வீடு புகுந்து தொழிலதிபரை கொன்று 100 பவுன் நகை கொள்ளை – புதுக்கோட்டையில் துணிகரம்

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே ஆவுடையார்பட்டினத்தைச் சேர்ந்தவர் முகமது நிஜாம். கறம்பக்குடியில் ஆப்டிக்கல்ஸ் கடை, ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரின் மனைவி ஆயிஷா பேபி. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மகன்கள் இருவரும் கறம்பக்குடியில் தங்கி ஆப்டிக்கல்ஸ் கடையை நிர்வகித்து வருகின்றனர். மகள் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். ஆவுடையார் பட்டினத்தில் கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில், வழக்கம் போல் நேற்றிரவு பள்ளிவாசல் சென்று தொழுகையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த முகமது நிஜாம், வீட்டுக்கு வெளியே அமர்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, அவர் எதிர்பார்க்காத வகையில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், கண் இமைக்கும் நேரத்தில் முகமது நிஜாமை கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு, வீட்டுக்குள்ளே புகுந்தனர். கழுத்து அறுக்கப்பட்ட முகமது நிஜாம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் ஆயிஷா பேபியிடம் ரத்தக்கரையான கத்தியைக் காட்டி மிரட்டி, பீரோ சாவியைக் கேட்டுள்ளனர். சாவியை வாங்கிக்கொண்டவர்கள், உடனே ஆயிஷா பேபியை அங்கேயே கட்டிப்போட்டு, பீரோவில் இருந்த 100 பவுன் நகை, 20ஆயிரம் ரொக்கப்பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர். மெல்ல, மெல்ல கயிறை அறுத்து வெளியே வந்த ஆயிஷா பேபி, செல்போன் மூலம் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். முகமது நிஜாம் கழுத்து அறுபட்டு கிடந்தது கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்து மணமேல்குடி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, போலீஸார் அங்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து, மாவட்ட எஸ்.பி நிஷா பார்த்திபன் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மணமேல்குடி போலீஸார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.