ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து – 6 பேர் உயிரிழப்பு; ஏராளமானோர் காயம்

ஆந்திராவில் ரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 13-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஆந்திர மாநிலம் எலூர் மாவட்டத்தில் போரஸ் லேப்ராட்டரிஸ் என்ற பெயரில் ரசாயனத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று இரவு 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், இரவு 11.30 மணியளவில் அந்த தொழிற்சாலையின் கொதிகலன் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனைத்தொடர்ந்து, தொழிற்சாலை முழுவதும் தீ பரவியது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புப் படையினர் அங்கு வந்து ஒருமணிநேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும், 6 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 
image
அங்கு பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 13-க்கும் மேற்பட்டோரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதிக மின்னழுத்தம் காரணமாக கொதிகலன் வெடித்திருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிற்சாலை உரிமையாளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
image
இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அதேபோல, இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் உத்தரவிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.