கிழக்கு மாகாணத்தில், சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி:இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

கிழக்கு மாகாண சபைக்கு உட்பட்ட அலுவலகங்களில் சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்து தேசிய மின் வலைப்பின்னலுடன் இணைத்துக் கொள்வதற்கான இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இந்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று திருகோணமலையில் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித பி வணிகசிங்க மற்றும் kapital crop international pvt ltd, orb touch cc pvt ltd ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மின் உற்பத்தி நெருக்கடி முக்கியமான ஒரு விடயமாக காணப்படுகின்றது.

தேசிய மின்சக்திக்கு 100 மெகா வோல்ட் மின் சக்தியை இதன் மூலம் இணைத்து கொள்ளக் கூடியதாக இருக்கும். அத்துடன் 120 மில்லியன் அமெரிக்க டொலர் இதற்காக முதலீடு செய்யப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் இதன்போது தெரிவித்தார்.

இதன் மூலம் பெறப்படுகின்ற வருமானத்தில் 20 வீதமான வருமானத்தை கிழக்கு மாகாண சபைக்கு பெற்றுக் கொள்ளக் கூடியதாக அமையும்.

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் உள்ள கிழக்கு மாகாண சபைக்குரிய நிறுவனங்கள் இது தொடர்பில் கருத்தில் கொள்ளப்பட்டு கட்டம் கட்டமாக இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

தற்பொழுது உள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மின் உற்பத்தி செய்வதற்காக வேண்டி எரி பொருளை கொள்வனவு செய்வதற்கு பல மில்லியன் டொலர்களை வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டியுள்ளது.

சூரிய சக்தியை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்வதனால் சூழல் நேயமிக்க ஒரு செயற்பாடாக அமையும். அத்துடன் புதிய தொழில் வாய்ப்புக்களும் இதன் மூலம் ஏற்படும். பாடசாலைகள், வைத்தியசாலைகளும் இதற்காக கருத்தில் கொள்ளப்படும்.
இவ்வேலைத்திட்டம் மூலம் வெளிநாடுகளுக்கு நிலங்கள் ஒருபோதும் விற்பனை செய்யப்படமாட்டாது. இலங்கை நிறுவனங்களே இதனை நடைமுறைப்படுத்தும்.

நாட்டுக்கு அவசியமான முதலீட்டு வாய்ப்புக்களை ஏற்படுத்துவதன் மூலம் நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து தணிய முடியும் என தாம் நம்புவதாகவும் ஆளுநர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

District media unit 
Trincomalee 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.