ஜம்மு: காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்னும் 159 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. ஜம்மு – காஷ்மீரில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து வேட்டையாடி வருகின்றனர். இந்த ஆண்டு மட்டும் வெவ்வேறு என்கவுன்டர் நடவடிக்கைகளில் இதுவரை 62 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் 18 தீவிரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். இதையும் மீறி ஜம்மு காஷ்மீரில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் உலாவி வருகின்றனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்னும் 159 தீவிரவாதிகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகையில், ‘காஷ்மீர் பள்ளத்தாக்கில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளில் அதிகபட்சமாக லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் உள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 83 ஆக குறைந்துள்ளது. அதேநேரம் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர்கள் 30 பேர், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 38 பேர் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பதுங்கி உள்ளனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களில் ஏராளமான தீவிரவாதிகள் உள்ளனர்.அங்குள்ள தீவிரவாதிகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பிய சுமார் 80 தீவிரவாதிகள் தற்ேபாது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளனர். உளவு அமைப்புகளின் கூற்றுப்படி, பாகிஸ்தான் ராணுவம் 12க்கும் மேற்பட்ட தீவிரவாத முகாம்களை கட்டமைத்துள்ளது. இவர்கள் மன்செஹ்ரா, முசாஃபராபத்கால், நஷ்ஹெஹ்ரா வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவுகின்றனர்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
