டான்களையெல்லாம் அடித்து ’மான்ஸ்டர்’ ஆனதுபோல், பல ஹிட் படங்களையெல்லாம் சுட்டுத்தள்ளிவிட்டு மாபெரும் ஹிட் கொடுத்திருக்கிறது ‘கேஜிஎஃப் 2’. ‘வந்துட்டான்… வந்துட்டான்’ என்கிற ஆர்ப்பரிப்புடன் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் இந்திய ரசிகர்கள். ஒரு கன்னடப் படத்தை இப்படி ஒட்டுமொத்த இந்தியாவே எக்காள சப்தம் முழங்க கொண்டாடித் தீர்ப்பது இது இரண்டாவது முறை. ’யாரோ பத்து பேரை அடிச்சி டான் ஆகல, அவன் அடிச்ச பத்து பேருமே டான் தான்’, ’அவன் கத்தி வீசுன வேகத்துல ஒரு புயலே உருவாகிடுச்சி’ என இரண்டு பாகத்திலும் இடம்பெற்ற வசனங்களே இக்கொண்டாட்டத்திற்கு இன்னொரு காரணம். அப்படி, வசனங்களை தமிழுக்கு ஏற்றார்போல் மாற்றம் செய்து பில்டப்பாய் பிளிற வைத்தவர் ’கேஜிஎஃப் அண்ட் 2’ தமிழ் வசனகர்த்தா கேஜிஆர் அசோக். தமிழுக்கு ஏற்றவாறு வசனங்கள் அமைத்ததோடு ’கேஜிஎஃப் 2’ வில் இணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
’டெர்மினேட்டர்’, பிரபாஸின் ‘சாஹோ’, சமீபத்தில் வசனங்களுக்காக பாராட்டுக்களைக் குவித்த ‘ஷ்யாம் சிங்கா ராய்’ உள்ளிட்டப் படங்களையும் தமிழுக்கேற்றவாறு வசனம் அமைத்து கொண்டாட வைத்தவரும் கேஜிஆர் அசோக்தான். அவரிடம், சலாம் சொல்லி பேசினோம்,
கேஜிஆர் அசோக்.. ’கேஜிஎஃப்’ படத்திற்காக மாற்றிக்கொண்டப் பெயரா?
”கீழப்பழுவூர் கணேசன் ராஜம் மகன் அசோக். அதுதான் கேஜிஆர் அசோக். மற்றபடி இதற்கும் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ‘கேஜிஎஃப்’ பிரஷாந்த் நீல் உருவாக்கினது. ‘கேஜிஆர்’ எங்க அப்பா உருவாக்கினது”.
’கேஜிஎஃப் 1 அண்ட் 2’ தமிழுக்கு புரியும்படி மொழிமாற்றம் செய்த அனுபவம் ப்ளஸ் சவால்கள்?
”எனக்கு கன்னட மொழி தெரியாது. கலை மட்டுமே தெரியும். முதலில் கதையை அனுப்புவார்கள். அதனை, தமிழுக்கேற்றவாறு மாற்றம் செய்து டம்மி வெர்ஷன் வைத்து எழுதுவோம். அதன்பிறகுதான், படத்தை அனுப்புவார்கள். படத்தைப் பார்த்து உதடு அசைவுகளுக்கு ஏற்றவாறு தமிழில் வசனத்தை மாற்றியமைப்பேன். ஒவ்வொரு படத்திற்கும் மொழிபெயர்ப்பாளரை வைத்துக்கொள்வேன். அவர், கன்னட அர்த்தத்தை தமிழில் சொல்வார். அதனை தமிழுக்கேற்றவாறு மேட்ச் செய்துகொள்வேன். வசனம் எழுதுவதை விட இதற்கு எழுதுவதுதான் மிகக் கடினமான வேலை. கன்னடமும் தமிழும் வெவ்வேறு மொழிகள். அங்கு இருக்கும் வார்த்தைகள் நம் மொழியில் இருக்காது. கதைதான் ஒன்றாக இருக்கும்.
கன்னடத்தில் ‘உட்டா பேக்கு’ என்றால் சாப்பாடு வேணும் என்று அர்த்தம். அதனை, ’சாப்பாடு வேணுமா? உணவு வேணுமா?ன்னு லிப் சிங்க்கைப் பார்த்து மேட்சாகும்படி எழுதவேண்டும். இதழ் ஒத்திசை படி தமிழ் படம் மாதிரியே கொடுக்கவேண்டும். அதுதான் இதிலுள்ள வித்தை.
‘கேஜிஎஃப்’ கன்னடப் படத்தைப் பாருங்கள். அதன்பிறகு தமிழைப் பாருங்கள். நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பது தெரியும். கன்னடம், தெலுங்கு, ஆங்கிலப் படங்களுக்கு மொழிமாற்றம் செய்துவிட்டேன். விரைவில் மலையாளப் படத்திற்குச் செய்யவிருக்கிறேன். எனக்கு இந்த மொழிகள் எதுவும் தெரியாது. ஆனால், கலைத் தெரியும். சீன மொழி படம் கொடுத்தாலும் பண்ணுவேன்.
‘கேஜிஎஃப் 2’ படத்திற்கு கன்னடத்தில் சந்திரமெளலி, நாயகன் யஷ், பிரஷாந்த் நீல், சூரி என நான்கு பேர் வசனங்கள் எழுதினார்கள. அதனை, நம் தமிழ் மொழிக்கு ஏற்றவாறு தமிழ்படுத்தி மொழிமாற்றம் செய்தேன். இயக்குநருக்கு என்னத் தேவை என்பதைத் தெரிந்து வசனங்களை மாற்றியமைப்பது மட்டும் வேலை இல்லை. ரசிகர்களை ஒன்றிப் பார்க்கவைக்க வேண்டுமல்லவா? வசனத்தோடு, அதற்கேற்ற வாய்ஸ்களை செலெக்ட் செய்வது, கன்னட ஒரிஜினலில் எப்படி வைத்திருக்கிறார்கள், அதற்குத் துளியும் டெம்ப்போ குறையாமல் நம் ஆர்டிஸ்ட்களிடம் வேலை வாங்குவது என பெரிய பணியே உள்ளது. வசனங்களை மொழிமாற்றம் செய்ததோடு மற்ற அனைத்துப் பணிகளையும் நான்தான் செய்தேன்”.
இதற்கெல்லாம் இன்ஸ்பிரேஷன் யார்?
”என் குருநாதர் கமல்ஹாசன் கற்றுக்கொடுத்தப் பாடம் இது. அவரின் ‘ஹேராம்’, ‘ஆளவந்தான்’, ‘விருமாண்டி’ படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளேன். அந்தப் பல்கலைக்கழகத்தில் படித்தப் படிப்புதான் இதற்கெல்லாம் காரணம்”.
’கேஜிஎஃப் அண்ட் 2’ தமிழுக்கு ஏற்றவாறு மாற்றிய வசனங்கள் சிலவற்றை சொல்ல முடியுமா?
“அப்படியெல்லாம் சொல்ல முடியாது. எல்லாமே என் வசனங்கள்தான். அது அவர்கள் டயலாக், இது என் டயலாக் என்று பிரித்துப் பார்க்க முடியாது. ’கேஜிஎஃப்’ பான் இந்தியா படம். ஒருவரின் தனிப்பட்ட வெற்றி அல்ல. இந்தியா முழுக்க கொண்டாடுவதால் மொத்த படக்குழுவின் வெற்றி. நான் செய்த வேலையை மக்கள் ரசிக்கணும். அதை செய்துவிட்டேன்”.
’கேஜிஎஃப் 2’வில் இணை இயக்குநராக பணியாற்றிய அனுபவம்?
“50 நாட்கள் இணை இயக்குநராக பணியாற்றிக்கொடுத்தேன். ’படத்தின் பிகினிங் வரை இருங்க’ என்றார் பிரஷாந்த் நீல். ஒரு இணை இயக்குநர் என்ன பணிகளைப் பார்ப்பாரோ அத்தனை பணிகளையும் பார்த்தேன். அதற்குப்பிறகு, எனக்கு வரிசையாக டப்பிங் படங்கள் வந்ததால், அவரிடம் சொல்லிவிட்டு வந்துவிட்டேன். ‘கேஜிஎஃப் 2’ படத்திற்காக பெரிதாக செட்டிங் எல்லாம் போடவில்லை. கர்நாடகா, ஆந்திரா என எல்லாமே உண்மையான இடங்களில்தான் படமாக்கினோம். கேஜிஎஃப் தொடர்பான காட்சிகளை உண்மையாகவே கேஜிஎஃப்பில் படமாக்கினோம். அந்த இடமே ஒரே புழுதியும் தூசியுமாக இருக்கும். ஷூட்டிங் போகும்போது எல்லோரும் ஃப்ரெஷ்ஷாக போவோம். மாலை வந்து குளித்தால் எல்லாம் ஒரே அழுக்கும் தூசியாக இருக்கும். ‘மன்மதராசா’ பாடலும் அங்குதான் எடுத்தார்கள்.
பிரஷாந்த் நீலின் அடுத்தப் படமான ‘சலார்’ படத்தில் உங்கள் பங்களிப்பு?
”இதுவரை ஒன்றும் சொல்லவில்லை. இனிமேல் கண்டிப்பா இருக்கும்”.
யஷ் – பிரஷாந்த் நீல் இருவருடனும் பணியாற்றிய அனுபவம்?
”யஷ் ‘கேஜிஎஃப்’ படத்திற்காக முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டார். இதுவரை எந்தப் படத்தையும் ஒப்பந்தம் செய்யவில்லை. இதற்காகவே, காத்திருந்தது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை யோசிக்கவேண்டும். பணத்தை மட்டுமே நினைத்திருந்தால் இன்னும் மூன்று படம் பண்ணிருக்கலாம். ஆனால், அந்தக் கேரக்டராவே வாழ்ந்து தவமாய் இருந்து நடிப்பதுபோல் நடித்தார். யஷ் பழக ரொம்ப எளிமையானவர். ரொம்ப அர்ப்பணிப்பு உணர்வோட இருப்பார். முன் தயாரிப்புடன் வந்து பக்காவாக நடிப்பர். அவரை நார்மலாக இருப்பதற்கும் ஃப்ரேமில் பார்ப்பதற்கும் வேற மாதிரி இருக்கும். ஒவ்வொரு காட்சியையும் எப்படி பண்ணவேண்டும் என்று மிகத் தெளிவா இருப்பார்.
பிரஷாந்த் நீல் மிக புத்திசாலியான குழந்தை மனம் படைத்தவர். படத்தில் அவ்வளவு ஆக்ஷன் காட்சிகள் வைக்கிறார். ஆனால், நேரில் பழகும்போது, இவரா இப்படியெல்லாம் பண்றாருன்னு தோணும். சாஃப்டான ஒருத்தரிடம் இருந்து எப்படி இவ்ளோ வயலன்ஸ் வருதுன்னு யோசிக்க வச்சிடுவார். யஷ் கேமரா முன்னாடி சிங்கமா இருப்பார். இவரு கேமராவுக்கு பின்னாடி சிங்கமா இருப்பார். யஷ்ஷை மட்டுமல்ல சின்ன சின்ன ரியாக்ஷகளைக்கூட எல்லாரையும் நல்லா நடிக்க வைத்துவிடுவார். காட்சிகளை எடுத்துவிட்டு கட் செய்வது என்பதே அவரிடம் கிடையாது. என்ன வேண்டும் என்பதை முன்கூட்டியே சிந்தித்து தெளிவாக எடுத்துவிடுவார். பிரஷாந்த் நீல் போலவே ஒளிப்பதிவாளர் புவன் கெளடா, கலை இயக்குநர் சிவக்குமார், உதவி இயக்குநர்கள் என அனைத்து படக்குழுவினரும் உழைப்பைக் கொட்டினார்கள்.
’கேஜிஎஃப்’ படத்தின் மையமே அம்மா செண்டிமெண்ட்தான். உங்கள் அம்மா சிறு வயதிலிருந்து உங்கக்கிட்ட சொல்லி வளர்த்த விஷயம் என்ன?
”என்னோட சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர். படித்தது வளர்ந்தது எல்லாமே தஞ்சாவூர்தான். அதன்பிறகு பல போராட்டங்களைச் சந்தித்து கமல் சாரிடம் உதவி இயக்குநராக சேர்ந்தேன். டிஜிட்டல் முறையில் முதல் முதலாக படம் இயக்கினேன். ஆனால், அது சரியாக போகவில்லை. அதன்பிறகு, புரொடொகஷன் பக்கம் சென்று பல அவதாரங்கள் எடுத்து இன்று மொழிமாற்றம் செய்கிறேன். இதுவும் சிறப்பாக போய்க்கிட்டிருக்கு. ஆனால், என் அம்மா ராஜத்துக்கு நான் சினிமா வந்தது பிடிக்கவில்லை. அதன்பிறகுதான், ஒத்துக்கொண்டார். ‘சாகுறவரை நல்லவனா இரு’ என்று சொல்லி வளர்த்தார். அவ்வளவுதான். ‘கேஜிஎஃப்’ முதல் பாகம் வரும்போது பார்த்து சந்தோஷப்பட்டார். ஆனால், இரண்டாம் பாகம் வரும்போது அம்மா பார்க்க உயிருடன் இல்லை. அந்த குறைதான் எனக்கு உள்ளது. ’கேஜிஎஃப்’ பார்க்கும்போது என்ன உணர்வு உங்களுக்குத் தோன்றியதோ அதுதான் என் தாயைப் பற்றிய உணர்வு. அதனை ஃபீல் பண்ணியதால்தான், உணர்வுப்பூர்வமாக மொழிமாற்றம், டப்பிங் எல்லாம் கொண்டுவர முடிந்தது. அம்மாதான் என் உணர்வு; உயிர்.
மொழிபெயர்ப்பு தமிழில் யார் நடித்தால் நல்லா இருக்கும் என்று நினைகிறீர்கள்?
“ஏற்கனவே ஹிட் ஆனதை யார் நடித்தாலும் சொல்ல முடியாது. அதனால், நான் நடிச்சா நல்லாருக்கும். நாம் உட்கார்ந்து பண்ணும்போது கதாபாத்திரங்கள்தான் கண்முன் நிற்கும். ராக்கி பாய் மட்டும்தான் கண்முன் இருந்தார். கூட்டத்தில் அதிரா உயிரோட வந்துட்டான்னு சொல்பவனும் என் கதாநாயகன் தான். ஏன்னா நான் ராக்கிபாயை பார்த்துட்டு அவனை விட்டுட்டா படம் வீணாப்போய்டும். இவுங்க அவுங்க இல்லை. எல்லாருமே ஒண்ணுதான்.
’கேஜிஎஃப் 3’ அட்டேட்?
”‘கேஜிஎஃப் 3’ கண்டிப்பா வரும்னு தெரியும். ஆனா, எப்போ வரும்னு தெரியாது”
‘கேஜிஎஃப் 2’ படத்திற்குக் கிடைத்த வரவேற்பு குறித்து?
”மகிழ்ச்சியாக உள்ளது. கமலா தியேட்டரில் பார்க்கும்போது ஓப்பனிங் காட்சிகளில் கைத்தட்ட ஆரம்பித்தவர்கள் ’பார்ட் 3’ வரும்வரை கைத்தட்டிக் கொண்டே இருந்தார்கள். இப்படியொரு கொண்டாட்டத்தைப் பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சி. ’கேஜிஎஃப்’ முதல் பாகம் முள்பாதை போன்றது. அதுதான் ’கேஜிஎஃப் 2’ கொண்டாட்டத்துக்கான அடித்தளம். இந்தக் கொண்டாட்டத்தை ’கேஜிஎஃப்’ க்கு எதிர்பார்த்தேன். ஆனால், தியேட்டரைவிட ஓடிடியில்தான் பெரிய ஹிட் ஆச்சு. ’கேஜிஎஃப் 2’ ரோஜா பாதை. இரண்டுக்கும் இதுதான் வித்தியாசம்.
’கேஜிஎஃப்’ முதல் பாகம் அளவுக்கு ‘கேஜிஎஃப் 2’ வில் பஞ்ச் இல்லைன்னு விமர்சனங்கள் வருகிறதே?
“கன்னடத்தில் அவர்கள் என்ன வைத்திருக்கிறார்களோ, அதையொட்டிதான் பயணப்பட முடியும். முதல் பாகம் போலவே இதிலும் ஒரே உழைப்பைத்தான் கொட்டினேன். வசனம் குறைவா இருந்தா, ஈர்க்கவில்லை என்றால் என்ன? தியேட்டரில் மக்கள் கூட்டம் குறைவாவா இருக்கு? ஆபரேஷன் பண்ணும்போது நோயாளி பிழைத்துவிட்டாரா என்பதுதான் முக்கியம். கொஞ்சம் ரத்தம் போச்சி என்பது தேவையில்லாதது. அப்படித்தான் இதுவும். வசனங்கள் ஈர்க்காததுபோல் மக்கள் பார்வையில் தெரியவில்லை. ஒருவேளை விமர்சகர்களுக்குத் தெரியலாம். ரசிகர்கள் எல்லா வசனங்களுக்கும் கைத்தட்டிக் கொண்டாடுகிறார்கள். முதல் பாகத்தில் அப்படியான வசனங்கள் தேவைப்பட்டதால் வைத்திருந்தார்கள். இரண்டாம் பாகத்துக்கு தேவைப்படவில்லை என்பதால் வைக்கவில்லை”
அடுத்தப் படங்கள்?
”நான்கு பெரியப் படங்களுக்கு மொழிமாற்றம் செய்கிறேன். அதனை அறிவிப்பார்கள். அக்ரீமெண்ட் படி இப்போதும் எதுவும் சொல்ல முடியாது”.
– வினி சர்பனா