்துவிட்டது என்று அர்த்தம் இல்லை.

முதல் அலை மற்றும் இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்டவர்கள், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் போன்றவர்களும் கொரோனா வைரஸின் பிற உருமாற்றங்களால் பாதிக்கப்படுகிறார்கள். மருத்துவமனையில் இப்போதும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். தீவிர பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை தற்போது இல்லை. பாதிப்பு லேசானதாகவே இருக்கிறது.

COVID

உலக சுகாதார நிறுவனம், `இந்தத் தொற்றின் உருமாற்றங்கள் இன்னும் முடிவடையவில்லை. அதனால் சிறிது காலம் பொறுத்திருந்து பார்ப்போம்’ என்று சொல்கிறது. இருப்பினும், அந்தந்த நாடுகளில் இருக்கும் மக்கள்தொகையின் எதிர்ப்புசக்தி, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை போன்றவற்றைக் கணக்கிட்டு மந்தை எதிர்ப்பு சக்தி (Herd Immunity) உருவாகியிருக்கிறது என்பதால் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம் என்ற முடிவெடுத்துள்ளனர்.

முதல் மற்றும் இரண்டாம் அலைகளில் குழந்தைகளும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் கடுமையான பாதிப்பாக இல்லை. அதனால்தான் 12 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி தேவை இல்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாகவே கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் குழந்தைகளுக்கானது கிடையாது. இதன் பிறகு வரும் உருமாற்றங்களிலும் குழந்தைகளுக்குப் பெரியளவில் பாதிப்பு இருக்காது.

COVID-19 screening

தற்போது, சீனாவில் ஊரடங்கு போடப்பட்டு 26 கோடி மக்களைப் பரிசோதிப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் `ஜீரோ கோவிட்’ என்ற கணக்கை எட்டுவற்குத்தான். ஒருவேளை தீவிரமிக்க உருமாற்றங்கள் வந்தால் மீண்டும் மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் போன்ற கட்டுப்பாடுகள் மீண்டும் கட்டாயமாக்கப்படலாம். அரசு கட்டுப்பாடுகளை நீக்கினாலும் மாஸ்க் அணிவதன் மூலம் காசநோய் உள்ளிட்ட பல்வேறு வைரஸ் தொற்றுகள் தடுக்கப்படுவது நிரூபணமாகியுள்ளது. இதனால் உடல்நலத்தின் மேல் அக்கறை கொண்ட அனைவரும் மாஸ்க் அணிவது நல்லது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.