“தமிழகத்தில் கவர்னர் முதல் காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லை'' – எடப்பாடி பழனிசாமி காட்டம்

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூரில் கோயில் கோடை விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் எஸ்.ஐ மார்க்கெட் தெரசாவிடம் ஆறுமுகம் என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஆறுமுகம் என்பவர் அண்மையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஆறுமுகம் என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல், தன் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த பெண் காவல் அதிகாரியின் கழுத்தை அறுத்து உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த அந்த பெண் காவலர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் ஆறுமுகத்தை கைது செய்தனர்.

நெல்லையில் காயமடைந்த பெண் எஸ்.ஐ இடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொலைபேசியில் நலம் விசாரித்தார். இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “நெல்லை பழவூரில் பெண் எஸ்.ஐ மார்க்ரெட் தெரசா, அபராதம் விதித்ததற்காக கழுத்தறுக்கப்பட்ட சம்பவம், கவர்னர் முதல் காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் தமிழ்நாடு சீர்கெட்டிருப்பதை தெளிவாக்குகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கையும், காவலர்கள் தங்களை தற்காத்து கொள்ள புதிய யுக்திகளை கையாளுவதற்கு பயிற்சிகளையும் அளிக்க வேண்டும். இதற்கும் கமிட்டி போட்டு நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து காவலர்களை காக்க வேண்டும் என அரசை வலியுறுத்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.