தஞ்சை விபத்து; ஸ்டாலின் நேரில் ஆறுதல்: நிவாரண உதவிகளை வழங்கினார்

Tamilnadu News Update : தஞ்சை மாவட்டம் காளிமேடு என்ற கிராமத்தில் குருபூஜைக்கான 94-வது சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் அதிகாலை 3 மணிக்கு காளிமேலு பகுதிக்கு அருகே பூதலூர் சாலையில் தேர் வந்தபோது, உயர் மின் அழுத்த கம்பி உரசியதில் தேரில் மின்சாரம் பாய்ந்தது. இதில் 2 சிறுவர்கள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் படுகாயமடைந்த 10 பேர் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில்,அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மேலும் ஒருவர் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது. காலை நேரத்தில் நடந்த இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

தொடர்ந்து காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறிய முதல்வர், அவர்களின் சிகிச்சை குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், கூறுகையில்”

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து பார்வையிட அனுப்பி வைத்தேன்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகைகள் வழங்கியதோடு அரசின் சார்பில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளேன் . படுகாயமடைந்த மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவர்களுடைய குடும்பத்தினரின் துயரத்தில் நானும் பங்கேற்கிறேன். தேர் திருவிழாவில் உயிரிழந்த மக்களை வைத்து சிலர் இந்த சோக நிகழ்வை அரசியலாக்க விரும்புகின்றனர்.

அது போன்றவர்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை இந்த விவகாரத்தில் அரசியல் செய்யவும் விரும்பவில்லை. மக்களுக்கு துன்பம் ஏற்படாமல் தடுப்பது தான் இந்த அரசின் நோக்கம். மக்கள் துயரத்தில் இருக்கும்போது அதில் பங்கு கொண்டு அரசு இருக்க வேண்டும் என்பதே என் இலக்கு. அதனை நோக்கியே பயணிக்கும் என்பதை சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன். மேலும் விபத்து நடந்தது எவ்வாறு என்பது குறித்து ஆய்வு நடக்கிறது”, கூறியுள்ளார்.

மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசின் நிவாரணமாக 5 லட்சம் ரூபாயும், திமுகவின் சார்பில் 2 லட்ச ரூபாயும் வாங்கியுள்ளேன். விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அரசின் சார்பில் 1 லட்ச ரூபாயும், லேசான காயத்துன் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.