நுழைவுத்தேர்வின் ஆபத்து

ஒன்றிய அரசின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் பள்ளிக்கல்வியை உருத்தெரியாமல் அழித்து, ஒழிக்கும் நடவடிக்கையாகத்தான் இருக்கிறது. அது மருத்துவ படிப்பில் நீட் தேர்வை கட்டாயமாக அமல்படுத்திய வகை ஆகட்டும் அல்லது இப்போது ஒன்றிய பல்கலையில் மாணவர் சேர்க்கைக்கு கொண்டு வந்துள்ள பொது நுழைவுத்தேர்வு ஆகட்டும் அனைத்தும் 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவர்கள் தங்கள் கல்வித்திறனை மேம்படுத்தியதை ஒழித்து கட்டிவிட்டு பயிற்சி மையங்களின் வசூலுக்கு வகை செய்யும் நடவடிக்கை தான். பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கட்ஆப் அடிப்படையில் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கும்.  இதனால் ஏழை, எளிய மாணவர்கள் கூட எளிதாக அரசு மருத்துவ கல்லூரிகளில் படிக்க முடிந்தது.  தனியார் கல்லூரிகளிலும் கூட ஓரளவு வசதியான குடும்பத்து மாணவர்கள் தங்களுக்கான இடத்தை பணம் மற்றும் மதிப்பெண் அடிப்படையில் பெற முடிந்தது. இப்போது எல்லாமே தலைகீழ். பிளஸ் 2 தேர்வில் எத்தனை மதிப்பெண் எடுத்தாலும் யாரும் கண்டுகொள்ளப்போவது இல்லை. அது மருத்துவ படிப்புக்கு தேவையே இல்லை.  பிளஸ் 2 தேர்வில் ஜஸ்ட் பாஸ் போதும். நீட் பயிற்சி மையங்களில் தீவிரமாக பயிற்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்றால்தான்  எம்பிபிஎஸ் சீட் கிடைக்கும். இல்லை என்றால் தனியார் கல்லூரிகளில் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் கட்டி 5 ஆண்டு படிக்க வேண்டும். ஏழை, எளிய மக்கள் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எளிதாக படிக்க ஒன்றிய அரசு கொண்டு வந்த மாற்றத்தின் லட்சணம் இதுதான். ஒரு மாணவர் தனியார் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க குறைந்தது இப்போது ரூ.75 லட்சம் முதல் ரூ.1.50 கோடி வரை செலவாகிறது. இதுதான் உண்மை. சென்னை,கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள மாணவர்களுக்கே நீட் பயிற்சி நாக்கு தள்ளும் போது அரியலூர் அனிதா போன்ற ஏழை குடும்பத்து, எளிய கிராமத்து மாணவர்கள் கதி என்ன?…அந்த வகையில் தான் இப்போது ஒன்றிய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கு கொண்டு வரப்பட்ட பொதுநுழைவுத்தேர்வு. அவர்கள் பாணியில் சொல்லப்போனால் இந்த நுழைவுத்தேர்வு எல்லாம் யார் படிக்க வேண்டும், யார் படிக்க கூடாது என்பதை நிர்ணயித்து வடிகட்டும் முயற்சிதான். அதனால் தான் மதிப்பெண் கல்வி முறையை ஒழித்து, படிப்பை மதிப்பில்லாமல் மாற்றி,  பயிற்சி மையங்கள் மூலம் பெறும் தேர்வு வெற்றி கொண்டு மாணவர் சேர்க்கை நடத்த முயற்சிக்கிறார்கள். எதிர்கால முன்னேற்றத்திற்கான ஆயுதமாக கல்வியை மட்டும் தேர்வு செய்து போராடும் கோடிக்கணக்கான ஏழை, எளிய மாணவர்கள் வாழ்வில் தகுதித்தேர்வு நடத்தி படிப்பின் மதிப்பையே சீர்குலைக்கிறார்கள். அந்த வகையில் தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கொண்டு வந்த தீர்மானம் நிச்சயம் மாணவர்கள், பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.