மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள இகத்புரி கிராமத்தில் மெகுல் சோக்சிக்கு சொந்தமாக 100 ஏக்கர் பரப்பில் 50 மனைகள் அமைந்துள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.70 கோடி. இந்த மனைகளை நாசிக் மல்டி சர்வீஸஸ் என்ற நிறுவனம் மூலம் சோக்சி வாங்கியுள்ளார். அதற்கான பணம் மெகுல் சோக்சிக்கு சொந்தமான கீதாஞ்சலி நிறுவனத்திலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சொத்துக்களை 2020-ம் ஆண்டு வருமான வரித்துறை முடக்கியது. அதையெடுத்து வருமான வரி தீர்ப்பாயத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வருமான வரித்துறையின் நடவடிக்கையை எதிர்த்து மெகுல் சோக்சி தரப்பில் இதுவரையில் எவரும் முறையீடு செய்யவில்லை.
இந்நிலையில், மிக அரிதாகவே பயன்படுத்தப்படும் பினாமி சொத்து பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் இச்சொத்துகளை பறிமுதல் செய்ய தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பிறகு இம்மனைகள் ஏலம் விடப்படும் என்று தெரிகிறது.