கரீப் பருவத்திற்கான உர மானியம் 60,939 கோடி: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி, பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின் பேட்டி அளித்த ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் கூறியதாவது: ஒன்றிய உரத் துறை பரிந்துரைப்படி, கரீப் பருவத்தில் (2022 ஏப்ரல் முதல்  செப்டம்பர் வரை) பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கு ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியம் ரூ.60,939 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த நிதியாண்டில் ரூ.57,150 கோடி மானியம் வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் ஒரு மூட்டை டிஏபி உரத்திற்கான மானியம் ரூ.2,501 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் டிஏபி உரத்தை மூட்டை ஒன்று ரூ.1,350 என்ற விலையில் தொடர்ந்து வாங்கலாம். கடந்த 2020-21ல் இந்த மானியம் ரூ.512 வழங்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.2,501 ஆக அதிகரித்துள்ளது. உலக சந்தையில் உரங்களின் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், அந்த சுமையை விவசாயிகள் மீது சுமத்தாமல் இருக்க ஒன்றிய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.