எவர்கிரீன் (84) எஸ்.ஜானகி…

நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…
மக்குத் தெரிந்த வரையில் எஸ்.ஜானகி மிகப்பெரிய பாடகி என்றாலும் அவருடைய வாழ்க்கையில் வெற்றியும் அங்கீகாரமும் அவருக்கு தாமதமாகத்தான் கிடைத்தன. இந்தக் கோபத்தை அவரே ஒருமுறை நன்றாக வெளிப்படுத்தினார்.
2013ஆம் ஆண்டு.மத்திய அரசின் மத்திய அரசின் மிக உயர்ந்த மூன்றாவது விருதான, பத்ம பூஷண் அறிவிப்பு. ஆனால் ஜானகியோ தனக்கு வேண்டவே வேண்டாம் என்று விருதையே நிராகரித்தார். ஒரு இசையரசின் தன்மான உணர்வு அது..
ஆறின கஞ்சி பழங்கஞ்சி என பொட்டில் அறைந்தார் போல சொன்னது, அவரின் அந்த நேரத்து செயல்பாடு. காரணம் ஜானகியின் திரையிசைப் பயணம் அவ்வளவு எளிதானது அல்ல.. பல தடைகளுக்குப்பிறகே ஏற்றம்கண்ட பயணம் அது.
1950களில் பாட வந்தாலும் 70களில் தான் சீரானது அந்த அருவி. 1970களில் அதன் மகிமை ரசிகர்களை மறுபடியும் மறுபடியும் ஆனந்த குளியல் போடவைத்தது..
ரசனை என்பது ஒருவருக்கு ஒருவர் வேறுபடும். நம் ரசனை அடிப்படையில் நமது அனுபவத்தை சொல்கிறோம்.
ஜாம்பாவான் டைரக்டர் ஸ்ரீதர் 1971ல் அவளுக்கென்று ஒரு மனம் என ஒரு படம் கொடுத்தார். அதில்,,”உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன்” என்றொரு பாட்டு வரும்.
காற்றில் ஆடும்மாலை
என்னை பெண்மை என்றது..
காதல் ஒன்றுதானே
வாழ்வில் உண்மை என்றது..
கண்ணதாசனின் வரிகள்..
எம்எஸ்வி இசையும் ஜானகியின் குரலும் பாலும் தேனும் கலந்த ஒரு அருவியாய் ஓடும்.. இசைப்பிரியர்களுக்கு எந்த காலத்திலம் பிடித்த, கிளாசிக்கிற்கெல்லாம் கிளாசிக் பாடல் அது.
இங்கு கூட டிவியில் திடீரென அந்த பாடலை பார்க்க நேர்ந்தால் சேனல் மாற்றவே மனசு வராது. பாட்டு முடியும் வரை பார்த்துவிட்டுத்தான் அந்த இடத்தை விட்டே கிளம்புவோம்.. ஜானகியின் குரலுக்கு உரம் போட்டால் எவ்வளவு அமோக விளைச்சல் கிடைக்கும் என்பதை நன்றாக புரிந்து வைத்துக்கொண்டு, அதே சமயம் கிடைக்கும்போதெல்லாம் அற்புதமாக பயன்படுத்தியவர் மெல்லிசை மன்னர் எம்எஸ்வி.
கமலின், அவர்கள் படத்தில் ”காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி” பாடலை இன்றும் கேட்டுப் பாருங்கள், எம்எஸ்வியின் ஆர்ப்பரிக்கும் இசைக்கோர்வையையே ஜானகியின் குரல் பின்னுக்கு தள்ள துடியாய் துடித்திருக்கும்..
எத்தனையோ வாத்தியங்கள் மூலம், இசை பொழிந்து கொண்டே இருக்கும்.. ஆனால் ஒத்தைக்குரலில், ‘’நான் வானிலே மேகமாய்..மூன்று வார்த்தைகளை படிப்படியாக ஏற்றி விண்ணுக்கே பறக்கும் ஜானகியின் குரல் அப்படியொரு துள்ளல் அது.
எம்எஸ்வியோடே இணைந்து சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் அதே வரிகளைக் கொண்ட பாடலும் திருப்பி திருப்பி கேட்கவைக்கும் மேஜிக் ரகமே..
இவ்வளவு தூரம் ஆட்டிப்படைத்த ஜானகிக்கு ஆரம்பகால திரை வாழ்க்கை மிகவும் சோகமயமானது. 1950களின் மத்தியில் பாட ஆரம்பித்தபோது தொடர்ந்து பல படங்கள் கிடைத்தபடியேதான் இருந்தன.
தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ் என நான்கு மொழி படங்களிலும் எஸ்.ஜானகி வலம் வந்தார். பாடல்கள் எண்ணிக்கை கூடியதே தவிர, பெரியதாக ஒன்றும் வெற்றிக்கொடி நாட்டிவிடமுடியவில்லை.
காரணம், பி.சுசீலா, ஜமுனா ராணி, ஜிக்கி போன்றோருடன் எம்எல் வசந்தகுமாரி, பி.லீலா போன்றவர்கள் கோலேச்சிக்கொண்டிருந்த நேரத்தில், வெறும் ஹம்மிங் கணக்காகவே எஸ்.ஜானகி பாடியதுதான். ஜானகியைபோலவே தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட பி.சுசீலா தமிழை அட்சர சுத்தமாக உச்சரித்தார். ஆனால் ஜானகியோ கொஞ்சும் குரலில் வார்த்தைகளை விழுங்கிக்கொண்டே இருந்தார்.
1959ல் வெளியான தாய் மகளுக்கு கட்டிய தாலி படத்தில்,” ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ ”என்றொரு பாடல். எம்ஜிஆரும் ஜமுனாவும் பாடும் டூயட். சத்திய சோதனையாக, வெண்கலக் குரலோன் சீர்காழி கோவிந்தராஜனோடு எஸ்.ஜானகி பாடுவார்.
டிஎம்எஸ்சே இணைந்து பாடினாலும், கோவிந்தராஜன் குரல் வளம் முன் எடுபடாது. அப்படிப்பட்ட சீர்காழி, எம்ஜிஆருக்கு பாடுவது துல்லியமாக விளங்குவதும், ஜமுனாவுக்காக ஒலிக்கும், ”சீர் மிகுந்த திராவிடத்தின் லட்சியமே” என்ற வார்த்தைகள் ஜானகியின் கொஞ்சல் குரலில் காணாமல் போவதும் பரிதாபமாக இருக்கும். இப்படிப்பட்ட தள்ளாட்ட இசைப் பயணத்திற்கு முடிவு கட்ட வைத்து, தமிழகம் முழுவதையும் பித்து பிடிக்கச் செய்தது… 1962 கொஞ்சும் சலங்கை படத்தின் அந்த ”சிங்காரவேலனே தேவா” என ஜானகி பாடிய பாடல்.
எஸ்எம் சுப்பையா நாயுடு இசையில் ஒரு நாதஸ்வர த்துடன், ஒரு குரல் வடிவ புல்லாங்குழல் போட்டி போட்டு அதகளம் பண்ணிய அற்புத அத்தியாயம் அது. ரசிகர்களை திரும்ப திரும்ப தியேட்டர்களுக்கு இழுத்துப் போட்டபடியே இருந்த இந்த பாடலால் பல இடங்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது படம் .. கொஞ்சும் சலங்கை பற்றி இரண்டு ஆண்டுகள் கழித்து 1964ல் எஸ். ஜானகி அளித்த பேட்டி ..தனக்கு மிகவும் புகழ் வாங்கித் தந்த கொஞ்சும் சலங்கை படத்தின் சிங்காரவேலனே தேவா பாடலைப் பற்றி சிலாகித்து சொல்கிறார்.
“இந்தப் பாட்டில் நானும் நாதஸ்வர வித்வான் காருகுறிச்சி அருணாசலம் தனித்தனியாகப் பணியாற்றினோம் என்று சொன்னால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். முதலில் அவர் நாதஸ்வரத்தில் வாசிக்கச் சொல்லி ‘ரெக்கார்ட்’ செய்து கொண்டு விட்டார்கள். பிறகு வேறு ஒரு நாள், அவர் வாசித்ததை கேட்டுக்கொண்டே (இயர்போன் உதவியால்) அந்த சுருதிக்கும் லயத்திற்கும் குழைவிற்கும் ஏற்ப அப்படியே பாடினேன். நாட்டின் மூலை முடுக்கெல்லாம் நாங்கள் ‘சேர்ந்து’ பாடிய பாடலை லட்சக்கணக்கானோர் கேட்டு மகிழ்ந்தனர்.
ஆனால் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக் கொண்டதே இல்லை. படம் ரிலீஸ் ஆகி ஒன்றரை வருஷத்துக்கு பிறகு தான் பம்பாய் சண்முகானந்தா ஹாலில் இசைமேதை காருக்குறிச்சி அருணாசலத்தை நான் முதன் முதலாய் சந்தித்தேன்.
அதுதான் எங்களுடைய கடைசி சந்திப்பும் கூட. எங்களையும் ‘சேர்த்து’ வைத்த சிங்காரவேலனையும் மறைந்துவிட்ட அந்த இசை மேதையையும் என்னால் மறக்கவே முடியாது”. ஆம், நாதஸ்வர வித்வான் காருக்குறிச்சி அருணாசலம் தனது 43வது வயதில் 1964 ஆம் ஆண்டிலேயே காலமாகி விட்டார் என்பது வேதனையான விஷயம்..
சிங்கார வேலனே தேவா பாடல் ஹிட்டான அதே 1962 ஆம் ஆண்டு.
எம்ஜிஆரின் பாசம் படத்தின் ஜல்ஜல் எனும் ”சலங்கை ஒலி”, ”மாலையும் இரவு சந்திக்கும் இடத்தில்”…ஜானகி பாடிய இந்த பாட்டெல்லாம் இன்றைக்கும் இரவுப் பொழுதுகளை அவ்வளவு இனிமையாக்கும் வல்லமை பெற்றவை..
பாசம் படத்தில் தான் நடிகை ஷீலா முதல்முறையாக ஷீலா தேவி என்ற பெயரில் அறிமுகமானார். சரோஜாதேவி போல உச்சத்துக்கு வருவார் என நினைத்து அந்த படத்தில் அவருடைய பெயருக்கு பின்னால் தேவியை சேர்த்து இருந்தார்கள்.
ஆனால் ஷீலா தேவியோ தேவியை கழட்டிவிட்டு மலையாள திரையுலகில் நுழைந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். செம்மீன் ஷீலா என தேசிய அளவில் பேசப்பட்டார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பிரேம்நசீர் உடன் கதாநாயகியாக நடித்து கின்னஸ் சாதனைபடைத்த ஷீலாவை யார் என்று கேட்டால் இன்றைய தலைமுறைக்குத் தெரியாது. ரஜினி நடித்த சந்திரமுகி யில் வரும் அகிலாண்டேஸ்வரி என்றால் ஓரளவுக்கு ஞாபகம் வரலாம்..
அடச்சே எஸ் ஜானகி பற்றி பேச ஆரம்பித்து எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறோம்
தமிழ் சினிமா பின்னணி உலகில் முடிசூடா ராணியாக விளங்கிய பி.சுசிலாவுக்கு, போட்டியாளராக ஒருவர் வருவார் என ஆருடம் சொன்ன வருடம் 1962.
பாதகாணிக்கையின் ”பூஜைக்கு வந்த மலரே வா…”, ஆலயமணியின் ”தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே…”, போலீஸ்காரன் மகளின் ”பொன் என்பேன் சிறு பூ என்பேன்…” சுமைதாங்கியின்…”ஓ ஓ மாம்பழத்து வண்டு வாசமலர் செண்டு.” வீரத்திருமகன் படத்தில் ”பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய்..” என அடுத்தடுத்து ஜானகி கொடுத்து ஹிட் பாடல்கள் இன்றைக்கும் தமிழ் திரைஇசை உலகில் எவர்கிரீன் ரகங்கள்.
மென்மையான குரலில் பாடிய பி.பி.ஸ்ரீனிவாசுடன் ஜானகி பாடினாலும், டிஎம் சௌந்தர்ராஜன் கொஞ்சம் சவாலாகவே இருந்தார். இருந்தாலும் அதையும் எதிர்கொண்ட ஜானகி வெற்றியும் பெற்றார். அருணகிரி நாதர் படத்தில் ஆடவேண்டும் மயிலே என்று ஆண்மையின் அக்மார்க் அவதாரமாக டிஎம்எஸ் பாட, அழகோடும் விளையாடும் என ஜானகி பெண்மையின் மென்மை புல்லாங்குழலாய் பாடுவார். அதே டிஎம்எஸ்சுடன் மோதிப்பார்க்கலாமா என்று கோதாவில் இறங்கிய விதம் அலாதியானது.
குங்குமம் படத்தின் ”சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத் தை சொல்லுதம்மா” என்ற பாடல்.. டிஎம்எஸ்சும் ஜானகியும் பரஸ்பர குரல் பலத்தை காட்டி பின்னணி உலகில் ஒரு குத்துச்சண்டை போட்டியே நடத்தியிருப்பார்கள். என் அண்ணன் படத்தின் ”நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்…” பூக்காரி படத்தின் ”காதலின் பொன்வீதியில்” பாடலெல்லாம் இப்படிப்பட்ட ரகமே.
டிஎம்ஸ் பி.சுசிலா அண்ட்கோ எம்ஜிஆர் சிவாஜி சகாப்தத்தை நிறைவு செய்த கட்டத்தில் இளையராஜா வின் வரவால் எஸ்பி பாலசுப்ரமணியம்- எஸ் ஜானகி என்ற புதிய காம்பினேஷன் உருவானது.. ரஜினி, கமல் ஆரம்ப காலத்து சகாப்தம் அது..
பதினாறு வயதினிலேவில் செந்தூரப்பூவே என்று அடுத்த தலைமுறையுடன் கைகோர்த்த ஜானகியின் குரல், ஜானி படத்தின் காற்றே உந்தன் கீதம், நெற்றிக்கண் படத்தின் ”ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்”, மெல்லத்திறந்தது கதவு படத்தின் ”ஊரு சனம் தூங்கிடிச்சி”, அபூர்வ சகோதரர்கள் படத்தின் ”வாழவைக்கும் காதலுக்கு ஜே” என இளையராஜா உபயத்தில் எண்பதுகளை அப்படியே கபளிகரம் செய்தது.
சிவகுமார்- ராதா நடித்த ஆனந்தராகம் படத்தின் ”ஒரு ராகம் பாடும் பாடல்” யேசுதாசுக்கும் இவருக்கும் நடந்த 20:20 மேட்சே.. எண்பதுகளையும் தொண்ணூறு களையும் முழு அளவில் ஆட்டிப்படைத்த ஜானகியால் தமிழ் மட்டுமல்ல, தெலுங்கு, மலையாளம் இந்தி என பல மொழிகளிலும் 40 ஆயிரம் பாடல்களுக்குமேல் பாடி கின்னஸ் சாதனையையே நிகழ்ந்த முடிந்தது..
ஜானகி வாங்காத விருதுகளே இல்லை என்ற பெருமைக்கு, சொந்தம் கொண்டாட வைத்தது அவரின் குரல்.
தேவர் மகனில் இஞ்சி இடுப்பழகி,,மஞ்ச சிவப்பழகி என நாக்கிலேயே டப்பு டிப்பு வாசித்த பின்னணி பாடகி எஸ். ஜானகியின் 84வது பிறந்த நாள் இன்று.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.