எஸ்சி, எஸ்டி பிரிவினர் பின்னடைவாக உள்ள 10 ஆயிரம் பணியிடத்தை நிரப்ப சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம்

சென்னை: அரசுத் துறைகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினர் பின்னடைவாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம் நடத்த அரசாணை வெளியிடப்பட்டது.

இதுதொடர்பாக ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை செயலர் க.மணிவாசன் வெளியிட்ட அரசாணை:

அரசுத் துறைகளில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம் மூலம் நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின்போது அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அனைத்து துறைகளிடம் இருந்து தொகுதி வாரியாக பணியிடங்கள் விவரங்கள் பெறப்பட்டன.

அதன்படி, எஸ்சி பிரிவினருக்கான பிரதிநிதித்துவம் 8,173 இடங்களும், எஸ்டி பிரிவினருக்கான பிரதிநிதித்துவம் 2,229 இடங்களும் பற்றாக்குறையாக இருப்பது கண்டறியப்பட்டது. இந்த பணியிட பற்றாக்குறையை, துறை சார்ந்து சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம் மூலமாக நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, பணியிடங்களை விரைவாக நிரப்ப சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஆணையிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசுத் துறைகளில் இடஒதுக்கீட்டுக்கு ஏற்ப, அதற்கான பணியிடங்களை நிரப்ப அந்த பிரிவை சேர்ந்த நபர்கள் இல்லாதபோது, பின்னடைவு பணியிடங்கள் உருவாகின்றன.

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு முறையே உள், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறையில் 6,861 மற்றும் 229, பள்ளிக்கல்வித் துறையில் 446 மற்றும் 249, சுகாதாரத் துறையில் 173 மற்றும் 305 என பின்னடைவு பணியிடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.