தமிழகத்தில் எண்ணெய், எரிவாயு எடுக்க அனுமதி கேட்கும் வேதாந்தா நிறுவனம்! – ஒரு சுற்றுசூழல் பார்வை

தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் இயற்கை எண்ணெய் எரிவாயு எடுப்பதற்கான அனுமதிகேட்டு, வேதாந்தா குழுமத்தின் கெய்ர்ன் ஆயில் & கேஸ் நிறுவனம் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்திருக்கிறது. மீனவ, விவசாய மக்களின் வாழ்வாதாரம், கடல்வளம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் இந்த திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என பல்வேறு அரசியல், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

வேதாந்தா விண்ணப்பம்

கடந்த 2017-ம் ஆண்டு, இந்தியா முழுவதும் 8 கடல் பகுதிகள், 23 நிலப்பகுதிகள் என மொத்தம் 31 வட்டாரங்களில் எண்ணெய் எரிவாயு எடுப்பதற்கான உரிமம் வழங்கும் ஒப்பந்தத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மேலும், மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் என தனித்தனியாக பெற்றுவந்த உரிமங்களுப் பதில், `திறந்த ஏக்கர் உரிமக் கொள்கை’ (Open Acreage Lincensing Policy – OALP) என்ற ஒற்றை உரிமம் வழங்கும் திட்டத்தையும் கொண்டுவந்தது. அதன்படி, 2018-ம் ஆண்டு இந்தியா முழுவதும் சுமார் 55 இடங்களில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஏலம் விடப்பட்டது. அதில், தமிழகத்தில் உள்ள 2 இடங்களை வேதாந்தா நிறுவனமும், ஒரு இடத்தை ஓ.என்.ஜி.சி பொதுத்துறை நிறுவனமும் ஏலத்தில் எடுத்தது. குறிப்பாக, முதல்கட்ட ஏலத்தில், மரக்காணம் முதல் வேளாங்கண்ணி வரையிலான 1,794 சதுர கி.மீ. ஆழமற்ற கடற்பகுதிகளிலும், பரங்கிப்பேட்டை முதல் நாகை மாவட்டம் புஷ்பவனம் வரையில் 2,674 சதுர கி.மீ. நிலப்பகுதிகளிலும் ஹைட்ரோ கார்பன் ஆய்வு நடத்த வேதாந்தா குழுமத்திற்கும் மத்திய அரசு அனுமதியளித்தது.

அப்போதே, இதற்கு தமிழகத்திலுள்ள பல்வேறு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், “விளை நிலங்கள், குடிநீர் ஆதாரங்கள், விவசாயிகளின் நலன், அப்பகுதியில் வாழும் மக்களின் சுற்றுப்புறச் சூழலுக்கு ஆபத்து என்று வாழ்வாதாரத்துக்கும் உயிருக்கும் பல்வேறு பாதிப்புகளை உருவாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முயற்சிப்பது கிஞ்சிற்றும் ஏற்றுக்கொள்ளக் கூடியதும் அல்ல!

முதல்வர் மு.க.ஸ்டாலின் – திமுக

எனவே, வெகுமக்கள் விரோத திட்டங்களைச் செயல்படுத்துவதில் தீவிரம் காட்டிவரும் மத்திய பா.ஜ.க அரசு, தமிழக மக்களின் பெருந்திரள் போராட்டத்தையும் அடங்கா சினத்தையும் சந்திக்க வேண்டிய கட்டாயமான நிலை உருவாகும் என்று மிகுந்த அடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, `தமிழகத்தின் நெற்களஞ்சியத்தினை’ காப்பாற்றுவதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு கருதியும் இத்திட்டத்தினை மத்திய பா.ஜ.க. அரசு உடனே கைவிட வேண்டும். இதுகுறித்து மத்திய அரசுக்கு அழுத்தமான கோரிக்கையை தமிழக அரசு வைக்க வேண்டும்!” என வலியுறுத்தினார்.

கெய்ர்ன் இந்தியா

அந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு வேதாந்தா நிறுவனம் தான் ஏலத்தில் எடுத்தப் பகுதிகளில் எண்ணெய் எரிவாயு எடுக்கும் பணிகளை மேற்கொள்வதற்கு அனுமதிகேட்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பித்தது. அதன்பிறகு, மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் சுற்றுச்சூழல் தொடர்பான அனுமதியை, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என விதிமுறைகளை மாற்றியமைத்தது.

இந்த நிலையில், தற்போது வேதாந்தா நிறுவனம் தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் இயற்கை எண்ணெய் எரிவாயு எடுப்பதற்கான அனுமதிகேட்டு, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பம் அளித்திருக்கிறது. அதில், தமிழகத்தின் விழுப்புரம் மற்றும் புதுச்சேரியை ஒட்டியள்ள கடற்பகுதிகளில்ல் 102 எண்ணெய்க் கிணறுகள் அமைக்கவும், நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலை ஒட்டியுள்ள கடற்பகுதிகளில் 137 எண்ணெய்க் கிணறுகள் அமைத்து எண்ணெய் எரிவாயு ஆய்வுப்பணிகளை மேற்கோள்ளவும் வேதாந்தா நிறுவனம் ஒப்புதல் கேட்டு விண்ணப்பித்துள்ளது. மேலும், கடலோரப்பகுதிகளில் எண்ணெய் எரிவாயுத் திட்டங்களை மேற்கொள்ள மத்திய அரசின் பெட்ரோலிய அமைச்சகம் அனுமதி அளித்திருப்பதையும் அந்த விண்ணப்பத்தில் வேதாந்தா நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது.

கச்சா எண்ணெய்

இதற்கு பல்வேறு தரப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் விழுப்புரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க வேதாந்தா குழுமம் நிறுவனம் தமிழக அரசிடம் அனுமதி கோரியிருப்பதாக செய்திகள் வருகின்றன. அது உண்மையெனில், அத்தகைய அனுமதி எதையும் தமிழக அரசு வழங்கிடக் கூடாது. மேலும் இது தொடர்பான விவரங்களை மக்களுக்கு தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

டிடிவி தினகரன்

மேலும், பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர், தமிழ்நாடு அரசு வேதாந்தா நிறுவனத்தின் இந்த விண்ணப்பத்தை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறது.

இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வனிடம் பேசியபோது, “ நிலத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பதைவிடவும், மிகவும் ஆபத்தானது கடலில் கிணறுகள் அமைப்பது. கடற்பகுதிகளில் ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைப்பதால் அங்குள்ள கடல் வளம், மீன்வளம் பாதிக்கப்படும். குறிப்பாக தமிழ்நாட்டை ஒட்டிய கடற்பகுதிகளில் அரியவகை பாதுகாக்கப்பட்ட கடற்பசு உள்ளிட்ட 25 பாலூட்டிகள், ஆமைகள் உயிர்வாழ்கின்றன. டால்பின்கள், திமிங்கலங்கள் போன்ற உயிரினங்கள் குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலியை எழுப்புவதன் மூலமே தங்களுக்குள் தகவல்களை பறிமாறிக்கொண்டு தங்களது பயண வழிகளையும் தீர்மானிக்கின்றன. கடற்பகுதியில் ஹைட்ரோகார்பன் இருப்பை ஆய்வுசெய்ய பயன்படுத்தப்படும் சீஸ்மிக் சோதனையின்போது எழுப்பப்படும் வெடிச்சத்தம் கடல்வாழ் உயிரினங்களை மிகவும் பாதிக்கும்.

வழக்கறிஞர், வெற்றிச்செல்வன்

அதுமட்டுமின்றி எண்ணெய், எரிவாயு எடுக்கும்போது வெளியிடப்படும் ரசாயனக் கழிவுகளால் மீன்வளம் பெருமளவில் குறையும்; முக்கியமான பல கடல்வாழ் உயிரினங்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயரும் அல்லது இறந்துபோகும்! எனவே இந்த திட்டத்துக்கு அனுமதி அளித்தால் கடல்வளம் பாதிக்கப்படைந்து சுற்றுச்சூழலுக்கு கேடு விளைக்கும். கடலைச் சார்ந்து வாழும் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்!” என்றார்.

ஏற்கெனவே, கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம், பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி., அரியலூர், கடலூர் மாவட்டத்தில் 15 இடங்களில் எண்ணெய்க் கிணறுகள் அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதிகேட்டு விண்ணப்பித்த கடிதத்தை, தமிழக அரசு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.