“மக்கள் மனதில் இடம்பெறாத காங்கிரஸின் எதிர்காலம் இனி கேள்விக்குறிதான்!" – சொல்கிறார் ஜி.கே. வாசன்

பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில், அமைதியின் மற்றொரு வடிவமாக வலம்வரும் ஒரு அரசியல்கட்சித் தலைவர், ஜி.கே. வாசன். தற்போது, தி.மு.க அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்பாட்டம் நடத்தியும், ராஜ்ய சபாவில் தனது கருத்துகளை வலுவாக முன்வைத்தும் மீண்டும் ஃபார்முக்கு வந்திருக்கிறார். இந்த நிலையில், ஜி.கே. வாசனைச் சந்தித்தோம்…

“கட்சி தொடங்கி 8 ஆண்டுகளில் த.மா.கா தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது! கூட்டணி விஷயத்தில் த.மா.கா தவறிழைத்துவிட்டதாகக் கருதுகிறீர்களா?”

“கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில், மூன்றாவது அணியில் (ம.ந.கூ) இடம்பெற முடிவெடுத்தோம். அந்த முடிவு, த.மா.க-வுக்கு மட்டுமல்ல, கூட்டணியில் சேர்ந்துபோட்டியிட்ட எந்த கட்சிக்கும் பலனளிக்கவில்லை; 2019 தேர்தலில் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றோம். மத்தியில், மாநிலத்தில் ஆண்டுகொண்டிருந்த கட்சிகளுடனான வலிமையான கூட்டணிதான் அது! ஆனால், தமிழக மக்கள் அவர்களின் எண்ணம்போல் வாக்களித்துவிட்டார்கள். அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதேபோல, 2021 தேர்தலில் எங்களால் வெற்றிபெற முடியவில்லையென்றாலும், கூட்டணி கட்சிகள் வெற்றிபெற்ற இடங்களில் எங்களின் பங்கும் இருக்கிறது. ஆக, கூட்டணியில் தவறோன்றுமில்லை; இனிவரும் காலங்களில் சிறப்பாக செயல்படுவோம்.”

ஜி.கே. வாசன்

தொடர்ந்து பா.ம.க., பா.ஜ.க., போன்ற கட்சிகள் அ.தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டன. த.மா.கா இன்னும் அ.தி.மு.க கூட்டணியில்தான் இருக்கிறதா?

“நாங்கள் வெளியேறிவிட்டோம் என்று அறிவிக்கவில்லையே! உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு ஆர்வம் கூட, அதிக இடங்களில் நின்று வெற்றிபெறவேண்டும் என நினைத்தார்கள். அதனால், தொகுதிப்பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டு கூட்டணி பிளவுபட்டது. நாங்களும் அப்படியான சிக்கலை எதிர்கொண்டோம். இருந்தாலும், கூட்டணி தர்மத்தை மதித்து செயல்படுகிறோம். தொடர்கிறோம்!”

“2024 தேர்தலில் யாருடன் கூட்டணி… இந்த கூட்டணி தொடருமா?”

“இப்போதிருக்கும் கூட்டணி தொடர்ந்து, எதிர்காலத்தில் வெற்றிபெறவேண்டும் என்பதுதான் எண்ணம். இப்போதைக்கு கூட்டணி மாறுவதற்கான எந்த அவசியமும் எங்களுக்கு ஏற்படவில்லை.”

நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலில் தேசிய காங்கிரஸின் படுதோல்விக்கு, காந்தி குடும்பம்தான் காரணம் என்ற இரண்டாம் கட்ட தலைவர்களின் குற்றச்சாட்டை எப்படி பார்க்குறீங்க?

“என்னுடைய சப்ஜெக்ட் `ஆல் இண்டியா’ சப்ஜெக்ட் அல்ல; `தமிழ்நாடு’தான் என் சப்ஜெக்ட்! காங்கிரஸ் கட்சியைப் பற்றி டீப் அனாலிசிஸ் செய்ய விரும்பவில்லை! ஆனால், 5 மாநில தேர்தல் முடிவை வைத்து ஒன்றை சொல்லமுடியும். அகில இந்திய அளவில் பா.ஜ.க தன் பலத்தை கூட்டிக்கொண்டிருக்கிறது, காங்கிரஸ் இழந்துகொண்டிருக்கிறது! எப்போது மக்கள் மனதில் தொடர்ந்து இடம்பெறவில்லையோ, அப்போதே காங்கிரஸின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது.”

ஜி.கே. வாசன்

“`அரசியல் பயணத்துக்கான நேரம் வந்துவிட்டது’ என சசிகலாவும், `இதோடு அரசியலைவிட்டு விலகுவது சசிகலாவுக்கு நல்லது’ என அ.தி.மு.க ஜெயக்குமாரும் கூறிவருகின்றனர். இதுபற்றி…”

“அ.தி.மு.க-வின் ஒரு முக்கியமான கூட்டணிக் கட்சியாக த.மா.கா இருக்கிறது. அதனால், அந்தக் கட்சியின் உள் விவகாரங்களைப் பற்றி பேசுவதைத் தவிர்ப்பதுதான், த.மா.கா-வின் தலைவராக இருக்கும் எனக்கு நல்லது!”

“பேரறிவாளனுக்கு சுப்ரீம் கோர்ட் நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கியிருப்பது பற்றி உங்களின் கருத்து..?”

“சட்டம் தன் கடமையை செய்யட்டும்!”

பத்துமாத கால தி.மு.க ஆட்சியின் சட்ட ஒழுங்கு எப்படி இருக்கிறது?

“தமிழகத்தில் செயின் பறிப்பு, வீடுகளில் கொள்ளை, முதியவர்கள், குழந்தைகள், பெண்களுக்கெதிரான குற்றங்கள் என தொடர்ந்து அதிகரித்து வருவதை ஊடகங்களில் பார்க்கிறேன். அரசும், காவல்துறையும் இவற்றை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும். குறிப்பாக, பாலியல் வன்கொடுமை என்பது வயது வித்தியாசமின்றி நடந்துகொண்டிருக்கிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், நீண்ட விசாரணையை குறைத்துக்கொண்டு, உடனடியான அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும். இதிலெல்லாம் மனிதாபிமானம், மனித உரிமை என்றெல்லாம் பார்க்கக்கூடாது. என்னைக்கேட்டால், தூக்குத்தண்டனைகூட சரி என்பேன்!”

ஜி.கே. வாசன்

“1996-ல் நடிகராக ரஜினி த.மா.கா-வை ஆதரித்து பிரசாரம் செய்தார். தற்போது தளபதி டூ தலைவனாக… விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா?”

“இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலோ, தேர்தல் ஆணைய விதிமுறைகளிலோ ஒருவர் ஒரு கட்சியில் சேரக்கூடாது, கட்சி ஆரம்பிக்கக்கூடாது, தலைவனாகக்கூடாது, கட்சி மாறாக்கூடாது என எந்த விதிமுறைகளும் இல்லை; இது ஜனநாயக நாடு; யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்!”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.