“ராஜ் தாக்கரேவுக்கு பாஜக கொடுத்த பணியை செய்கிறார்!” – சரத் பவார் காட்டம்

மும்பையில் கடந்த இரண்டாம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, `மசூதிகளில் இருக்கும் ஒலி பெருக்கியை அகற்றவேண்டும், இல்லாவிட்டால் மசூதிக்கு வெளியில் ஒலி பெருக்கியை வைத்துக்கொண்டு அனுமான் பாடல்களை பாடுவோம்’ என்று எச்சரித்திருந்தார். அவர் எச்சரித்த உடன் மும்பையில் ஆங்காங்கே மசூதிக்கு வெளியில் ஒலி பெருக்கியை வைத்துக்கொண்டு ராஜ் தாக்கரே கட்சியினர் அனுமான் பாடல்களை பாடினர்.

அதோடு விடாமல் தாதரில் உள்ள சிவசேனா தலைமையகத்துக்கு வெளியிலும் அனுமான் பாடல்களை ராஜ் தாக்கரே கட்சியினர் பாடினர். இந்நிலையில் மும்பை அருகில் உள்ள தானேயில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராஜ் தாக்கரே, “மசூதிகளில் ஒலிக்கும் ஒலி பெருக்கிகளை உடனே அகற்றவேண்டும். வரும் மே 3-ம் தேதிக்குள் ஒலி பெருக்கிகளை அகற்றவேண்டும். அவ்வாறு அகற்றவில்லையெனில் எங்களது கட்சியினர் மசூதிக்கு வெளியில் ஒலி பெருக்கியில் அனுமான் பாடல்களை பாடுவார்கள்.

சரத் பவார்

மசூதி ஒலி பெருக்கியில் பாடக்கூடாது. வரும் மே 3-ம் தேதிக்குள் மசூதிகளில் இருக்கும் ஒலி பெருக்கிய மாநில அரசு அகற்றவேண்டும். இது ஒரு சமுதாய பிரச்னை, மத பிரச்னை கிடையாது. மாநில அரசுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். எங்களது முடிவில் இருந்து பின் வாங்க மாட்டோம்” என்று தெரிவித்தார். ராஜ் தாக்கரேயின் ஒலி பெருக்கிக்கு எதிரான பேச்சுக்கு மாநில அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜகவின் பேச்சை ராஜ் தாக்கரே பேசுவதாக சிவசேனா குற்றம் சாட்டியிருந்தது. அதே சமயம் இவ்விவகாரத்தில் ராஜ் தாக்கரேயிக்கு பாஜக ஆதரவு தெரிவித்தது.

இதற்கிடையே ராஜ் தாக்கரே பாஜகவின் உத்தரவை ஏற்று நடப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “ஒரே சிவில் சட்டம், மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது போன்றவை குறித்து ராஜ் தாக்கரே பேசுகிறார் என்றால் அது பாஜகவின் பேச்சை கேட்டுத்தான் பேசுகிறார். ஒலி பெருக்கியை அகற்ற ராஜ் தாக்கரே அரசுக்கு கெடு விதித்திருப்பதை அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. மகாராஷ்டிரா சமூக ஒற்றுமையில் பிரச்னையை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. மத கொள்கையை பரப்பவும் முயற்சி நடக்கிறது. அமைதிக்கு குந்தகம் விளைவிக்க நடக்கும் முயற்சிக்கு மக்கள் பலிகடாவாகிவிடக் கூடாது” என்றார்.

ராஜ் தாக்கரே

“நீங்கள் நாத்திகர் என்று ராஜ் தாக்கரே சொல்லி இருக்கிறாரே?” என்று கேட்டதற்கு, “நான் கோவிலுக்கு செல்வேன். ஆனால் அதனை வெளியில் காட்டிக்கொள்வதில்லை. பாஜகவின் வழிகாட்டுதலில் ராஜ்தாக்கரே பேசுகிறார். பாஜகவை பற்றி ஒரு வார்த்தை கூட ராஜ் தாக்கரே பேசவில்லை. அப்படி என்றால் என்ன அர்த்தம். அரசியல்வாதி என்று கூறிக்கொள்ளும் ஒருவர் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் குறித்து பேசவில்லை என்றால் என்ன அர்த்தம்? பாஜக அவருக்கு கொடுத்த பணியை செய்கிறார். பாஜகவுக்கும், அவருக்கும் என்ன ஒப்பந்தம் என்று தெரியவில்லை. ஆனால் முழுக்க தேசியவாத காங்கிரஸ் கட்சியை பற்றித்தான் பேசியிருக்கிறார். துணை முதல்வர் அஜித்பவாரின் குடும்ப உறுப்பினர்களின் வீடுகளில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ரெய்டு நடத்தி இருப்பதாக ராஜ் தாக்கரே கூறியிருப்பது குழந்தைத்தனமானது. ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்திற்கு ஒரு முறை அறிக்கை விடுபவர்களை பற்றி மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்தார். அடுத்த சில மாதங்களில் நடக்க இருக்கும் மாநகராட்சி தேர்தலில் பாஜகவும், ராஜ் தாக்கரே கட்சியும் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.