இனி டுவிட்டர் என்ன ஆகும்?| Dinamalar

சான் பிரான்சிஸ்கோ :உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை, 3.39 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தை செய்துள்ளார்.
இவ்வளவு பெரிய டீலை, இவ்வளவு சீக்கிரமாக எலான் மஸ்க் முடிவுக்கு கொண்டு வந்துவிடுவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. அவ்வளவு விரைவாக நடந்து முடிந்திருக்கிறது.அடுத்தகட்டமாக, டுவிட்டர் நிறுவனம் இனி என்னவாகும் என்ற கேள்வி, பலமட்டங்களில் எழுப்பப்பட்டு வருகின்றன.

‘டுவிட்டர் நிறுவனம், சுதந்திரமான பேச்சுக்கான தளமாக இருப்பதற்கான திறனை அது பூர்த்தி செய்யவில்லை. ‘அதனால், அதை ஒரு தனியார் நிறுவனமாக மாற்ற வேண்டும். அதற்காக அதை வாங்க விரும்புகிறேன்’ என்று அண்மையில் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.இதன் தொடர்ச்சியாக, கடந்த 14ம் தேதியன்று, ஒரு பங்கு 54.20 டாலர் என்ற விலையில், அதாவது, கிட்டத்தட்ட 3.31 லட்சம் கோடி ரூபாய்க்கு, டுவிட்டரை வாங்க தயாராக இருப்பதாக அறிவித்தார்.

துவக்கத்தில் டுவிட்டரை அவர் கையகப்படுத்தாமல் தடுப்பதற்காக, ‘பாய்ஸன் பில்’ போன்ற நடவடிக்கைகளை டுவிட்டர் நிர்வாகம் மேற்கொண்டது. ஆனால், தொடர்ச்சியாக நடைபெற்ற பேச்சில், தற்போது 3.39 லட்சம் கோடி ரூபாய்க்கு நிறுவனத்தை விற்பதற்கு சம்மதம் தெரிவித்து உள்ளது.

எதிர்பார்ப்பு

விற்பனைக்கு பின், டுவிட்டர் நிறுவனம் தனியார் நிறுவனமாக மாறிவிடும் என, டுவிட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த டீல், நடப்பு ஆண்டின் இறுதிக்குள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இருப்பினும், அது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது.
நிர்வாக குழுவும், மஸ்க்கும் ஒப்புக்கொண்டாலும், அடுத்து, பங்குதாரர்கள் அனுமதி தேவைப்படும். மேலும், அமெரிக்கா மற்றும் இதர நாடுகளில் உள்ள கட்டுப்பாட்டு அமைப்புகள் அனுமதி வழங்க வேண்டும். அதன் பிறகே ஒப்பந்தம் செல்லுபடியாகும்.
இதில் மஸ்க்குக்கு சந்தோஷமான விஷயம், டுவிட்டர் நிர்வாக குழுவில் உள்ள அனைவரும் ஒருமனதாக இந்த டீலுக்கு ஆதரவளித்து உள்ளது தான். டுவிட்டர் மஸ்க் கைக்கு வந்த பின், அவர் அதில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு, முதலீட்டாளர்கள், நிதி நிறுவனங்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பங்குதாரர்கள் அனுமதி

முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, டுவிட்டர் நிறுவனத்தை, விளம்பரங்கள் அடிப்படையிலான வணிகமாக இல்லாமல், சந்தாதாரர்கள் அடிப்படையிலான வணிகமாக மாற்ற இருப்பதாக தெரிவித்துள்ளார்.டுவிட்டரின் ஆண்டு கூட்டம், மே 25ம் தேதியன்று நடைபெற உள்ளது. அப்போதே பங்குதாரர்களின் அனுமதிக்கான வாக்குப்பதிவு நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போதைய நிர்வாக குழுவை பொறுத்தவரை, டீல் முடிந்த பின் என்னவாகும் என்பது தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக பெரிய மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்
நிபுணர்கள்.டுவிட்டரின் துணை நிறுவனரான ஜாக் டோர்சி, ‘டுவிட்டரை தனி ஒருநபர் நிர்வகிக்க முடியும் என்று நம்பவில்லை’ என, தன்னுடைய அவநம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளார்.ஆனால், நினைத்து பார்க்க முடியாததை சாதித்துக் காட்டுவதில், எப்போதும் விடாக் கண்டராகவே எலான் மஸ்க் இருந்திருக்கிறார் என்பதை, இந்த உலகம் ஏற்கனவே கண்டு
உள்ளது. இம்முறை என்ன நடக்கிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

‘டுவிட்டருக்கு வர மாட்டேன்’

வெறுப்புணர்வை துாண்டும் கருத்துகளை டுவிட்டரில் பதிவிட்டதாக கூறி, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கணக்கை, கடந்த ஆண்டு நிரந்தரமாக முடக்கியது, டுவிட்டர்.இதையடுத்து, அவர் சொந்தமாக ‘ட்ரூத்’ எனும் சமூக ஊடகத்தை துவங்கி உள்ளார்.
தற்போது டிரம்ப் மீண்டும் டுவிட்டருக்கு திரும்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதற்கு பதிலளித்துள்ள டிரம்ப்,”டுவிட்டரை வாங்கும் எலான் மஸ்க், அதை மேம்படுத்துவார் என நம்புகிறேன். அவர் மிகவும் நல்ல மனிதர். ஆனால் நான் மீண்டும் டுவிட்டருக்குத் திரும்ப மாட்டேன்.
ட்ரூத் ஊடகத்தை தான் பயன்படுத்துவேன்,” என தெரிவித்துள்ளார்.

பராக் அகர்வால் கதிடுவிட்டர் கைமாற உள்ள

நிலையில், தற்போது அதன் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் பராக் அகர்வாலின் நிலைமையும் கேள்விக்குறியாகி உள்ளது.மும்பை ஐ.ஐ.டி.,யில் படித்த இந்தியரான பராக் அகர்வால், கடந்த ஆண்டு நவம்பரில், டுவிட்டரின் தலைமை செயல் அதிகாரியாக
நியமிக்கப்பட்டார்.தற்போதைய மாற்றம் குறித்து பராக் அகர்வால் ஊழியர்களிடம் பேசும்போது, ‘டுவிட்டர் நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்றது. கைமாறும் நிலையில், அது எந்த திசையை நோக்கிச் செல்லும் என்பது தெரியவில்லை. எலான் மஸ்க் உடன் பேச வாய்ப்பு
கிடைக்கும்போது இவை சம்பந்தமான கேள்விகள் எழுப்புவோம்’ என குறிப்பிட்டுள்ளார்.ஒருவேளை நிர்வாக மாற்றம் ஏற்பட்டு, 12 மாதங்களுக்குள்ளாக அகர்வால் பணிநீக்கம் செய்யப்பட்டால், அவருக்கு 323 கோடி ரூபாய் இழப்பீடு கிடைக்கும் என்கிறது, ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.