விமல் மீது சிங்காரவேலன் மோசடி புகார்!

தன்னை நடிகர் விமல் ஏமாற்றிவிட்டதாக, நேற்று(ம்) காவல்துறையில் புகார் அளித்துள்ளார் விநியோகஸ்தர் சிங்காரவேலன்.

கடந்த மூன்று வருடங்களாகவே இருவரும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்து வருகிறார்கள்.

சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விமல், சென்னை காவல்துறை மாநகர ஆணையரக அலுவலகத்தில் சிங்காரவேலன் மீது புகார் அளித்தார்.

இந்நிலையில், நேற்று காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடிகர் விமல் மீது புகார் மனு ஒன்றை அளித்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்தார் சிங்காரவேலன்.

அப்போது அவர் பேசியதாவது:

“நான் மெரினா பிக்சர்ஸ் என்ற பெயரில் திரைப்பட விநியோக நிறுவனம் நடத்துகிறேன். ரஜினிகாந்த் நடித்த, ‘லிங்கா’, விஜய் சேதுபதி நடித்த ‘புறம்போக்கு’ உள்ளிட்ட ல படங்களை விநியோகம் செய்து இருக்கிறேன்.

இந்நிலையில், 2016-ம் ஆண்டு நடிகர் விமல் என்னை சந்தித்து பேசினார்.

அந்தச் சமயத்தில் அவரது நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ச்சியாகத் தோல்வியடைந்தன; தயாரிப்பாளர்களுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தின.

இதனால் படம் தயாரிக்கத் தயாரிப்பாளர்கள் எவரும் முன்வரவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார் விமல்.

இந்த நிலையில், அவரது நடிப்பில் திருப்பூர் கணேசன் என்ற தயாரிப்பாளரால் துவங்கப்பட்டு ‘மன்னர் வகையறா’ என்ற படம் பாதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்தது.

வேறு படங்கள் இல்லாததால், அந்த படத்தை தொடர விமல் விரும்பினார். அதற்கு பண உதவி தேவை என என்னிடம் கேட்டார்.

நானும் என் நண்பர் கோபியை அறிமுகம் செய்து, ரூ.5 கோடி பணம் கடன் வாங்கி கொடுத்தேன்.

இந்நிலையில் சாலிகிராமத்திலுள்ள சிகரம் மினி ஹாலில் நடந்த நடிகர் விமலின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு என்னை விருந்தினராக அழைத்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் ‘களவாணி – 2’ என்ற படத்தை தான் தயாரிக்க இருப்பதாக மேடையில் அறிவித்தார். அப்போது ‘களவாணி’ படத்தின் இயக்குநர் சற்குணமும் உடன் இருந்தார்.

அதன் பிறகு விமல் “ ‘களவாணி – 2’ படத்தின் ஒட்டு மொத்த விநியோக உரிமையை வாங்கிக் கொள்ளுங்கள். விரைவாக படத்தை முடித்து தருகிறேன். 1.5 கோடி ரூபாய் கொடுங்கள்” என்றார். நானும் கொடுத்தேன்.

ஆனால் ஒரு கட்டத்தில் அந்தப் படத்தை இயக்குநர் சற்குணமே தயாரிக்க இருப்பதாகவும், என்னிடம் முன்பணமாக பெற்ற ரூ.1.5 கோடியை பட வெளியீட்டிற்கு முன்பு, தனக்கு வழங்கப்பட இருக்கும் சம்பளத்தின் மூலம் கொடுத்து விடுவதாகவும் விமல். உறுதி அளித்தார். ஆகவே நானும் அமைதி காத்தேன்.

‘களவாணி – 2’ படத்தின் வெளியீட்டுத் தேதி உறுதியான நிலையில் நடிகர் விமலிடமிருந்து எனக்கு வரவில்லை. ஆகவே ‘களவாணி -2’ பட வெளியீட்டிற்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. தடை உத்தரவும் கிடைத்தது.

இதனால் படத்தின் தயாரிப்பாளர் சற்குணம் என் மீது சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் மனு கொடுத்தார். அந்தப் புகாரை விசாரித்த அதிகாரிகளிடம் நான் வைத்திருந்த ஆவணங்களைக் காட்டி, ‘களவாணி 2’ படத்தின் காப்பிரைட் உரிமை என்னிடம் உள்ளது என்பதை விளக்கினேன். இதையடுத்து, விமலை உடனடியாக விசாரணைக்கு வரும்படி காவல்துறை அதிகாரிகள் அழைத்தனர்.

ஒரு அரசியல் பிரபலத்தைத் தொடர்பு கொண்ட விமல், எனக்கு தர வேண்டிய பணத்தை செட்டில் செய்து விடுவதாகவும், பட வெளியீட்டிற்கு உதவும்படியும் கேட்டார். ஆகவே சமரசத்திற்கு ஒப்புக்கொண்டு அதற்கான ஒப்பந்தத்திலும் இருவரும் கையெழுத்திட்டோம்.

அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் எனக்கு தர வேண்டிய பணத்தை விமல் தரவில்லை. ஆகவே தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்தேன். எனக்கு சேர வேண்டிய ரூ.1.5 கோடியை உரிய வட்டியுடன் திருப்பித் தந்துவிட வேண்டும் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியது.

இதன் அடிப்படையில் ரூ.2.70 கோடிக்கான காசோலையை நடிகர் விமல் வழங்கினார். அதனை வங்கியில் செலுத்தியபோது அந்த காசோலை உரிய பணமின்றி பவுன்ஸ் ஆகிவிட்டது. இதனால் விமல் மீது காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதனிடையே என் நண்பர் கோபி, விமலுக்கு கொடுத்துள்ள ரூ.5 கோடி பணம் திரும்ப வராததால், அவரும் புகார் அளித்துள்ளார். இந்த புகாரைத் திசை திருப்புவதற்காக, இப்போது அவரை நான் ஏமாற்றிவிட்டதாக ஒரு பொய்யான புகாரை விமல் அளித்துள்ளார்” என்றார் சிங்காரவேலன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.