நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை பின்பற்ற வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நீதிமன்றக் கட்டிட திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்ற தலைமை தலைமை நீதிபதி மற்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,” தமிழ்நாட்டில் எனது தலைமையில் அரசு பொறுப்பேற்ற பிறகு, உயர் நீதிமன்றத்தில் நான் பங்கு பெறக்கூடிய முதல் விழா. அப்படிப்பட்ட இந்த சிறப்பான நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் நான் மிகுந்த பெருமைப்படுகிறேன்.

சட்டத்தின் ஆட்சியை, சமூகநீதியின் ஆட்சியை, நீதி நெறிமுறைகளையும், விதிமுறைகளையும் முறையாகப் பின்பற்றும் ஆட்சியை வழங்க வேண்டும் என்ற உறுதியோடு, தமிழ்நாட்டில் நல்லாட்சியை வழங்கிக் கொண்டிருக்கிறோம். நாகரிக சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும், மறுமலர்ச்சிக்கும், மக்களின் பாதுகாப்பிற்கும், அவர்களது உரிமை பாதுகாக்கப்பட்டு செழித்தோங்குவதற்கும், சுதந்திரமாக செயல்படும் நீதித்துறை தேவை என்பதை நமது அரசியலமைப்பு உறுதி செய்கிறது. அதன்படி தமிழ்நாடு அரசும் செயல்பட்டு வருகிறது. அனைத்து மக்களுக்கும் விரைவில் நீதி கிடைப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் முன்னுரிமை அடிப்படையில் இந்த அரசு செய்து வருகிறது.

நீதித்துறையின் உயிரோட்டமாக விளங்கும் வழக்கறிஞர்களின் நலன் காப்பதிலும் இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் வாயிலாக, வழக்கறிஞர்களின் கோரிக்கையான தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதி மூலம் வழங்கப்படும் சேம நல நிதியானது ரூபாய் 7 லட்சத்திலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

கரோனா பெருந்தொற்றால் உயிரிழந்த சுமார் 450 வழக்கறிஞர்களுக்கு அறிவிக்கப்பட்ட 20 கோடி ரூபாய் தொகையினை மாநில அரசு விரைவில் வழங்கும்.

இந்தத் தருணத்தில், நீதித் துறையே முழுமையாக இங்கு வந்து வீற்றிருக்கும் இந்த மேடையில் மாநிலத்தின் சார்பாக சில கோரிக்கைகளை வைக்க நான் விரும்புகின்றேன். உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதியும் கருத்தில் கொள்ளப்படவேண்டும். தமிழ் மொழி உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக ஆக்கப்பட வேண்டும். பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்தின் ஒரு கிளையினை சென்னையில் அமைக்க வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை இங்கு வருகை புரிந்துள்ள உச்ச நீதிமன்றத் தலைமை நீதியரசர் முன்பாக நம் அனைவரின் சார்பாக நான் வைத்திருக்கின்றேன். நம் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, தமிழ்நாட்டிலிருந்து டெல்லி சென்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாக செயலாற்றும் நீதிபதிகளும் அதற்குத் துணை நிற்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். நீதிபதிகள் அதனை நிச்சயம் நிறைவேற்றித் தருவார்கள் என்று நான் நம்புகின்றேன்” என்று பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.