பிரபல நகைக் கடையில் 625 கிராம் நகைகளை திருடியதாக ஊழியர் கைது

பிரபல தங்க நகைக் கடையில் ரூ. 26 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை சிறிது சிறிதாக திருடி அடகு வைத்த ஊழியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை தி.நகர் துரைச்சாமி சாலையில் செயல்பட்டு வரும் பிரபல நகைக் கடையில் நெல்லை பாளையங்கோட்டை சமாதான புரத்தைச் சேர்ந்த ஐசக் சாமுவேல் என்பவர் ஆன்லைன் புக்கிங் மற்றும் டெலிவரி பிரிவு பொறுப்பாளராக கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
image
இந்நிலையில் கடந்த மாதம் நகைக் கடையில் வரவு செலவு தொடர்பாக தணிக்கை நடைபெற்றது. அப்போது 625 கிராம் எடை கொண்ட ரூ. 26 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் குறைந்தது தெரியவந்தது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஐசக் சாமுவேல் திருடியதை கண்டுபிடித்தனர். முன்னதாக தான் சிக்கி கொள்வோம் என பயந்து உடல்நிலை சரியில்லை எனக்கூறி ஐசக் சாமுவேல் விடுப்பில் சென்று விட்டார்.
இதையடுத்து நகைக்கடை மேலாளர் ராமமூர்த்தி மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஊழியர் ஐசக் சாமுவேலை மாம்பலம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
image
அதில், சிறுவயது முதலே ஆடம்பரமாக வாழ்ந்து வந்த ஐசக் சாமுவேல் கொரோனா ஊரடங்கு காலத்தில் நண்பர்கள் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். அதை திருப்பிச் செலுத்தவும், ஆடம்பரமாக தொடர்ந்து செலவு செய்வதற்கும் நகைகளை திருடி அடகு வைத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அடகு வைத்த நகைகளை மீட்ட போலீசார், ஐசக் சாமுவேலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.