`நிழல் தந்தது, மழையில் காத்தது!'-பட்டுக்கோட்டையில் வெட்டி வீழ்த்தப்பட்ட புளிய மரத்தின் கண்ணீர்க் கதை

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகரப்பகுதியில் மக்கள் வாழ்வோடு ஒன்றாகிக் கலந்து நின்ற 200 ஆண்டு பழைமையான புளிய மரம் சாலை விரிவாக்கப் பணிக்காக வெட்டி அகற்றப்பட்டது. இந்தச் சம்பவம் இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப் பலரையும் வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது. மரம் அழிக்கப்பட்டது குறித்தான ஆதங்கத்தையும், அதன் நினைவுகளையும் வெளிப்படுத்தி வருவதுடன் பழைமையான மரங்களைக் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அழுத்தமான கோரிக்கையையும் அப்பகுதியினர் எழுப்பி வருகின்றனர்.

சாலை விரிவாக்க பணிக்காக வெட்டப்பட்ட மரம்

பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் சாமியார் மடம், வெங்குடு சுப்பையா கோயிலுக்கு அருகில் 200 ஆண்டுகள் பழைமையான புளிர மரம் ஒன்று இருந்தது. மரம் என்று சொல்வதைவிட ஐந்து தலைமுறைகளைக் கடந்து அனைவரின் வாழ்விலும் கலந்து உணர்வாக மாறிப்போன உறவு என்றே சொல்லலாம்.

கஜா புயல் உள்ளிட்ட பெரும் இயற்கை சீற்றங்களை எதிர்கொண்டு வீழ்ந்து விடாமல் நான் இருக்கிறேன் எனக் கூறி வெயில் காலங்களில் நிழல் தந்தும்,மழைக்காலங்களில் குடையாக மாறி அனைவரையும் காத்து வந்தது. மரத்துக்கு அடியில் கடை வைத்து வியாபாரம் செய்து பல குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. சொல்லப்போனால் பட்டுக்கோட்டையின் அடையாளமாக இருந்து வந்த அந்த மரம் இரக்கமே இல்லாமல் அதிகாரிகளால் அழிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் பல ஆண்டுகள் கம்பீரமாக வாழ்வதற்கான சக்தியைக் கொண்டிருந்த அந்தப் புளிய மரம் வெட்டி வீழ்த்தப்பட்டிருக்கிறது.

மரம்

யாருக்கும் தொந்தரவு தராமல் பயனை மட்டுமே கொடுத்து சாலையின் ஓரத்தில் அமைதியாக இருந்த மரத்தை சாலை விரிவாக்கப் பணிக்காக நெடுஞ்சாலைத் துறையினர் துண்டு துண்டாக வெட்டிவிட்டனர். மரத்தை வெட்ட வேண்டாம் என சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்து வந்த நிலையில் இரவோடு இரவாக மரத்தை வெட்டி அதன் உயிரைக் கொன்று துண்டு துண்டாக்கி மரம் இருந்த சுவடே தெரியாத அளவுக்கு அந்த இடத்தை மாற்றிவிட்டனர்.

மரம் இருந்த இடம் வெறிச்சோடி காணப்படுகிறது. வெட்டப்பட்டு ஒரு வாரம் ஆனாலும், பலருக்கு அதன் ஆதங்கம் குறையவில்லை. மனசுக்கு நெருக்கமான உயிரை இழந்துவிட்டதாகப் புலம்பி வருவதுடன் தங்கள் மனக் குமுறலையும் வேதனையையும் சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். இனி அந்த மரம் திரும்பி வரப்போவதில்லை. ஆனால், இனிமேல் மக்கள் வாழ்வுடன் கலந்த பழைமையான மரங்களை வெட்டக் கூடாது மரங்களைக் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுப்பி வருகின்றனர்.

ஆதி.ராஜாராம்

சமூக ஆர்வலரான ஆதி.ராஜாராம் என்பவரிடம் பேசினோம், “பட்டுக்கோட்டையின் ஜங்ஷனாக இருந்து அனைவரையும் இணைக்கும் பாலமாக இருந்து வந்தது அந்தப் புளிய மரம். 15 அடி சுற்றளவுடன் பிரமாண்டமாக நின்று அறிவிக்கப்படாத பேருந்து நிறுத்தமாகவும் பயனளித்தது. மரத்தின் அடிப்பகுதியில் ஒரே நேரத்தில் நூறு பேர் வரை நிற்கலாம். அந்தளவுக்கு பரந்து விரிந்து நிழல் பரப்பிக்கொண்டிருந்தது.

பலரின் சுக துக்க உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய இடமாகவும் இருந்து வந்தது. சீஸனுக்கு ஏற்றாற்போல் சிறு வியாபாரிகள் கடை வைத்து பிழைத்து வந்தனர். அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் காய்கறிகள், கீரை போன்றவை விளைவித்து விற்பனை செய்யக்கூடிய மார்க்கெட்டாகவும் பயன்படுத்தி வந்தனர். முன்னோர்களை இழந்த குடும்பத்தினர் தங்கள் முன்னோருக்கும், மரத்துக்குமான உறவை அசைபோடுகின்ற நினைவுச் சின்னமாகி உணர்வுடன் கலந்திருந்தது.

பட்டுக்கோட்டையில் வெட்டப்பட்ட மரம்

கஜா புயலில் அப்பகுதியில் இருந்த பல மரங்கள் விழுந்த நிலையில் அந்தப் புளிய மரம் மட்டும் உறவாக நினைத்த மக்களுக்கு பயன் தருவதற்காகத் தன் உயிரைத் தாங்கிப் பிடித்து நின்றுகொண்டிருந்தது. பெரியவர்கள் நல்லது, கெட்டது என அனைத்தையும் மரத்துக்கு அடியில் நின்றபடி பேசி கலைவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள் பெயர் வச்சு அழைக்கும் அளவுக்கு அனைவர் மனதிலும் அதன் வேர் ஆழமாகப் பதிந்திருந்தது.

இத்தகைய சிறப்பு மிக்க புளிய மரத்தை சாலை விரிவாக்கப் பணிக்காக வெட்ட வேண்டும் என நெடுஞ்சாலைத் துறையினர் முயற்சி செய்தனர். இதையறிந்த பொதுமக்கள் பதறிப்போய் எந்தத் தொந்தரவும் இல்லாமல் ரோட்டோரத்துல நிற்கும் மரத்தை எதுக்கு வெட்ட வேண்டும் என எதிர்ப்பு குரல் கொடுத்து வந்தனர். மரம் காப்பதை வலியுறுத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அதிகாரிகளும் பரிசீலனை செய்வதாக வாக்கு கொடுத்துவிட்டுச் சென்றனர். பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்ற நிலையில் மக்கள் கவனம் முழுவதும் அதில் இருக்க இரவோடு இரவாக மரத்தை வெட்டி அப்புறப்படுத்திவிட்டனர். காலையில் மரம் காணாததைக் கண்ட பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

பட்டுக்கோட்டை

கண்ணீர் விட்டனர். நெருக்கமான சொந்தத்தை இழந்த பதரிதவிப்பு எங்களுக்கு ஏற்பட்டது. மனிதர்களைப் போலவே மரங்களுக்கும் உயிர், உணர்வு உண்டு. பல ஆண்டுகள் வாழ வேண்டிய மரம், சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக வெட்டப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கொந்தளித்தனர்.

மக்களைக் காக்கப்பது போலவே மரங்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை என்றும், மரம் வெட்டப்பட்டதின் வேதனை தாங்க முடியாமலும் பலர் சமூக வலைதளங்களில் மரம் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். பட்டுக்கோட்டை மக்களின் மனங்களில் பதிந்த அந்தப் புளிய மரம் வெட்டப்பட்டது பெரும் துயரம். இனிமேலாவது வளர்ச்சி திட்டங்களுக்காக மரங்கள் வெட்டப்படுவதை அரசு தடுக்க வேண்டும். வெட்டப்பட்ட மரம் மீண்டும் உருவாக வேண்டும் என்றால் பல ஆண்டுகள் ஆகும். தொழில்நுட்பங்கள் வளர்ந்த காலத்தில் வேருடன் பிடிங்கி வேறு இடத்திலாவது வைத்திருக்கலாம் அதையும் செய்யத் தவறி விட்டது அரசு” என்று குமுறலுடன் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.