சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து வழங்கும் ‘ஆளப் பிறந்தோம்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சி, திருச்சியில் உள்ள ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (மே 1) நடை பெற உள்ளது.
யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றிபெற வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால், அதற்கான அடிப்படை கல்வித் தகுதி, எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும், அதற்கான செலவு என ஏராளமான கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்களே அதிகம்.
அவ்வாறான தயக்கத்தைப் போக்கி, தெளிவைத் தரும் நோக்கில் ‘ஆளப் பிறந்தோம்’ என்ற நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சி மதியம் 1 மணி வரை நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய மண்டல காவல்துறை தலைவர் வி.பாலகிருஷ்ணன், ஐபிஎஸ்., கரூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர், ஐஏஎஸ், ‘இந்து தமிழ் திசை’ முதன்மை உதவி ஆசிரியர் செல்வ.புவியரசன், சங்கர் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரையாற்ற உள்ளனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்புபவர்கள் http://www.htamil.org/00468 என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ள வேண்டும். பங்கேற்கும் அனைவருக்கும் ‘தேர்வுக்கு வழிகாட்டி’ நூலும், பாடத்திட்டக் குறிப்புகளும் இலவசமாக வழங்கப்படும்.