ஜம்மு – காஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு அருகே பயங்கர வெடிச்சத்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜம்முவில் உள்ள சம்பா மாவட்டத்தில் இன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். அதன் பிறகு பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு மோடி உரையாற்றவுள்ளார்.

இதனால் அந்தப் பகுதி முழுவதிலும் போலீஸாரும், ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், காலை 10 மணியளவில் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு 12 கி.மீ. தொலைவில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸார் அந்தப் பகுதிக்கு சென்று அந்த இடத்தை பார்வையிட்டனர். ஆனால், வெடிகுண்டு வெடித்ததற்கான எந்தத் தடயமும் அங்கு இல்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் அந்தப் பகுதியில் விண்கல் ஏதேனும் விழுந்திருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இருந்தபோதிலும், அந்தப் பகுதியில் பலத்த கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM