சட்டவிரோதமாக மணல் கடத்தல்: ஏற்கனவே 5 பாதிரியாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் முன்னாள் கனிமவளத் துறை அதிகாரியும் கைது…

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு, கிறிஸ்தவ தொண்டு நிறுவனம் என்ற பெயரில் சட்டவிரோதமாக மணல் கடத்தல் செய்த வழக்கில், ஏற்கனவே  கேரளாவைச் சேர்ந்த பிஷப் உள்பட 5 பாதிரியார்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு உதவிய முன்னாள் கனிமவளத் துறை உதவி இயக்குனர் சஃபியா கைது செய்யப்பட்டு உள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே, சட்டவிரோதமாக மணல் அள்ளிய வழக்கில் கேரளாவைச் சேர்ந்த பிஷப் மற்றும் 5 பாதிரியார்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.இந்த நிலையில், தற்போத  முன்னாள் கனிமவளத்துறை உதவி இயக்குனர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு, கேரளாவைச் சேர்ந்த மனுவேல் ஜார்ஜ் என்பவர், திருநெல்வேலி மாவட்டம் தெற்கு கல்லிடைக்குறிச்சி கிராமம் பொட்டலில், வண்டல் ஓடை தடுப்பணையில் இருந்து ஆற்று மணலை சட்டவிரோதமாக வெட்டி எடுத்ததோடு, நிலத்தை அபகரித்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, கைது செய்யப்பட்டார். சம்பந்தப்பட்ட நிலத்தில் பாறை கல், சரளை, கிரஷர் டஸ்ட் மற்றும் எம்-சாண்ட் ஆகியவற்றை சேமிக்கவும், விற்பனை செய்வதற்கான உரிமம் மனுவேலுக்கு இருந்தது. அங்கு ஆய்வு செய்த சேரன்மகாதேவி சப்-கலெக்டர், 27,773.66 கன மீட்டர் மணல் சட்டவிரோதமாக குவாரி மற்றும் வணிக நோக்கத்திற்காக கடத்தப்பட்டதாக மதிப்பீடு செய்தார். செப்டம்பர் 2019 இல், தமிழ்நாடு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சலுகை விதிகள், 1959 இன் விதிகளின் கீழ் மனுவேலுக்கு ரூ.9,57,21,578 அபராதம் விதிக்கப்பட்டது.

பின்னர், இந்த வழக்கை  சிபிசிஐடிக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.  விசாரணையில், இந்த மணல் கடத்தல் வழக்கில் கேரளாவைச் சேர்ந்த பிஷப் மற்றும் 6 பாதிரியார்கள் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. அவர்களை சிபிசிஐடி கைது செய்தது.

இந்த நிலையில், கல்லிடைக்குறிச்சியில் சட்ட விரோதமாக மணல் அள்ளிய வழக்கில், திருநெல்வேலி சுரங்கம் மற்றும் கனிமவளத் துறையின் முன்னாள் உதவி இயக்குநர் எஸ்.சஃபியாவை சிபிசிஐடி போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். 2019ஆம் ஆண்டு கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டலில் மணல் அள்ளிய வழக்கில் சஃபியாவுக்கு தொடர்பு இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். அவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டு, ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.