கேரள முன்னாள் அமைச்சர் சங்கரநாராயணன் மரணம்: 6 மாநிலங்களில் கவர்னராக இருந்தவர்

திருவனந்தபுரம்: கேரள மாநில மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே. சங்கரநாராயணன் உடல் நலக்குறைவால் பாலக்காட்டில் மரணமடைந்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் கே. சங்கரநாராயணன் (89). இவர் பாலக்காடு அருகே சேகரிபுரம் பகுதியை சேர்ந்தவர். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வீட்டில் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில் மரணமடைந்தார். இவர் கருணாகரன், ஏ.கே. அந்தோணி ஆகியோரது அமைச்சரவையில் பலமுறை விவசாயம், நிதி, கலால்துறை அமைச்சராக இருந்து உள்ளார். மேலும் நாகாலாந்து, ஜார்கண்ட், மகாராஷ்டிரா, அசாம், அருணாச்சலப்பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களில் கவர்னராகவும் பதவி வகித்து உள்ளார். சங்கரநாராயணன் மறைவுக்கு கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான், முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் முதல்வர்கள் உம்மன்சாண்டி, ஏ.கே. அந்தோணி உள்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடல் நேற்று மாலை பாலக்காடு அருகே செறுதுருத்தியில் உள்ள வீட்டுத் தோட்டத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.